கடந்த 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி, சதாம் உசேன் தலைமையிலான ஈராக் படைகள், குட்டி நாடான, ஆனால் எண்ணெய் வளம் நிறைந்த குவைத்தை ஆக்கிரமித்தது. ஒரு லட்சம் ஈராக் படை வீரர்கள் குவைத்துக்குள் நுழைந்தனர். சில நாட்களுக்குள் குவைத் வீழ்ந்தது. இதையடுத்து , குவைத்தை மீட்க அமெரிக்கா தலைமையிலான 42 நாடுகள் போரில் குதித்தன. இது, வளைகுடா போராக மாறியது. முடிவில் ஈராக் தோற்டிகடிக்கப்பட்டது.
இந்தச் சமயத்தில், குவைத்திலிருந்து தங்கள் படைகளை வெளியேற்றுவதற்கு முன்பு, அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தித் திறனை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என ஈராக் கங்கணம் கட்டியது. ஈராக்கிய பொறியாளர்கள் குவைத்தின் எண்ணெய் கிணறுகள், நீரேற்று நிலையங்கள், எண்ணெய் குழாய்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி செய்யும் பகுதிகளைக் குறிவைத்து அழிக்கத் தொடங்கினர். 1991ம் ஆண்டுப் பிப்ரவரி மாதத்தில் அந்த நாட்டில் இருந்த 750-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. பல எண்ணெய் ஏரிகளுக்கும் ஈராக் ராணுவம் தீ வைத்தது. இதனால், தினமும் 4 முதல் 6 மில்லியன் பேரல் எண்ணெய் எரிந்து வீணானது. பல பில்லியன் டாலர்களைக் குவைத் இழந்தது.
இந்த எண்ணெய் கிணறுகள் பல மாதங்களாக, விடாமல் எரிந்தன. இதனால், வளைகுடாப் பகுதியில் வானத்தில் அடர்த்தியான கருப்புப் புகை பரவி, மக்களை மூச்சுத்திணறச் செய்தது. எரிந்து கொண்டிருந்த கிணறுகளில் இருந்து வெளியான கந்தக டை ஆக்சைட் வளிமண்டலத்தின் சேர்ந்தது. தீ மிகவும் தீவிரமாக எரிந்ததால், குவைத் நாட்டின் பெரும் பகுதி பகலிலேயே இருள் போலத்தான் காணப்பட்டது. பல நாடுகள் சேர்ந்து தீயை அணைக்கப் போராடின. கிட்டத்தட்ட 9 மாதங்கள் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ காரணமாகக் குவைத் மற்றும் சவூதி அரேபியா நாடுகளில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான நிலையை எட்டியது. பாரசீக வளைகுடா பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. ஈராக் வன்மத்துடன் செய்த மிக மோசமான செயலால், சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மரைன் படை அதிகாரி ஜான் கெல்லி கூறுகையில், ''குவைத்தில் என் மீது விழுந்த மழைத்துளி கருப்பாகவே இருந்தது. ரியாத், டெக்ரான், டமாஸ்கஸ் போன்ற நகரங்களிலும் துருக்கி, எத்தியோப்பியா, சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் கருப்பு மழை பெய்தது. நிலப்பரப்பில் மண்ணுடன் சரளையும், எண்ணெய் மற்றும் புகையும் சேர்ந்து குவைத் நாட்டின் 5 சதவிகித பகுதியில் கடினமான தார் போன்ற ஒரு அடுக்கு உருவானது'' என்று தெரிவித்துள்ளார்.
நவீன உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாகக் குவைத் சம்பவம் பார்க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட பட்டியலில் உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு உலை விபத்து (1986) மற்றும் போபால் விஷவாயு கசிவு (1984) ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு, மூன்றாவது மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு எனக் குவைத் சம்பவத்தைக் குறிப்பிட்டது. இந்தச் சமயத்தில் வளைகுடாவில் படர்ந்த கரும்புகை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்தன. இதன் எதிராலியாகக் குவைத்தில் இருந்து 2,700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இமயமலை பகுதியில் 'கருப்புப் பனி' பொழியத் தொடங்கியது
கடந்த 1991 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் கமல் நாத், ''ஜம்மு காஷ்மீரின் குவாண்ட் சோனமார்க் பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி பகுதியிலும் ஆங்காங்கே சில கருப்புப் பனிக் கட்டிகள் விழுந்தன . எனினும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு செய்ததில், இந்த நிகழ்வுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கண்டறிய முடியவில்லை ''என்று தெரிவித்திருந்தார்.
தற்போது, 35 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மத்திய கிழக்கில் உக்கிரமான போர் நடந்து வருகிறது. இந்தப் பிராந்தியத்திலுள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது ஏற்கனவே ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானில் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் தாக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் ஆலைகள், ஐக்கிய அரபு அமீரகத்திலுளள ஹப்ஷான் எரிவாயு ஆலை மற்றும் கத்தாரின் ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆகியவற்றின் மீதும் ஈரான் நாடு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், ஈரானிய எண்ணெய்க் கிடங்குகள் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களின் விளைவாக டெஹ்ரானில் கருப்பு மழை பெய்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வானத்திலிருந்து கருமையான மற்றும் எண்ணெய் போன்ற இந்த மழை பொழிந்தபோது, அந்த நகர மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகத் தவித்துள்ளனர். குவைத் சம்பவத்தை விட, சிறியதாக இருந்தாலும், தொடர்ந்து நடைபெற்று வரும் போரின் காரணமாக, சுற்றுச்சூழல் மிக மோசமான நிலையை அடையலாம் என்றும் கருதப்படுகிறது.
தற்போதையைப் போரில், எண்ணெய் கிணறுகள் மீது நடக்கும் தாக்குதல் குவைத் சம்பவத்துடன் ஒப்பிட முடியாது என்றாலும், இதனால் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது என்பது நிதர்சனமான உண்மை!