'கறுப்புத் தங்கம்' (Crude Oil) –சில குறிப்புகள்

ஒரு சந்தேகம்! மத்தியக்கிழக்கு நாடுகளில் மட்டும்தான் கச்சா எண்ணெய் கிடைக்கிறதா? இத்தனைப் பெரிய பூமியில் வேறெங்கும் எண்ணெய் வளம் இல்லையா?
Crude Oil
Crude OilFreePik
Published on

வெளியே அணுசக்தி, ஆதிக்க நடவடிக்கைகள் என்று காரணம் சொல்லப்பட்டாலும், அமெரிக்காவின், ஈரான் மீதான தாக்குதலின் அடித்தளத்தில் இருப்பது எண்ணெய் அரசியல் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். அங்கே இன்னும் போர்ச்சத்தம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.


ஒரு சந்தேகம்! மத்தியக்கிழக்கு நாடுகளில் மட்டும்தான் கச்சா எண்ணெய் கிடைக்கிறதா? இத்தனைப் பெரிய பூமியில் வேறெங்கும் எண்ணெய் வளம் இல்லையா? 


பெட்ரோலிய எரிபொருட்களின் கதை, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரண்டாம் தொழிற்புரட்சிக் காலகட்டத்தில்தான் தொடங்குகிறது. தொழில் மயமாக்கலும், வாகனப் புரட்சியும் தொடங்கிய காலம் அது. அப்போதுதான் கச்சா எண்ணெய் உலகின் இன்றியமையாத மைய வளமாக மாறியது. அத்தகைய தொடக்கக் காலங்களில், புவியின் மேற்பரப்புக்கு அருகிலும், எளிதாகக் கிடைக்கும் பகுதிகளிலும் எண்ணெய்க்கான தேடுதல் வேட்டை நடந்தது. அப்போதுதான் மத்தியக் கிழக்கு நாடுகள் (Gulf Countries) சந்தையில் முன்னிலைக்கு வந்தன. இதன் விளைவாக ’எரிபொருள் என்றாலே அந்தப் பகுதியில்தான் அதிகம்’ என்ற ஒரு பொதுப்புரிதல் உருவானது. ஆனால், தொடர் தேடுதலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஓர் உண்மையைத் தெளிவாக்கியது. ’பெட்ரோலிய கச்சா எண்ணெய் உலகில் ஓர் இடத்தில் மட்டுமல்ல, பல இடங்களிலும், புவியின் பல அடுக்குகளிலும், பல தரங்களிலும் பரவியுள்ளது’ என்பதுதான் அது. ஆனால், அது முழுதுமாக மகிழத்தக்க செய்தியாகவும் இல்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

Crude oil
Crude oil

முதலாவது, கச்சா எண்ணெயின் தன்மை அதாவது தரம் முக்கியமான சிக்கலாக இருக்கிறது. பொதுவாக கச்சா எண்ணெயை உயவுத் தன்மையைப் பொறுத்து மென்மை (Light) மற்றும் கடினம் (Heavy), அதிலிருக்கும் சல்ஃபர் அளவைப் பொறுத்து குறைவான சல்ஃபர் (Sweet) மற்றும் அதிக சல்ஃபர் (Sour) எனப் பிரிக்கலாம். குறைவான சல்ஃபர் மற்றும் மென்மையான (Light and Sweet) கச்சா எண்ணெயே சிறப்பானதாகவும், எளிதில் சுத்திகரிப்பு செய்து அதிலிருக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களைப் பிரித்தெடுக்க ஏதுவாகவும் இருக்கின்றன. இவற்றைs சுத்திகரிப்பு செய்யும் வண்ணமே உலகெங்குமுள்ள பெரும்பான்மையான சுத்திகரிப்பு நிலையைங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன என்பது கூடுதல் தகவல். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, மத்தியக் கிழக்குப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் பெரும்பாலும் Light மற்றும் Relatively sweet தன்மையுடையதாக இருக்கிறது. இதனால், இங்கிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்தே, பெரும்பாலான நாடுகள், எரிபொருட்களை குறைந்த செலவில் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. இதுவே, மத்தியக்கிழக்கு நாடுகளை உலக எண்ணெய்ச் சந்தையின் முதுகெலும்பாக மாற்றியுள்ளது.

