ஒரு காலத்தில், ஐந்து நாட்கள் உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்தோம். பின்னர், அதை வெவ்வேறு வடிவங்களில் சுருக்கி, இப்போது 20 ஓவர் கிரிக்கெட்டில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம். முன்பு மூன்று மணிநேரம் சினிமாவை நிதானமாகப் பார்த்தோம், இன்று சினிமாக்கள் ஒன்றே முக்கால் மணி நேரத்தில், நமக்கு ஒரு கதையை சொல்லி முடிப்பதற்குள் திணறிப் போகின்றன. ஒரே ஒரு நிமிடம் ஓடும் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவைக் கூட முழுமையாகப் பார்க்க முடியாமல், அடுத்தடுத்த வீடியோக்களுக்கு 'ஸ்வைப்' (Swipe) செய்து கொண்டேயிருக்கிறோம்.
இந்த வேகமும், மைக்ரோ வடிவம் கொண்ட படைப்புகளும் (Short form Contents) நம்மை எங்கே கொண்டு செல்லப் போகின்றன?
இவை நமக்கு மிகவும் பிடித்துப் போவதற்கான காரணம் நமக்கு நன்றாகத் தெரியும். டோபமைன் வெள்ளம் (The Dopamine Hit)! ஒரு பெரும் செயலைச் செய்துவிட்டு, அதிலிருந்து கிடைக்கும் வெற்றியால் மட்டுமே டோபமைன் கிளர்ச்சி உருவாவதில்லை. ஒரு குழந்தையின் புன்னகை, ஒரு குழந்தையின் மழலை நம்முள் அப்படியொரு டோபமைன் துளியை உருவாக்குகிறது. நாம் எல்லோருமே உண்மையில் டோபமைன் அடிமைகள்தான்! அதுவேதான் இந்தத் தொழில்நுட்பத்துக்கு நம் தலையில் மிளகாய் அரைப்பதற்கு வசதியாகவும் ஆகியிருக்கிறது.
கன்னிமாரா நூலகத்தின் நூற்றுக்கணக்கான ரேக்குகளுக்கு ஊடாக தேவனின் கதை ஒன்றைத் தேடுகிறீர்கள் எனும் நிலையை நினைத்துப்பாருங்கள். அந்த நூல் நம் கைக்குச் சிக்கும் நேரம் ஏற்படும் உற்சாகம், நிறைவுதான் உண்மையான டோபமைனால் ஏற்படுவது. அதைத்தான் இப்போது இந்த ரீல்ஸ்கள் மலினப்படுத்தி வைத்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நாம் ஒரு புதிய வீடியோவைப் பார்க்கும்போதும், இதெல்லாம் என்னுடையது, இதிலிருந்து நான் இப்போது எனக்கானதை தேடிக் கொண்டிருக்கிறேன் எனும் சைகாலஜிகல் விளையாட்டை நாம் ஆடுகிறோம். அடுத்த வீடியோவில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் (Curiosity), நம்மைத் தொடர்ந்து ஸ்வைப் செய்யத் தூண்டுகிறது.
இதன் விளைவுகள் கவலை தரத் தக்கதாக இருக்கின்றன. மிக எளிதாகக் கிடைக்கும் இந்த 'சிறு மகிழ்ச்சிகளுக்கு' நாம் அடிமையாகிறோம். இதனால், ஆழமான சிந்தனை தேவைப்படும் வாசிப்பு அல்லது பிற வேலைகளில் நம்மால் அதிக நேரம் கவனம் செலுத்த முடிவதில்லை. நமது சராசரி கவன வீச்சு (Attention Span) கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு குறைந்திருக்கிறது.
ஒரு நிமிடத்திற்குள் ஒரு நகைச்சுவை, ஒரு சோகம், ஒரு வியப்பு, ஒரு கவலை என மூளைக்குள் வெவ்வேறு உணர்ச்சிகள் திணிக்கப்படும்போது, உணர்வுகளைப் பிரித்து, அதை ஏற்கும் மிக முக்கியமான மனித குணத்தை குலைக்கிறோம். ஒரு ஹீரோவின் துன்பத்தை, அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நாம் நின்று நிதானமாக உள்வாங்கிக் கொண்டால்தான், அவன் கிளைமாக்ஸில் எதிரியைத் துணிந்து எதிர்த்து நிற்கும் போது நாம் உற்சாகம் கொள்ள முடியும்.
10 வினாடிகளில் ஒரு வீடியோ சுவாரசியமாக இல்லையென்றால், உடனடியாக அதைத் தள்ளிவிடுகிறோம். இந்தப் 'பொறுமையின்மை' நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. ஒரு நீண்ட உரையாடலோ அல்லது விவாதமோ, பெற்றோர், பெரியோரின் முக்கியமான அனுபவப் பகிர்வோ நமக்குச் சலிப்பைத் தருகிறது. ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் மூலமாகவும் நாம் பல தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம்தான். ஆனால் அவை அனைத்தும் 'மேலோட்டமானவை'. ஒரு சிக்கலான அரசியல் நிகழ்வையோ அல்லது அறிவியல் கருத்தையோ 30 வினாடிகளில் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான நியாயமான உழைப்பை நாம் கொடுத்தாக வேண்டும்.
இந்தக் கலாச்சாரத்திலிருந்து முற்றிலுமாக நாம் தப்பிவிட முடியாதுதான், ஆனால், அதன் பிடியிலிருந்து நம்மைக் காத்துக் (The Digital Detox) கொள்ள சில வழிகள் உள்ளன.
1. சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று நேரம் ஒதுக்குங்கள்.
2. வார இறுதியில் ஓரிரு மணி நேரம், செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு புத்தகம் வாசியுங்கள். அது கவனத்தை மீண்டும் ஒருங்கிணைக்க உதவும்.
3. காத்திருக்கும் நேரங்களில் உடனே போனை எடுக்காமல், சுற்றியுள்ள மனிதர்களையும் இயற்கையையும் கவனிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். ஒரு தியேட்டர் காத்திருப்பில், நடக்கக் கற்றுக்கொண்டு தன் அன்னையின் பிடியில் சிக்காமல் ஓட முயலும் குழந்தையை ரசியுங்கள். ஒரு மருத்துவமனைக் காத்திருப்பில், அங்கிருக்கும் முகங்களில் தெரியும், கவலைகளைப் படிக்க முயலுங்கள், முடியாவிட்டால் குறைந்த பட்சம், நர்ஸுகளையாவது வேடிக்கை பாருங்கள்.
நமது திறன்களும், உணர்வுகளும், சிந்தனைகளும் மழுங்கடிக்கப்படும் போதுதான் நாம் பிறருக்கு அடிமையாகிறோம். முன்பு மன்னராட்சிகள் செழித்தோங்கியிருந்ததன் அடிப்படைக் காரணமே இதுதான். பின்னர், நூற்றாண்டுகளாகப் கற்று, மீண்டு, போராடி நாம் மக்களாட்சியைக் கொண்டு வந்தோம். மீண்டும் அவற்றையெல்லாம் இழப்போமேயானால், எங்கிருந்தோ சில பெரு நிறுவனங்கள்தான், திரை மறைவில் நம்மை ஆளும் நிலைமை ஏற்படும். தொழில்நுட்பம் நமக்காகத்தான் உருவாக்கப்பட்டதே, நாம் அவற்றுக்காக உருவானவர்கள் அல்லர்.