கட்சித் தலைவர் Vs சினிமா ஹீரோ!

றினால் ஏரோப்ளேன், இறங்கினால் இசுசு கார் என்பதாகத்தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. அவர்களது கண்ணசைவு கட்டளையாகிறது. கொஞ்ச காலத்திலேயே, இந்த உலகம் அவர்களது ஆணைப்படியே சுழல்கிறது என்பதான போதை இருவருக்குமே தலைக்குள் மெல்ல மெல்ல ஏறத்தொடங்குகிறது!
Leader and Hero.
Leader and Hero. ChaGPT AI Image
Published on

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் சினிமா உச்ச நடிகர்கள் ஆகிய இரு துருவங்களுக்கும் பொதுவான புள்ளி ஒன்று உண்டு. அது, இவர்கள் இருவருமே, 24 மணி நேரமும் அவர்களைச் சுற்றியிருக்கும் அதிகார வளையத்துக்குள் இருக்கிறார்கள். இந்த அதிகார வளையத்திற்குள் அவர்கள்தான் மன்னர்கள். அவர்களை ஒப்பாரும், மிக்காரும் அங்கே யாருமில்லை. ஏறினால் ஏரோப்ளேன், இறங்கினால் இசுசு கார் என்பதாகத்தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. அவர்களது கண்ணசைவு கட்டளையாகிறது. கொஞ்ச காலத்திலேயே, இந்த உலகம் அவர்களது ஆணைப்படியே சுழல்கிறது என்பதான போதை இருவருக்குமே தலைக்குள் மெல்ல மெல்ல ஏறத்தொடங்குகிறது! 

அங்கே தொடங்குகிறது சிக்கல்! அங்கே வேறுபடுகிறது இருவரது சூழலும்! 

1. கட்சித் தலைவர்:

ஒரு கட்சி ஆட்சியில் இருக்கிறதோ இல்லையோ, அதன் தலைவர் அவரது வட்டத்துக்குள்தான் மன்னரே தவிர, வட்டத்துக்கு வெளியே அல்ல! வெளியே, அவர் எப்போதும் எதிர்க் கட்சிகளின், மீடியாக்களின் விமர்சனங்களுக்கு ஆளாகிக்கொண்டே இருப்பார். அதை அவரால் தவிர்க்கவே முடியாது. விமர்சனமாயின் தம்மைத் திருத்திக் கொண்டாக வேண்டும், குற்றச்சாட்டுகளாயின் தம்மை நிரூபித்தாக வேண்டும், அவதூறுகளாயினும் அவற்றை எதிர்கொண்டாக வேண்டும். மக்களின் பார்வை அவர்மீது விழுந்து கொண்டேதான் இருக்கும். அவற்றில் சொதப்பினாலும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர் மக்கள் மன்றத்துக்கு வந்தாக வேண்டும். அதுவரை தன்னை மன்னராக நினைத்துக் கொண்டிருந்தவரை வீதிக்கு இழுத்து வந்து மக்களின் முன்னால் நிற்க வைக்கும் வலிமை தேர்தலுக்கு உண்டு. அங்கே மக்களின் வியர்வையையும், கண்ணீரையும் அருகிலிருந்து அவர் பார்த்தாக வேண்டும், புரிந்து கொண்டாக வேண்டும்.

Politician
PoliticianChatGPT AI Image

ஊர் ஊராக, தெருத் தெருவாக, மழையிலும், வெயிலிலும் சுற்றிச்சுழன்றாக வேண்டும். அப்போது மழையிலும் வியர்க்கும் என்பதை உணர்வார். மதிய வெயில் மண்டைக்குள் இறங்கினால் எப்படி இருக்கும் என்பதை அனுபவிப்பார். ஒரு வேளையாவது உணவு நேரம் தள்ளிப்போகும், பசி என்பதை உணர்வார். பேசிப்பேசி தொண்டை வறண்டு, குரல் உடைந்து போகும். தன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், தனது வாக்கு சதவீத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்து வார்த்தையை அளந்து பேசுவார். ஜனநாயகம் தன் பணியாளனுக்கு, இப்படித்தான் பாடத்தைக் கற்பிக்கும். அவர் அவர்தம் கட்சிக்குத்தான் தலைவர், ஆனால், மக்களைப் பொறுத்தவரை பணியாளர்தான் என்பதை உணர வைக்கும். 

