ஒரு Click.. ஒரு Block..! உங்கள் Friendship Meter ஆரோக்யமாக உள்ளதா?

சமூக வலைத்தள காலத்துக்கு முன்பாக, ‘உனக்கு எத்தனை நண்பர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டால், ஐந்தாறு பெயர்களைத் தான் நம்மால் சொல்ல முடிந்திருக்கும். ஆனால் இன்று...
Friendship
FriendshipFreePik
Published on

எப்போதாவது மனஅழுத்தம் மிகுந்து, தத்தளிக்கும் நிலை நம் எல்லோருக்குமே ஏற்படத்தான் செய்கிறது. சமீபத்தில், அப்படி ஒரு நாளில் அலுவலகக் குடைச்சல், பண நெருக்கடி ஆகியவற்றால் மனச்சோர்வுக்கு ஆளாகி, ஆறுதலுக்காக, மாலை நேரத்தில் ஒரு காபியுடன் அமர்ந்து மனைவியோடு மனம் விட்டுப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிமுறையில், சில சமயங்களில் ஆறுதல் கிடைக்கும்தான். ஆனால், எல்லா சமயங்களிலும் அப்படி நடந்துவிடுவதில்லை. அப்படி ஆன ஒரு நாளில், தனியே போய் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, செல் ஃபோன் காண்டாக்ட்ஸ் பகுதியைத் துழாவிக் கொண்டிருந்தேன் நான். மொத்தம் 1219 ஃபோன் நம்பர்கள் எனது போனில் இருந்தன. அத்தனை பேரிலிருந்து, இப்போது பேச நான் ஒருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். சற்று வியப்பான ஒரு உணர்வுதான் ஏற்பட்டது.

சமூக வலைத்தள காலத்துக்கு முன்பாக, ‘உனக்கு எத்தனை நண்பர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டால், ஐந்தாறு பெயர்களைத் தான் நம்மால் சொல்ல முடிந்திருக்கும். ஆனால் இன்று, நமது சமூக ஊடகக் கணக்குகளைத் திறந்து காட்டினால், ஆயிரக்கணக்கான 'நண்பர்கள்' வரிசை கட்டி நிற்கிறார்கள்.

ஒரு 'Click'கில் ஒருவரை நண்பராகச் சேர்த்துவிட முடியும், ஒரு 'Block'கில் ஒருவரை நம் வாழ்க்கையிலிருந்து நீக்கிவிடலாம். ஆனால், ஆயிரக்கணக்கான 'காண்டாக்ட்ஸ்' (Contacts) இருந்தும், மனசு வலிக்கும்போது அழைப்பதற்கு ஓரிருவர் கூட இல்லையென்றால், நாம் எங்கே தவறு செய்கிறோம்? நம்முடைய Friendship Meter ஆரோக்யமாக உள்ளதா?

Friendship meter! check your bond health
Friendship meter! check your bond healthChatGPT

இங்கே நண்பர்களின் எண்ணிக்கையையும், நட்பின் தரத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டியதிருக்கிறது. இன்றைய உலகம் 'தொடர்பு' (Connectivity) கொள்வதில் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கிறது. பிறந்தநாள் வந்தால் நூற்றுக்கணக்கான வாழ்த்துகள் வந்து குவிகின்றன. ஆனால், அதே நாளில் மனம் ஏதோ ஒரு பாரத்தால் கனத்துக் கிடக்கும்போது, அந்தத் திரையைத் தாண்டி நேரில் வந்து ’நீ நலம்தானே?’ என்று கேட்க எத்தனை பேர் இருக்கிறார்கள்?

’எனக்கு இவ்வளவு பேரைத் தெரியும்’ என்று நினைக்கிறோம். ஆனால், ’எத்தனை பேரை உணர்ந்திருக்கிறோம்?’ என்று நாம் சிந்திப்பதே இல்லை. தெரிந்தவர்கள் பெருகிவிட்டார்கள், ஆனால் புரிந்தவர்கள் அருகிவிட்டார்கள். ஒரு 'லைக்', ஒரு 'கமெண்ட்' அல்லது ஒரு சிரிக்கும் 'எமோஜி' - நம் முகத்தில் ஒரு தற்காலிகப் புன்னகையை வரவழைக்கலாம். ஆனால், அவை ஒருபோதும் இக்கட்டான நேரத்தில் நமக்கான ஆதரவாக மாற முடியாது. 

உண்மையான நட்பு என்பது ஒரு பெரிய வட்டமாக இருக்க வேண்டுமென்பதில்லை, சிறியதானாலும், வலுவானதாக (Small & Strong Circle) இருக்கவேண்டும். அவர்கள், உங்கள் வெற்றியில் உண்மையாக மகிழ்வார்கள். அவர்கள், உங்கள் தோல்விகளில் உங்களை ஒருபோதும் எடைபோட மாட்டார்கள். அவர்கள், உங்கள் மௌனத்தைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்வார்கள்.

ஏன் இணையத்தில் பல்லாயிரக்கணக்கான தொடர்புகளை நாம் தேடி ஓடுகிறோம்? அதற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் ஒளிந்துள்ளன. ஒன்று தனிமைப் பயம்! யாராவது நம்முடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தவிப்பு. அடுத்து ஒப்பீடு! மற்றவர்கள் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பதைக் கண்டு, நாம் மட்டும் பின் தங்கிவிடுவோமோ என்ற அச்சம். ஆனால், உண்மையில், ஆழமில்லாத அதிகமான தொடர்புகள்தான் நம் தனிமையை இன்னும் அதிகப்படுத்துகின்றன.

நீங்கள் கடைசியாக மிகவும் மனவருத்தத்தில் இருந்தபோது யார் உங்கள் அருகில் இருந்தார்கள், யாரிடம் பேச வேண்டும் என்று தவித்தீர்கள், யாருடன் பேசிய போது உங்கள் பாரம் குறைந்தது? இதையெல்லாம் எண்ணிப்பாருங்கள். நட்பு என்பது கணக்குப் பாடமல்ல, அது புள்ளிவிவரங்களால் அளக்கப்பட வேண்டியதுமல்ல, அது ஓர் உணர்வு, மனிதர்களாகிய நமது அடிப்படைக் குணமான குழு மனப்பான்மையின் முக்கியமான ஓர் அங்கம். நல்ல நட்புகளைக் கண்டடையுங்கள், அவர்களிடம் ஒளிவு மறைவற்ற திறந்த புத்தகமாக இருங்கள். யாரிடமாவது நாம் அப்படி இருந்துதான் ஆகவேண்டும். நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே அவர்களுக்கும் தாருங்கள்! உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்களுக்காக யார் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்!

Puthuyugam
www.puthuyugam.com