இரவு உணவு முடிந்து, நிம்மதியாக ஒரு படம் பார்க்கலாம் என்று நெட்பிளிக்ஸ் அல்லது ஹாட்ஸ்டார் அல்லது யூடியூப் தளத்தைத் திறக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் முன் ஆயிரக்கணக்கான படங்கள் அணிவகுக்கின்றன. இந்தத் தொடர் நன்றாக இருக்குமா? அந்தத் திரைப்படம் சுவாரசியமா இருக்குமா? என்று 'ஸ்க்ரோல்' செய்துகொண்டே இருக்கிறோம். ட்ரைலர்களைப் பார்க்கிறோம், ரேட்டிங்குகளைச் சரிபார்க்க கூகுளுக்குப் போகிறோம். சென்ற வருடத்தின் டாப் 10, சென்ற மாதத்தின் டாப் 10, சென்ற வாரத்தின் டாப் 10 என எதெதையோ முயற்சித்துப் பார்க்கிறோம். அதற்கே, ஒரு மணி நேரம் ஓடிவிடுகிறது. இறுதியில், எதையுமே முடிவு செய்ய முடியாமல், ஒரு சின்ன மனச்சோர்வுடன் போனையோ, டிவியையோ அணைத்து வைத்துவிட்டுத் தூங்கப் போய்விடுகிறோம்.
எப்படியோ, தூங்கினால் சரிதானே என்கிறீர்களா? அதென்னவோ சரிதான். ஆனால், பிரச்சினை சினிமா பார்ப்பதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை.
சினிமா பார்ப்பதற்குச் செலவிடும் நேரத்தை விட, என்ன சினிமா பார்க்கலாம் என்று தேடுவதற்கு அதிக நேரம் செலவழிக்கும் இந்த விசித்திரமான நிலைதான் 'டிசிஷன் பேரலிசிஸ்' (Decision Paralysis) எனப்படுகிறது. நம் வீட்டில் பெண்கள், சமைக்கும் நேரத்தை விட, என்ன சமைப்பது என்று முடிவு செய்வதற்குத்தான், அதிக நேரத்தைச் செலவிட்டு, ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாகிறார்கள் என்பதைக் கவனித்திருப்போம். ஒரு விசேஷ தினங்களில் உடை எடுக்க, ஜவுளிக் கடைகளுக்குப் போனால், நம் முன்னாலிருக்கும் ஏராளமான உடைகளில் எது தமக்கானது என்று ஆய்ந்து அறிவதற்குள் இப்படியான நிலைக்குப் போய்விடுகிறோம். இப்படிப் பலவும் இதற்குள்தான் வருகிறது. நமக்கு ஏனிந்த அலைக்கழிப்பு?
முன்பெல்லாம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில், டிவியில் என்ன படம் போடுகிறார்களோ, அதைத்தான் மொத்தக் குடும்பம் மட்டுமல்லாது, மொத்தத் தெருவே ஒன்றாக உட்கார்ந்து மகிழ்ச்சியாகப் பார்ப்பார்கள். சிவாஜி நடித்து பல தடவைகள் அதே சேனலில் போடப்பட்ட ‘வணங்கா முடி’ படமேயானாலும் கூட அதுதான் நிலைமை. ஏன் அப்படி? என்று கேட்டால் அங்கே, 'சாய்ஸ்' குறைவு, அதனால் இருப்பதை எடுத்துக்கொண்டோம் எனும் திருப்தி அதிகம். ஆனால், இன்று நம் முன் சினிமாக்கள் மலைபோல குவிந்துக்கிடக்கின்றன. தமிழ் மட்டுமல்ல, உலகின் அத்தனை மொழிகளிலிருந்தும், கமர்ஷியலான, கலைத்தன்மையான, அதி சிறந்த சினிமாக்கள் நம் ஒரு கிளிக்குக்காக காத்திருக்கின்றன. இப்படி மிக அதிகமான தேர்வுகள் நம் முன் இருக்கும்போது, ’சிறந்ததைத் தேர்ந்தெடுத்து விட்டோமா?’ என்ற சந்தேகம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ’இதைவிட அது நன்றாக இருந்திருக்குமோ?’ என்ற எண்ணம், நமது தற்காலிக மகிழ்ச்சியையும் குலைத்துப் போடுகிறது.
இன்னொரு காரணம், நமது முடிவெடுக்கும் திறன். மூளையினால், ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான முடிவுகளைத்தான் எடுக்க முடியும் (Decision Fatigue). காலையில் என்ன உடை உடுத்துவது என்பதில் தொடங்கி, பைக் டயர்களில் காற்றை இன்று சோதிப்போமா, நாளைக்குச் செய்துகொள்ளலாமா என்று பயணித்து, வீடு, அலுவலகம், பர்சனல், வேலை என ஆயிரம் முடிவுகளை எடுத்து, இறுதியில் இரவு உணவு என்ன என்பது வரை முடிவெடுத்து சோர்வடைந்திருக்கும் மூளையின் முன்னால், படுக்கப்போகும் முன்பாக 'ஆயிரம் சினிமாக்கள்' எனும் பிரம்மாண்டத்தை வைத்தால் என்னவாகும்? எதையுமே தேர்ந்தெடுக்காமல் தவிர்ப்பதுதான் மூளைக்கு எளிதான வழியாகத் தெரியும்.
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
சினிமா, உணவு, உடைகள் போன்ற எளிமையான விசயங்களுக்கு, உங்கள் முன்னாலிருக்கும் எளிய தரவுகளைக் கணக்கில் கொள்ளுங்கள். அல்காரிதம் காட்டும் ஆயிரக்கணக்கான பரிந்துரைகளை விட, உங்களுக்குப் பிடித்த ஒரு நண்பரோ அல்லது ஒரு சினிமா விமர்சகரோ சொன்ன ஒரு படத்தை மட்டும் தேர்ந்தெடுங்கள். 'மிகச்சிறந்த' (The Best) என்ற அளவுகோலை விட, 'போதுமான' (Good Enough) என்ற அளவுகோலுக்கு மாறுங்கள். அடுத்த 5 நிமிடத்துக்குள் ஒரு சினிமா, அடுத்த அரை மணி நேரத்துக்குள் ஒரு சமையல் என்று உங்களுக்கு நீங்களே ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது தேடுதலுக்கானது மட்டுமல்ல, அனுபவிப்பதற்குமானது. ஒவ்வொரு முறையும் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, சில நேரங்களில் 'ஏதோ ஒரு முடிவை' எடுப்பதே சிறந்தது. முடிவில்லாமல் தேடிக்கொண்டே இருந்தால், காலம் நம்மைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், ஆயிரம் கதவுகள் நம் முன்னால் இருப்பதால், எதைத் திறப்பது என்ற குழப்பத்தில் நாம் வாசலிலேயே நின்றுவிடக் கூடாது. தயங்காமல், ஏதோ ஒன்றைத் திறந்து உள்ளே நுழையுங்கள், அங்கே ஒரு புதிய அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கலாம்!