2. சினிமா ஹீரோ

ஆனால், இது மாதிரியான எந்தத் தொந்தரவும் ஒரு சினிமா நட்சத்திரத்துக்குக் கிடையாது. உள்வட்டத்திலிருக்கும் அதே மன்னருக்கான உபசரிப்புதான் வெளியேயும் அவருக்குக் கிடைக்கும். வெளியே வந்தால் மக்கள் அவரைக்காண வெள்ளமாய்த் திரள்வார்கள். மக்களின் துன்பங்களை, சமூக அறிவியலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. தோல்வியடையும் சினிமாக்களைக் கூட, புள்ளி விவரங்களால் மறைத்துவிடலாம். டைரக்டர் சொதப்பிவிட்டார், தயாரிப்பாளர்கள் சரியான விளம்பரம் செய்யவில்லை, சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யவில்லை என்று காரணங்கள் சொல்லிக்கொள்ளலாம். கடைசியாக, ’படம் ஆவரேஜ் தான் சார், ஆனா கலெக்ஷன் ஓப்பனிங்ல அடிச்சு தூக்கிட்டோம்’ என்றும் பொய்யைச் சொல்லி இமேஜுக்கு சேதாரமில்லாது பார்த்துக்கொள்ளலாம். மீடியாவும் மயிலிறகால் வருடும்.

Cinema Star
Cinema StarChatGPT AI Image

இந்த உச்சநிலையில், ராஜ உபசரிப்பின் போதையை தவிர்ப்பது, அத்தனை எளிதாக இருப்பதில்லை. ரஜினிகாந்த் போன்ற சிலர் அதிலிருந்து விடுபட முயற்சிக்கிறார்கள், வந்த பாதையை நினைவூட்டிக் கொள்கிறார்கள். தாம் செய்த தவறுகளை, தம் உடல்நிலையை, தம் உண்மையான தோற்றத்தை இமேஜ் பார்க்காமல், பொதுவெளியில் வெளிப்படையாகப் பகிர்கிறார்கள். தம்மை அறியாத மக்கள் வாழும் இமயமலை போன்ற பகுதிக்குச் சென்று சில நாட்களைக் வாழ்ந்து பார்க்கிறார்கள். ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியப்படுவதுமில்லை. அந்த போதை நிலையில், அதிகாரத்தை அனுபவித்தாக வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு எழுவதிலும் ஆச்சரியமில்லை. அதற்கு நம்மிடையே ஏராளமான உதாரணங்கள் உள்ளன. 

அப்படியானால், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பாரிலானுங் கெடும். (குறள் 448) 

ஜனநாயகத்தில், ஒரு கட்சித் தலைவருக்கு ஏராளமான இடிப்பாரைகள் இருக்கின்றன. ஆனால், வள்ளுவர் சொன்ன அந்த ‘ஏமரா மன்னன்’ (பாதுகாப்பற்ற மன்னன்) நிலையில் இருப்பவர்கள் இன்றைய சினிமா ஹீரோக்களே. தன்னைச் சுற்றி ‘எகோ சேம்பர்’ (Echo Chamber) ஒன்றை உருவாக்கிக் கொண்டு, எதார்த்த வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வேறான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களது ரசிகர் மன்றங்கள் வெறும் கைதட்டும் இயந்திரங்களாக மட்டுமே இருக்கின்றன. 

பதவியோ அல்லது புகழோ, எப்போது அது ஒருவரை நிஜ மனிதர்களிடம் இருந்து பிரிக்கிறதோ, அப்போது அவர் ஒரு பிம்பச் சிறைக்குள் அடைபடுகிறார். கட்சித் தலைவர்கள் விமர்சனங்கள் எனும் சன்னல்கள் வழியே வெளி உலகைப் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், சினிமா ஹீரோக்களோ தங்களைச் சுற்றியுள்ள கூட்டத்தை நம்பி, அரியணைக் கனவுகளைக் காண்கிறார்கள். இறுதியில் அந்தச் சிறை உடைபடும்போது, கனவுகளும் சரிந்துவிடுகின்றன. மாறாக, சுயநல நோக்கின்றி, சமூக அறிவியற்கல்வியை முன்னிறுத்தி, தம்மிடமிருக்கும் போதாமைகளைச் சரி செய்து, உழைப்பையும், உண்மையையும் நம்பி மக்களிடம் போனால், அரியணை யாருக்கும் சாத்தியமானதுதான். அங்கே, வக்கீல், வாட்ச்மேன், நடிகர், பால்காரர், டாக்டர் என்ற எந்த வித்தியாசமும் கிடையாது.

Puthuyugam
www.puthuyugam.com