இரண்டாவது, வடிவம்! கனடா மற்றும் வெனிசுலா (Venezuela) போன்ற நாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய் தரத்தில் சுமாரானதாக இருக்கின்றன என்று பார்த்தால், கூடுதலாக அவை மிகக் கடினமான நிலையில், கிட்டத்தட்ட திண்ம நிலையில் கிடைக்கின்றன (oil sands அல்லது bitumen). இது திரவமான நிலையில் இல்லை என்பது ஒரு பிரச்சினை என்றால், மணல், கல் போன்ற கலப்பும் அதிகமாக உள்ளது. போலவே இதை மத்திய கிழக்கைப் போல கிணறுகள் மூலமாகவும் எடுக்க முடியாது. சுரங்கம் (Mining) அல்லது நீராவி அழுத்தம் (Steam injection) போன்ற சிக்கலான நுட்பங்கள் இதற்குத் தேவைப்படுகின்றன. கூடவே இதற்கான சிறப்பு சுத்திகரிப்பு ஆலைகளின் நுட்பங்களும் வேறானதாக இருக்கின்றன. அதனால், கனடா, வெனிசுலா போன்ற பகுதிகளில் உற்பத்தி நடக்கிறது என்றாலும், அது அதிக செலவும், அதிக ஆற்றலும் தேவைப்படக்கூடிய செயலாகவே உள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலும் எண்ணெய் வளங்கள் உள்ளன. அவை, மத்தியக் கிழக்கு கச்சா எண்ணெய் போல தரமானதாகவும் இல்லாமல், கனடா, வெனிசுலாவைப் போல மோசமானதாகவும் இல்லாமல் மத்தியத் தரமாக உள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் 2000களில் நடந்தது, அவர்களின் சொந்த உற்பத்திப் புரட்சி. அவர்கள் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டது பாறை இடுக்குகளில் சிக்கியிருக்கும் கச்சா எண்ணெய் (Shale oil) வடிவம். அதற்காக கிடைமட்டமாகத் தோண்டும் புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் கண்டடைந்த பின்னர்தான், அவர்கள் எரிபொருள் தேவையில் தன்னிறைவடையும் நிலை ஏற்பட்டது. 

Crude Oil
Crude OilFreePik

உலக உற்பத்தி என்று எடுத்துக்கொண்டால், மத்தியக்கிழக்கு நாடுகள் சுமார் 32 சதவீதத்தை தக்கவைத்திருக்கிறது, அமெரிக்கா சுமார் 16 சதவீதமும், ரஷ்யா சுமார் 12 சதவீத பங்களிப்பையும் தருகின்றன. கனடா சுமார் சுமார் 6 சதவீதத்தில் இருக்கிறது, ஆனால், உலகின் மிகப்பெரிய எரிபொருள் இருப்பைக் கொண்டுள்ள வெனிசுலா 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறது. இதுபோக ஆப்ரிக்க, தென்னமெரிக்க நாடுகளும் உலக உற்பத்தியில் தங்களுடைய குறிப்பிடத்தகுந்த பங்கைக் கொண்டுள்ளன. 

இவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது,சில விசயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. உலகெங்கும் வெவ்வேறு விதமான வடிவங்களில், தரத்தில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. அவற்றை எவ்வளவு எளிதானதாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்பதுதான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இப்போதும் வீரியமாக கச்சா எண்ணெய்க்கான தேடுதல்தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் நாடுகளுக்கிடையேயான ஒப்பீட்டு நிலை மாறிக்கொண்டேதான் இருக்கின்றன.ஆனால், எரிபொருளின் தேவை மற்றும் அதற்கேற்ற உற்பத்தி என்பதே,உலக அரசியலையும், பல நாடுகளின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக சுழன்று கொண்டிருக்கும் என்ற அடிப்படை உண்மை மட்டும் மாறப்போவதில்லை.

Puthuyugam
www.puthuyugam.com