ரத்தினக்கற்கள் – ஒன்பது மட்டுமேயல்ல!

மனிதன் இயற்கையிலிருந்து எடுத்துக் கொண்ட பொருட்களில், ரத்தினக் கற்களுக்கு தனித்துவமான இடமுண்டு. அவை உலகெங்கும் முதன்மையாக அழகான அணிகலன்கள் செய்வதற்காகத்தான் பயன்படுகின்றன.
Diamond
Diamond
Published on

அடகு வைப்பதற்காக, வீட்டிலிருந்த ஒரு கல்வளையலை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போன போதுதான், அதன் லட்சணம் தெரிய வந்தது. ’தங்கத்துக்கு தரும் மதிப்பை இதற்குத் தரமுடியாது. இதில் மிக அதிக கற்கள் உள்ளன, இதை அடகே வைக்க முடியாது’ என்று சொல்லியனுப்பி விட்டார்கள். சாதாரண தங்க வளையல்களை விட அழகில் ஜொலிக்கின்றன இப்படியான கல் வளையல்கள். நமக்கிருக்கும் வசதிக்கு அதிலென்ன வைர, வைடூரியமா பதித்திருக்கப் போகிறோம், அவர்கள் அடகுக்குப் பெற்றுக்கொள்ள? அப்படியானால், அதில் அப்படி என்ன கற்கள்தான் பதிக்கப்பட்டிருக்கின்றன? 

முதலில் விலையுயர்ந்த ரத்தினக் கற்களைப் பற்றி கொஞ்சம் புரிந்துகொள்வோம்.

மனிதன் இயற்கையிலிருந்து எடுத்துக் கொண்ட பொருட்களில், ரத்தினக் கற்களுக்கு தனித்துவமான இடமுண்டு. அவை உலகெங்கும் முதன்மையாக அழகான அணிகலன்கள் செய்வதற்காகத்தான் பயன்படுகின்றன. அதே நேரத்தில் இந்தியா போன்ற நாடுகளில் நம்பிக்கையின் சின்னங்களாகவும் பார்க்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில், ‘நவரத்தினங்கள்’ என்ற கருத்தும், வரிசையும், ஒன்பது கிரகங்களுக்கு ஒன்பது கற்கள் என்ற ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாகியிருக்கிறது.

இந்த நவரத்தினப் பட்டியலில், வகைமையின் அடிப்படையில் முதலில் வருவன மாணிக்கம் (Ruby), மரகதம் (Emerald), புஷ்பராகம் (Yellow Sapphire), வைரம் (Diamond) மற்றும் நீலம் (Blue Sapphire).

உயர்தரமான மாணிக்கம் மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது. ‘ரத்தினங்களின் ராஜா’ என்று அழைக்கப்படும் இதன் முக்கியச் சிறப்பு, இதன் தீவிரமான சிவப்பு நிறமும் அரிதான தன்மையும் ஆகும். இந்தச் சிவப்புக்கு மயங்காதவர்கள் இருக்கமுடியாது. அதேபோல், ஆழமான பச்சை நிறம் கொண்ட மரகதம், கொலம்பியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. பெரும்பாலும் இலங்கையில் கிடைக்கும் புஷ்பராகம், ஆழ்ந்த மஞ்சள் நிறத்திலும் அதன் பல்வேறு shade-களிலும் காணப்படுகிறது; அதன் தெளிவும் ஒளி பிரதிபலிப்பும் இதன் முக்கிய அம்சங்கள். தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் கிடைக்கும் வைரம், உலகின் மிகக் கடினமான இயற்கைப் பொருளாகக் கருதப்படுகிறது. தூய கார்பன் கட்டமைப்பில் உருவாகும் இதன் brilliance, அதாவது ஒளி பிரதிபலிக்கும் தன்மையே அதன் மிகப்பெரிய சிறப்பு. பல மென்மையான நிறங்களில் கிடைத்தாலும், நிறமற்ற வைரமே அதிக மதிப்பைப் பெறுகிறது. இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் கிடைக்கும் நீலம், அதன் அடர்த்தியான நீல நிறத்தால் அறியப்படுகிறது. வைரத்திற்கு அடுத்ததாகக் கடினமான தன்மை கொண்ட இந்தக் கல், அதன் நிறத் தீவிரத்தாலும் அரிதான தரங்களாலும் உயர்ந்த மதிப்பைப் பெறுகிறது.

இந்தக் கற்கள் அனைத்தும் பூமியின் பாறையடுக்குகளில் உருவாகும் கனிமங்களாகும். அவை முதலில் Raw crystal வடிவில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் அதன் தன்மைக்கேற்ப வெட்டி, பட்டை தீட்டப்படுகின்றன. இந்தச் செயல்முறையின் மூலம்தான் அவற்றின் உள்ளிருக்கும் அழகு வெளிப்படுகிறது. தரத்தைப் பொறுத்து, இவற்றின் விலை சில ஆயிரங்களிலிருந்து பல லட்சங்கள் வரை உயரக்கூடியது.

Gems
Gems


அடுத்ததாக கோமேதகம் (Hessonite) மற்றும் வைடூரியம் (Cat’s Eye).

இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் கிடைக்கும் கோமேதகம், தேன் நிறத்தை ஒத்த ஒளிர்வைக் கொண்டது. அதன் உள்வடிவத்தில் காணப்படும் தனித்துவமான அலை போன்ற ஒளிர்வே இதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. இலங்கையில் அதிகமாகக் கிடைக்கும் வைடூரியம், அதன் மேற்பரப்பில் ஓர் ஒளிக்கோடு மிளிரும் தன்மையால் ’Cat’s eye’ எனும் பெயரைப் பெற்றிருக்கிறது. இவற்றின் விலையும் தரத்துக்கேற்ப ஆயிரங்களிலிருந்து பத்தாயிரங்கள் வரை மாறுபடும். இவையும் கனிமங்களே என்றாலும், இவற்றின் அழகு பலமுகங்கள் (facets) கொண்ட பட்டை தீட்டுதலில் இல்லை; மாறாக, அவற்றின் உள்வடிவ ஒளி விளைவுகளில் உள்ளது. அதனால் இவை பெரும்பாலும் வழுவழுப்பான ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற அரைக்கோள (cabochon) வடிவில் மட்டுமே தீட்டப்படுகின்றன.

இறுதியாக முத்தும் (Pearl) பவளமும் (Red Coral).

நவரத்தினங்களில் இவை முற்றிலும் வித்தியாசமானவை. மற்ற கற்கள் பூமியின் பாறைகளிலிருந்து கிடைக்கும் கனிமங்கள் என்றால், இவையிரண்டும் உயிரினங்களால் உருவாகும் ஆர்கானிக் ரத்தினங்கள். ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கும் முத்து, கடலில் உள்ள சிப்பிகளில் உருவாகிறது. அதேபோல், இத்தாலி, ஸ்பெயின், துனிஷியா போன்ற நாடுகளின் கடல் பகுதிகளில் வாழும் சிறிய கடல் உயிரினங்களின் கட்டமைப்பாக உருவாகும் பவளம், மற்றொரு தனித்துவமான ரத்தினம். முத்தின் மங்காத வெண்மையும், பவளத்தின் இயற்கையான சிவப்பு நிறமும் இவற்றின் அடையாளங்கள். 

இந்த ஒன்பது நவரத்தினங்கள் என்ற பாரம்பரிய பட்டியலைத் தாண்டி, ரத்தின உலகம் மிகவும் பரந்தது. Alexandrite போன்ற கற்கள் வெளிச்சத்தின் அடிப்படையில் நிறம் மாறும் தன்மையால் மிகவும் அரியவையாகக் கருதப்படுகின்றன. தான்சானியாவில் மட்டுமே கிடைக்கும் Tanzanite, அதன் குறைந்த கிடைப்பளவு காரணமாக உயர்ந்த மதிப்பைப் பெறுகிறது. Paraiba, Tourmaline போன்ற கற்கள், அவற்றின் நீல ஒளிர்வால் உலக சந்தையில் தனி இடத்தைப் பெற்றுள்ளன. Black Opal-ன் பன்னிற விளையாட்டும், Spinel-ன் Ruby போன்ற தோற்றமும், இந்தக் கற்களை மேலும் சிறப்பாக்குகின்றன. 

வைரம் அதன் மிகக் கடினமான தன்மையால் கண்ணாடி, உலோகம் போன்றவற்றை வெட்டும் கருவிகள் செய்வதிலும், Sapphire அதன் ஸ்க்ராட்ச் ஆகாத தன்மை காரணமாக கடிகாரக் கண்ணாடி, மொபைல் கேமரா லென்ஸ் பாதுகாப்பு போன்ற இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. மற்றபடி இவை உட்பட அனைத்து வகையான ரத்தினக்கற்களுமே, அணிகலன்கள் செய்வதற்காகவே பிரதானமாகப் பயன்படுகின்றன. 

இவற்றின் தரமான கற்கள், ஒரு காரெட் அளவே லட்சங்களில் இருக்கும் போது, நம் நடுத்தரத் தட்டு சமூகத்தின் வீட்டு ஆபரணங்களில் இவற்றைப் பயன்படுத்த வாய்ப்புகள் குறைவே. நாம் பொதுவாக அணியும் கல் வளையல்கள், சங்கிலிகள் போன்ற நகைகளில் பதிக்கப்படும் கற்கள் பெரும்பாலும் உயர்தர ரத்தினங்கள் அல்ல. அதற்குப் பதிலாக Cubic Zirconia (CZ), American Diamond போன்ற செயற்கை கற்களோ, Glass Stone, Crystal போன்ற கண்ணாடியின் அடிப்படையிலான கற்களோதான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், வெளியில் ஜொலிக்கும் எல்லா கற்களும் உயர்ந்த மதிப்பு வாய்ந்தவை அல்ல.

ஒரு சிறிய கல்லின் மதிப்பு அது எந்தப் பட்டியலில் உள்ளது என்பதாலல்ல; அது எவ்வளவு அரிதானது, எவ்வளவு அழகானது, மற்றும் மனிதன் அதற்கு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com