ஒரு காலத்தில் விமானத்தில் பறப்பதே அதிசயமாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்று விண்வெளிச் சுற்றுலா (Space Tourism) என்ற கருத்து கற்பனை அல்ல எனும் இடத்தை அடைந்திருக்கிறது. சில தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே பொதுமக்களை -அதாவது பணக்காரப் பொதுமக்களை- பூமியின் வளிமண்டல எல்லையைத் தாண்டிய உயரத்திற்கு அழைத்துச் சென்று, சில நிமிடங்கள் விண்வெளியில் மிதக்கும் எடை இல்லாத அனுபவத்தை வழங்கி, பாதுகாப்பாக மீண்டும் தரையிறக்கி வருகின்றன. கருமையான விண்வெளிப் பின்னணியில் நீல நிறக் கோளாகத் தெரியும் பூமியை எட்ட நின்று காணும் அனுபவம், இனி விண்வெளி வீரர்களுக்கானது மட்டுமல்ல. அனைவருக்கும் சாத்தியமானதாகிவிட்டது.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது ஒரு பெரும் முன்னேற்றம். விண்கலங்களை உருவாக்கும் தொழில்நுட்பம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள், துல்லியமான வழிநடத்தல் முறைமைகள் இவையனைத்தும் பல ஆண்டுகளாக அரசுகள் மேற்கொண்ட ஆய்வுகளின் பலன். இன்று தனியார் நிறுவனங்கள் அந்தத் தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றன. விண்வெளி என்பது இனி அரசுகளின் உடைமை மட்டுமல்ல, சந்தைக்கானதாகவும் மாறுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விர்ஜின் கெலக்டிக் (Virgin Galactic), ப்ளூ ஆரிஜின் (Blue Origin) போன்ற நிறுவனங்கள் இப்படியான விண்வெளி சுற்றுலாக்களை தொடங்கி வெற்றிகரமாக, அந்தத்துறையை முன்னேற்றி வருகின்றனர்.
இந்தப் பயணங்களில் சில வகைகள் உள்ளன. முதலாவது, ஒரு சில நிமிடங்கள் விண்வெளி மிதப்பு அனுபவம், 1 மணி நேரத்துக்குள் மொத்தப் பயணமும் நிறைவடையும் என்ற வகையில் சப்-ஆர்பிடல் பயணம். இது பூமியிலிருந்து சுமார் 100 கிமீ உயரத்தை அடைந்து பெறும் அனுபவத்தைத் தரும். இவற்றை விர்ஜின் கேலக்டிக், ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. விர்ஜின் நிறுவனம், பல வருடங்களாக இந்தப் பயணங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. 2025ல் மட்டும் 5 பயணங்களில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். இதற்காக, நிறுவனம் மற்றும் பயண நேரத்தைப் பொறுத்து, இந்திய மதிப்பில் பயிற்சிக் கட்டணங்கள், பயண முன் மருத்துவச் சோதனைகள் உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து சுமார் 2 கோடியிலிருந்து 5 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இரண்டாவது, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள், ஆர்பிடல் பயணங்கள் எனப்படும் இரண்டாம் கட்ட விண்வெளிப் பயணத்துக்குக் கொண்டு செல்கின்றன. இது முதல் கட்டத்தைத் தாண்டி சாட்டிலைட்டுகளைப் போல, படு வேகத்தில் பயணித்தவாறே, 400 கிமீ உயரத்தில் 28000 கிமீ வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெணி மையம் (ISS) வரை சென்று அங்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களை நலம் விசாரித்துவிட்டு வரக்கூடிய மாதிரியான பயணமாகும். இந்தப் பயணம் சில பல நாட்கள் எடுத்துக்கொள்ளும். இந்த வகையில் 2025 மார்ச்சில் ஒரு பயணம் நிகழ்ந்துள்ளது. இதற்குக் குறைந்தபட்சமாக 400 கோடிகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் நிலையாக, இதைத்தாண்டியும் சென்று நிலா வரை போய் எட்டிப் பார்த்துவிட்டு வரவும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், இங்கே எப்போதும் ஒரு கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு சில நிமிட அனுபவத்திற்காக கோடிக்கணக்கான டாலர்கள் செலவிடப்படும் அதே நேரத்தில், பூமியில் குடிநீர், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அப்படியானால், இதை மனித இனத்தின் அறிவியல் வளர்ச்சியாகப் பார்ப்பதா? அல்லது பெரும் செல்வந்தர்களின் புதிய ஆடம்பர விளையாட்டு மட்டும்தானா?
இதை விமர்சிப்பவர்கள் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். முதலாவது, சுற்றுச்சூழல் பாதிப்பு. ஒரு ராக்கெட் ஏவுதல் கூட பெரும் அளவில் கார்பன் வெளியீட்டை ஏற்படுத்துகிறது. புவி வெப்பமாதல் குறித்து உலகம் கவலைப்படுகின்ற தருணத்தில், இந்தச் சுற்றுலா தேவையா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது, சமத்துவப் பிரச்சினை. விண்வெளி அனுபவம் சிலருக்கான தனியுரிமையாக இருக்குமா? அல்லது விமானப் பயணத்தைப் போல அனைவருக்குமான அனுபவமாக மாறுமா?
ஆனால், ஆதரவாளர்களின் கோணம் வேறு. ஆரம்பத்தில் விமானப் பயணம், டிவி, கணினி, செல்போன்கள் ஏன், மின்சாரம் வந்த போதுமே கூட பணம் அவையெல்லாம் படைத்தவர்களுக்கானது என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால், சந்தைப் படுத்தலின் விளைவாக எல்லாமே ஒரு கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்தது. தொழில்நுட்பம் முதலில் ஆடம்பரமாகத் தெரிந்தாலும், பின்னர் அது சாதாரண வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் என்பதுதான் வரலாறு. பூமியைத் தாண்டிச் சென்று திரும்பிப் பார்க்கும் அந்தச் சில நிமிட அனுபவம், மனித மனதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், விண்வெளியை நோக்கிப் பாயும் ஒவ்வொரு ராக்கெட்டும், பூமியில் இருக்கும் நமது பொறுப்புகளை மறக்கச் செய்யக்கூடாது.