பொறுத்துக்கொள்ள முடியாத பேரமைதி! #AnechoicChamber

45 நிமிடங்கள்... இதுவரை எவரும் அந்த எல்லையைத் தாண்டவில்லை. அந்த அறையின் கதவு மீண்டும் திறக்கப்படும்போது, சூழலின் சத்தம் என்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
Anechoic Chamber
Anechoic Chamber
Published on

உங்கள் முதுகுக்குப் பின்னால் கதவு மெல்ல மூடப்படுகிறது. அது ஒரு அறை. யாருமற்ற அறை. நீங்கள் மட்டும் இருக்கும் அறை. அடுத்த சில விநாடிகளில் நீங்கள் ஒரு விசித்திரமான உலகிற்குள் தள்ளப்படுகிறீர்கள். முதலில் அது ஒரு நிம்மதியான அமைதியாகத் தெரிகிறது. ஆனால், ஒரு நிமிடம் கடந்ததுமே உங்கள் காதுகள் ஏதோ ஒரு சத்தத்திற்காக ஏங்கத் தொடங்குகின்றன. சுற்றிலும் எந்தச் சத்தமும் இல்லை; சுவர்கள் ஒலியை உறிஞ்சிக் கொள்கின்றன. இப்போது உங்கள் உடலுக்குள் நடக்கும் இயக்கங்களில் சத்தங்கள் கூட வெளியே கேட்கத் தொடங்குகின்றன.

உங்கள் இதயம் துடிப்பது ஏதோ ஒரு மேளம் அடிப்பது போலக் கேட்கிறது. உங்கள் நுரையீரல் காற்று, நுழைந்து வெளியேறும் ஒலி கூட மெல்லிய சீறல் சத்தம் போல ஒலிக்கிறது. இன்னும் சில நிமிடங்கள் சென்றால், உங்கள் நரம்புகளில் ரத்தம் ஓடும் சத்தம் கூட உங்கள் காதுகளுக்குப் புலப்பத்தொடங்கும். ஆனால், அதுவரை உங்களால் அங்கே தாக்குப் பிடிக்க முடியுமா என்று தெரியாது. அதற்குள் அந்தப் பேரமைதியே இப்போது ஒரு பெரும்பாரமாக உங்கள் மீது அமர்கிறது. உங்கள் மூளை குழப்பமடைகிறது, உடல் சமநிலையை இழக்கிறது.

45 நிமிடங்கள்... இதுவரை எவரும் அந்த எல்லையைத் தாண்டவில்லை. அந்த அறையின் கதவு மீண்டும் திறக்கப்படும்போது, சூழலின் சத்தம் என்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் கட்டப்பட்டுள்ள “Anechoic Chamber” தான் அது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அறை, வெறும் அமைதியான இடம் மட்டுமல்ல. இது கின்னஸ் சாதனை படைத்த ஒரு தொழில்நுட்ப அதிசயமாகும். உலகின் மிக அமைதியான இடம் இதுதான். இயற்பியல் விதிகளின்படி, மனிதக் காதுகளால் உணரமுடியாத அளவை 0 டெசிபல் ஒலியளவு என்கிறோம்.. ஆனால், இந்த அறையின் அமைதி அளவு மைனஸ் 20.35 dBA. 

anechoic chamber
anechoic chamber

மனித மூளை ஏன் இங்கே தடுமாறுகிறது?

நாம் நடக்கும்போது நமது கால்கள் தரையில் படும் சத்தம் மற்றும் சுற்றுப்புறச் சத்தங்களை வைத்தே நமது மூளை உடலின் சமநிலையை (Balance) பராமரிக்கிறது. ஆனால், இந்த அறையில் எந்தச் சத்தமும் இல்லாததால் மூளைக்குத் தேவையான 'Reference points' கிடைப்பதில்லை. இதனால், கடுமையான தலைசுற்றல், மயக்கம் ஏற்படுகிறது. ஹலுசினேஷன் (Hallucinations) உணர்வுகள் தோன்றுகின்றன.

எப்படி இந்த அறை இவ்வளவு அமைதியாக இருக்கிறது?

1. இந்த அறை ஒரு கட்டிடத்திற்குள் இருக்கும் இன்னொரு கட்டிடம் போன்றது. இது மெயின் கட்டிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அதிர்வுகளை உறிஞ்சும் ஸ்பிரிங்குகள் (Vibration-damping springs) மீது பொருத்தப்பட்டுள்ளது.
2. அறையின் உட்புறம் முழுவதும் 'Fiberglass wedges' எனப்படும் நுரை போன்ற அமைப்புகளால் மூடப்பட்டுள்ளது. இவை ஒலியைத் திருப்பி அனுப்பாமல் (No Echo) அப்படியே உறிஞ்சிக் கொள்ளும் திறன்வாய்ந்தவை.
3. ஆறு அடுக்கு கான்கிரீட் மற்றும் எஃகு சுவர்கள் இருப்பதால், வெளியில் ஒரு விமானமே பறந்தாலும் உள்ளே ஒரு சிறு சத்தம் கூட கேட்காது.

இந்த அறை கட்டப்பட்டதன் நோக்கம்தான் என்ன?

மைக்ரோசாப்ட் இதனை ஒரு பொழுதுபோக்கிற்காக உருவாக்கவில்லை. லேப்டாப் விசிறிகள் (Fans), பட்டன்கள் அழுத்தும் சத்தம் போன்றவற்றை மிகத் துல்லியமாக ஆய்வு செய்ய இது அறை பயன்படுகிறது. ஹெட்போன்கள் மற்றும் மைக்ரோஃபோன்களின் தரத்தை எவ்வித வெளி இடையூறும் இல்லாமல் பரிசோதிக்க உதவுகிறது.

அமைதியைத் தேடி பலரும் தியானம் மேற்கொள்கிறார்கள். ஆனால் மைக்ரோசாப்டின் இந்த அறை, அந்த அமைதியையே ஒரு சவாலாக மாற்றிவிடுவதை வாழ்வின் சுவாரசியமான முரண்களில் ஒன்றென குறிப்பிடத் தோன்றுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com