நார்சிசிஸம் (Narcissism) என்ற சொல்லுக்கு, ’எந்தத் தகுதியும் இல்லாத நிலையிலும், தான் பிறரைவிடச் சிறந்தவன் என்று நினைக்கக்கூடிய, தன் முனைப்புக் கொண்ட குணம்’ என்று பொருள். என்னிடம் அடிக்கடி விளையாட்டுக் காட்டக்கூடிய ஒரு சொல் இது. புத்தகங்களையோ, இணையக் கட்டுரைகளையோ வாசித்துக் கொண்டிருக்கும் போது அதில் ‘நார்சிசிஸ்டிக்’ குணம் என்ற சொல் வந்துவிட்டால் போதும். எனக்கு அதன் பொருள் நினைவில் வராது. அது பயன்படுத்தப்பட்டிருக்கும் இடத்தை வைத்துக்கூட பொருளை ஊகிக்க முனையாமல், மீண்டும் மீண்டும் அதை, கூகுள் செய்து பார்த்துக் கொள்வேன். ஏன் இந்தச் சொல் என் நினைவில் தங்குவதே இல்லை?
இந்தக் கேள்வி இன்றைய 'ஸ்மார்ட்' தலைமுறையின் மிக முக்கியமான ஓர் உளவியல் சிக்கலைத் தொடுகிறது. கூகுள் (Google) என்பது ஒரு மாபெரும் தரவுத்தளம் (Database), ஆனால் அறிவு (Knowledge) என்பது அந்தத் தரவுகளை நாம் எப்படிப் புரிந்துகொண்டு செயல்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
நவீன உலகில் நாம் ஒரு மாயையில் வாழ்கிறோம். ஒரு தகவலைத் தேடிக் கண்டுபிடிக்கும் நமது வேகம், அந்தத் தகவலைப் பற்றிய 'அறிவு' நமக்கு இருப்பதாக ஒரு போலி பிம்பத்தை உருவாக்குகிறது. தகவல்கள் (Information) என்பன வெறும் தரவுகள். உதாரணத்திற்கு, ’அண்டார்டிகாவின் வெப்பநிலை -80°C’ என்பது ஒரு தகவல். இது கூகுளில் ஒரு நொடியில் நமக்குக் கிடைத்துவிடும். ஆனால், அறிவு (Knowledge) என்பது அந்தத் தகவலை அனுபவத்தோடும், பிற தகவல்களோடும் இணைத்துப் பகுத்துப் பார்ப்பது. ’அவ்வளவு குளிரில் மனித உடல் மற்றும் மனதின் வேதியியல் எப்படி இயங்குகிறது?’ என்பது போல சூழலுக்கேற்ப அந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கும் திறனாகும்.
கூகுள் தகவலைத் தரும், ஆனால் அந்தத் தகவலை அறிவாக மாற்றும் சிந்தனைத் திறனைத் தராது. அப்படியான, சிந்தனைத் திறன் இருக்கும் போது, தகவல்களும் நம் விரல் நுனியில் கிடைக்கும் போது, அவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டிய அவசியமில்லை அல்லவா? சரிதான்.
சுருக்கமாகச் சொன்னால், இயல்பிலேயே ’ஒரு தகவல் எளிதாகக் கிடைக்கும்’ என்று நமது மூளை நம்பத் தொடங்கிவிட்டால், அந்தத் தகவலை நினைவில் வைத்துக்கொள்ளும் முயற்சியை மூளை கைவிட்டுவிடுகிறது. இதுவே 'டிஜிட்டல் மறதி' (Digital Amnesia) எனப்படுகிறது. முன்பெல்லாம் நமது நெருங்கிய நண்பர்களின் தொலைபேசி எண்கள், பிறந்த தேதிகள், முகவரிகள் என அனைத்தையும் மூளையிலேயே சேமித்து வைத்திருந்தோம். புத்தகங்களில் படித்தத் தகவல்களை நினைவில் வைத்திருந்தோம். கொரமண்டல் எக்ஸ்ப்ரஸ் ரயிலின் எண் என்ன, அது எப்போது சென்னையிலிருந்து கிளம்பும், எப்போது ஹவுராவை சென்றடையும், நடுவில் எந்த ஸ்டேஷனில் என்ன உணவு கிடைக்கும் என்பது வரை அத்துப்படியாக என் நினைவில் இருந்தன. ஆனால், இன்று இந்த எல்லா வேலைகளையும் ஸ்மார்ட்போன்கள் செய்கின்றன.
