தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதிகளில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கு நீண்ட காலமாக பட்டா வழங்கப்படாமலிருக்கிறது. சமீபத்தில், அங்குள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அதற்காகப் போராட்டம் நடத்தினார்கள். நாமும் உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள, நம்மில் சிலர் டிவிட்டரில் #We_Stand_with_Chinnamanur என்று ஹேஷ்டேக் செய்திருக்கலாம். கம்யூனிஸ்ட் தோழர்கள் செய்தது களப்போராட்டம், நாம் செய்தது விரல்நுனிப் போராட்டம்!
கரூர் நெரிசலில் குழந்தைகள் இறந்து போனது போன்ற ஒரு விபத்தோ, பொள்ளாச்சியில் நடந்தது போன்ற ஒரு பாலியல் குற்றமோ, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்ததை போன்ற ஒரு பயங்கரவாதச் செயலோ பொதுவெளியில் செய்தியாகப் பரவும் போது, அவை நம்மை பதைபதைக்க வைக்கின்றன. நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைக்கிறோம். நமது முதல் எதிர்வினையாக உடனே ஒரு 'ஹேஷ்டேக்' (#JusticeFor...) உருவாக்கி அதை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறோம். அல்லது நம்மைப் போன்ற யாரோ உருவாக்கிய ஹேஷ்டேக்குகளை மாய்ந்து மாய்ந்து பார்வேர்ட் செய்கிறோம். இதைத்தான் உளவியலாளர்கள் 'ஸ்லாக்டிவிசம்' (Slacktivism) என்கிறார்கள். 'Slacker' (சோம்பேறி) மற்றும் 'Activism' (போராட்டம்) ஆகிய இரண்டு சொற்களின் கலவை இது. அதாவது, இருந்த இடத்திலிருந்தே 'லைக்' அல்லது 'ஷேர்' அல்லது ‘ஃபார்வெர்ட்’ செய்வதன் மூலம் நாம் ஒரு சமூகக் கடமையைச் செய்துவிட்டதாக நம்பும் மனநிலை.
நிச்சயமாக இது தவறான செயல் அல்ல! ஒரு தகவலை இந்தச் சமூகத்தில் பரப்புவதில் இணையத்திற்குப் மிகப்பெரிய பங்குண்டு. இதுதான் பல நேரங்களில், ஒரு உள்ளூர் பிரச்சினையை உலக அளவுக்கு கொண்டு செல்ல உதவுகின்றன. அரசும், அதிகாரிகளும், ஊடகங்களும், அதைப் பற்றிப் பேசியாக வேண்டிய, செயலாற்றிட வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகின்றன. அது அவசியம்தான், நிஜம்தான். ஆனால், தகவலைப் பரப்புவது என்பது ஒரு 'தொடக்கம்' மட்டுமே, அதுவே 'முடிவு' அல்ல. ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது வீதியில் இறங்கி அதிகாரத்தைக் கேள்வி கேட்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவுவதிலும், நியாயம் பெறுவதிலும்தான் இருக்கிறது.
மாறாக, ஸ்லாக்டிவிசம் பெரும்பாலும் எப்படி இயங்குகிறது?
’நான் ஒரு நல்ல மனிதன், நான் இதற்காகக் குரல் கொடுத்துவிட்டேன்’ என்ற ஒரு போலித் திருப்தியை நமக்குத் தருகிறது. உணர்வுப் பூர்வமாக நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். இந்தத் திருப்தி வந்தவுடன், அந்தப் பிரச்சினைக்காக நிஜத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்ற வேகம் குறைந்துவிடுகிறது. இந்த நிறைவால், சரி, அடுத்து வேறு ஏதாவது நடந்திருக்கிறதா? அதற்கு என் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமா என்று கேட்கும் நிலைக்குப் போய்விடுகிறோம். இந்த மனநிலைதான் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு மிகப்பெரிய வசதியாக இருக்கிறது. ’இன்னும் இரண்டு நாள் டிரெண்ட் செய்வார்கள், பிறகு மறந்துவிடுவார்கள்’ என்ற தைரியத்தை அவர்களுக்குத் தருகிறது.
அவர்கள் நினைப்பது போலவே, பெரும்பாலான நேரங்களில், ஒரு டிரெண்ட் 24 மணி நேரத்தில் மறைந்தும்போகிறது. நேற்று நாம் கோபப்பட்ட விஷயம், இன்று நமக்கு நினைவில் கூட இருப்பதில்லை. ஓரிரு நாட்களிலேயே நாமும் அடுத்த விசயத்துக்குத் தாவி விடுகிறோம். நமது அறச்சீற்றத்துக்கு, ஒரு நீர்க்குமிழியை விட ஆயுள் குறைவாக இருக்கிறது. உண்மையான மாற்றம் என்பது நீண்டகால முயற்சி. அது தொடர்ச்சியான கவனம், ஈடுபாடு, மற்றும் செயலைக் கோருகிறது. ஆனால், Slacktivism அந்த முதல் படியிலேயே நம்மை நிறுத்திவிடுகிறது. ரத்ததானம் தேவை என்று ஒரு போஸ்ட்டைப் பகிரும் நூறு பேரில், ஒருவராவது நேரில் சென்று ரத்தம் கொடுக்கிறாரா என்பதுதான் கேள்வி.
இணையம் என்பது ஓர் அறிவிப்புப் பலகை (Notice Board) மட்டுமே, அது நிஜமான களம் அல்ல! அந்தத் திரையைத் தாண்டி வெளியே வாருங்கள். உங்கள் குரல் களத்திலும் ஒலிக்கட்டும். போராளிகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை, நம்மிலிருந்துதான் உருவாகிறார்கள். உங்கள் பகுதியில் நடக்கும் சிறிய மக்கள் பிரச்சினைகளுக்காவது நேரில் சென்று ஆதரவு கொடுங்கள். அதைச் செய்ய இயலாதவர்கள், ஒரு விஷயம் ட்ரெண்டில் இருக்கும்போது மட்டும் அதைப் பற்றிப் பேசாமல், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் வரை அதைப் பின்தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருங்கள், அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருங்கள், அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருங்கள். அது களத்திலிருப்போருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் ஒரு சின்ன ஆறுதலையாவது கொடுக்கட்டும்.