சூரியனைத் தோற்கடித்த ஓர் ஆச்சர்ய நகரம்! #CooberPedy

ஆஸ்திரேலியாவின் வறண்ட உள்நாட்டுப் பகுதியில் அமைந்துள்ள கூபர் பெடி (Coober Pedy) என்ற நகரம், மனிதன் இயற்கையுடன் எப்படி சமரசம் செய்து கொள்கிறான் என்பதற்கான ஒரு வித்தியாசமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
Coober Pedy
Coober PedyWiki
Published on

இன்று மட்ட மத்தியான வெயிலில், ஒரு மணி நேரமாக நின்றவாறே, ஒரு துக்க நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஒரு வற்றலை என் தலையில் வைத்திருந்தால், அது பொரிந்திருக்கும் போல! இன்னும் மார்ச் மாதமே முடியவில்லை. அதற்குள் இப்படி. கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே, எந்தப் பொந்துக்குள் போய் புகுந்து கொள்ளலாம் என்று தோன்றிவிட்டது. 

பொதுவாக நாம் இயற்கையை வெல்கிறோம். அதை நமக்காகப் பயன்படுத்துகிறோம். நமது தேவைக்கேற்ப அதை வளைக்க முயற்சிக்கிறோம். சில விநோதமான சூழ்நிலைகளில், இயற்கையோடு போராட முடியாமல் போனால், விட்டு விலகிச் சென்றுவிடுகிறோம். ஆனால், மிக அரிதாக நாம் நம்மை மாற்றிக் கொள்ளவும் முயலுகிறோம். ஆஸ்திரேலியாவின் வறண்ட உள்நாட்டுப் பகுதியில் அமைந்துள்ள கூபர் பெடி (Coober Pedy) என்ற நகரம், மனிதன் இயற்கையுடன் எப்படி சமரசம் செய்து கொள்கிறான் என்பதற்கான ஒரு வித்தியாசமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

இந்த நகரம் உலகின் மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிற பகுதிகளுள் ஒன்று. கோடைகாலங்களில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டி விடும். தண்ணீர் இல்லை, மரங்களின் பற்றாக்குறை, பகல் நேரத்தில் வெளியே நீண்ட நேரம் வாழ முடியாத சூழல்- இவை அனைத்தும் இந்தப் பகுதியை மனிதர்கள் வாழ முடியாத இடமாகச் செய்துவிடுகின்றன. பொதுவாக இந்தச் சூழலில், அந்த இடத்தைக் காலி செய்வதுதான் மனிதர்களின் முடிவாக இருக்கும். ஆனால், அந்தப் பகுதியில் மனிதனை ஈர்க்கும் ஒரு முக்கியமான பொருளாதார விஷயம் இருக்கிறதே! அதுதான் ஓபல் எனும் ரத்தினக் கற்சுரங்கம்! பாரம்பரியமான வைரம், மாணிக்கம், நீலம் போன்ற நவரத்தினக் கற்களுக்கு இணையான/கூடுதலான மதிப்பு வாய்ந்த, ஓபல் போன்ற பிற ரத்தினக் கற்களுக்கும் உலகெங்கும் ஒரு பெரும் சந்தை இருக்கிறது. கூபர் பெடி, தன்னுள்ளே உலகின் மிகத்தரமான ஓபல் கற்களை ஒளித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான நிலப்பகுதி. இப்போது சொல்லுங்கள், அத்தனை எளிதாக அதை விட்டுக் கொடுத்துவிட்டு, இடத்தைக் காலி செய்துவிட்டுப் போக முடியுமா என்ன? இந்த நிலையில், மனிதன் எடுத்ததுதான் தரைக்கு மேலே வாழ்வதை விட, தரைக்குக் கீழே வாழலாம் எனும் முடிவு!

House in Coober Pedy
House in Coober Pedy

அதன் விளைவாக கூபர் பெடியில் வீடுகள், நிலத்தடியில் தோண்டப்பட்ட ‘Dugouts’ ஆக மாறின. இந்த தரையடியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கின்றன. வெளியே கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், உள்ளே ஒரு மிதமான, நிலையான வெப்பநிலை இருக்கிறது. ஏர் கண்டிஷன் போன்ற வசதிகள் இல்லாமலேயே வசதியான வாழ்க்கை நடத்த முடிகிறது. ஹால், படுக்கையறை, சமையலறை என இவை முழுமையான வீடுகளாக இருக்கின்றன. இந்த நகரத்தின் தனிச்சிறப்பு வீடுகள் மட்டுமல்ல. தேவாலயங்கள், ஹோட்டல்கள், கடைகள் போன்ற பல கட்டிடங்களும் நிலத்தடியில் அமைந்துள்ளன. இதனால் கூபர் பெடி ஒரு முழுமையான நகரமாக, ஒரு சமூக அமைப்பாக இருக்கிறது. ஆனால், அவர்களின் உலகில் சூரியனுக்கு மட்டும் இடமில்லை. மேலும், இந்த மக்களுக்கு சுரங்கம் தோண்டுவது என்பது அவர்களது தொழிற்கலாச்சாரம் என்பதால், அதுவே அவர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் மாறிவிட்டது பொருத்தமானதாக இருக்கிறது.

இவ்வகையான வாழ்க்கை முறையில், கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாப்பு, குறைவான மின்சாரச் செலவு போன்ற நன்மைகள் இருந்தாலும், இயற்கை ஒளி இல்லாமை, வெளி உலகத்துடன் தொடர்பு குறைவு, தண்ணீரை நீண்ட தூரத்திலிருந்து தரையடிக் குழாய்கள் மூலமாக கொண்டு வருவது போன்ற சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. மனித மனச்சமநிலையிலும் இந்த வாழ்க்கை முறை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஒரு பெரிய சவாலாக மாறிக்கொண்டிருக்கிறது. வெப்பம் அதிகரிக்கிறது, நீர் வளங்கள் குறைகின்றன. இத்தகைய சூழலில், கூபர் பெடி போன்ற இடங்கள் எதிர்கால வாழ்க்கை மாடல்களின் முன்னோட்டமாக இருக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் கணிக்கிறார்கள். மனிதன் இயற்கையை வெல்லும் உயிரினம் மட்டுமல்ல; அதனுடன் இணைந்து வாழவும் தெரிந்த உயிரினம் என்பதை இதன்மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆம், அது நமது அடிப்படையான உள்ளுணர்வு. லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையோடு போராடி, பல பரிணாமங்களை அடைந்த உயிரினமல்லவா நாம்!

Puthuyugam
www.puthuyugam.com