காஸ்பெர்ஸ்கி (Kaspersky) எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில், 90% மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் பெற இணையத்தையே சார்ந்திருக்கிறார்கள் என்றும், அதில் 50% பேர் அந்தத் தகவலைத் தேடி எடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே மறந்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஒரு தகவலைப் படிக்கும்போது, அந்தத் தகவல் என்ன? (What is the info?) என்பதை நினைவில் வைப்பதற்குப் பதிலாக, ’அந்தத் தகவல் எங்கே கிடைக்கும்?’ (Where to find it?) என்பதை மட்டுமே மூளை நினைவில் கொள்கிறது. உதாரணத்திற்கு, ஒரு கொரமண்டலை நீ நினைவில் வைத்துக்கொள்ள ஏன் நினைவாற்றலை வீணாக்குகிறாய், இந்தியாவின் அனைத்து ரயில்கள் குறித்த அனைத்துத் தகவலும், உனக்கு ஐஆர்சிடிசி எனும் ஒரே இடத்தில் கிடைக்கும் போது? என்று நம் மூளை தன்னைத் தானே கேள்வி கேட்டு அப்டேட் செய்துகொள்கிறது. தகவல்களை வேகமாகவும், சுருக்கமாகவும் நாம் நம் நினைவில் பதிந்து கொள்ளத்தக்க, அப்படியான பரிணாம வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம் நாம். அப்படியான அவசியமற்ற தகவல்களை வைக்கும் இடத்தைச் சிக்கலான விஷயங்களைச் சிந்திக்கவும், படைப்பாற்றலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்லதுதான் இல்லையா? எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றுகிறது அல்லவா?
ஆனால், ஒரு சிக்கல் இருக்கிறது!
இந்தப் பிரச்சினையில் நாம் ஆதாரமாகக் கருதும், நமது ‘சிந்திக்கும் திறனே’ நம் சிறு வயதிலிருந்து நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உருவானதுதான். அதனால்தான், நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக, முதிர்ச்சியில் வேறுபாடு கொண்டவர்களாக இருக்கிறோம். மூளையில் ஒரு தகவல் பதியப்படும்போதுதான் (Memorization), அது ஏற்கனவே உள்ள தகவல்களுடன் இணைந்து புதிய யோசனைகளை உருவாக்கும். தகவலே மூளைக்குள் இல்லையென்றால், அங்கே புதிய சிந்தனை பிறக்க வாய்ப்பே இல்லை. ஒரு குழந்தையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளும்போது அது நமது ஆழ்மன நினைவகத்திற்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் அது அறிவாக மாறும். தகவல்கள், குவியும் போதுதான் நாம் மேலும் மேலும் அதை பிராசஸிங் செய்கிறோம். அதுவே நம் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது.
துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை! -நீர் நமக்கான உணவை உருவாக்கவும் செய்கிறது, நீரே நமக்கான உணவாகவும் செய்கிறது. அது போலவே தகவல்களை பகுப்பாய்வு செய்யும் சிந்தனைத் திறனையே தகவல்கள்தான் உருவாக்குகின்றன.
அப்டியானால், நாம் என்ன செய்ய வேண்டும்?
கூகுள் தரும் தகவல்களை அப்படியே ஏற்காமல், அதன் மீது ’ஏன்? எதற்கு? எப்படி?’ என்பதான கேள்விகளைக் கேளுங்கள். ரசித்தக் கவிதைகள், அவசியமான சூத்திரங்கள் அல்லது வரலாற்று நிகழ்வுகளை நினைவில் வைக்க முயலுங்கள், அது நமது மூளையை வலுப்படுத்தும். மெமரி சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். ஒரு நாளில் சில மணி நேரம் எந்தத் தேடலும் இல்லாமல், உங்கள் சொந்த யோசனைகளை மட்டும் கவனியுங்கள். மாதத்துக்கு ஒரு நாள் உங்கள் போனில் இணையத்தைத் தவிருங்கள். கூகுளுக்கு எல்லாம் தெரியும், ஆனால் அந்தத் தகவலைக் கொண்டு ’என்ன செய்ய வேண்டும்’ என்பது உங்களுக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும்.