மனிதர்கள் போலவே சிம்பன்ஸிகளுக்கும் போர்; 8 ஆண்டுகளாக நடக்கிறதாம்!

மனிதர்களைப் போலவே சிம்பன்ஸிகளும் இரு குழுக்களாக பிரிந்து 8 ஆண்டுகளாக போர் நடத்திக் கொண்டிருக்கின்றனவாம். கொடூர கொலைகளும் காட்டுக்குள் நிகழ்ந்துள்ளன.
Chimpanzees
Chimpanzees
Published on

மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்து சண்டையிடுவதை போலவே, நமது மூதாதையர்களாகக் கருதப்படும் சிம்பன்ஸி இனமும் குழுக்களாகப் பிரிந்து சண்டையிடுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேற்கு உகாண்டாவில் கிபாலே உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்த பூங்கா சிம்பன்ஸ்களின் முக்கிய வாழ்விடமாகும். கிபாலே தேசியப் பூங்காவில் உலகின் மிகப்பெரிய நுகோகோ சிம்பன்ஸிகள் வாழ்கின்றன. இங்கு, 200 சிம்பன்ஸிகளை உள்ளடக்கிய குழு ஒரு காலத்தில் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு , இந்தக் குழுவில் இரு குரங்குகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இந்தக் குழு தனித்தனியாக பிரியத் தொடங்கியுள்ளது. இதனால், பகை வளர்ந்து விட்டது. ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரைத் தாக்குவது... தனியாக கிடைத்தால் அடித்துத் துவைத்து எடுப்பது என்று தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளன.

மனிதர்களைப் போல, எதிர் குழுவிலுள்ள சிம்பன்ஸிகளைக் கடத்திச் சென்று கொலையும் செய்துள்ளன. அப்படி, 24 கொலைகள் இரு குழுக்களுக்குள் நடந்துள்ளன. கொலையானவற்றில் 17 குட்டி சிம்பன்ஸிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 ஆண்டுகளாக இரு குழுக்களிடையே 'உள்நாட்டுப் போர்' நிலவுகிறதாம்.

சிம்பன்ஸிகள் நடத்தையில் ஏற்பட்ட இந்த மாற்றம் அரிதானது. நோய் காரணமாக பிணக்குகளை தீர்த்து வைக்கும் முதிய சிம்பன்ஸிகள் இறந்து போனதும், போர் தீவிரமாக ஒரு காரணமாக அமைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தற்போது ஈரான்- அமெரிக்கா போரில் பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு மத்தியஸ்தம் செய்கிறது அல்லவா... அதே போல, இந்த குரங்களுக்கிடையே சண்டை மூண்டால் தடுத்து சமாதானப்படுத்த யாரும் இல்லாத நிலை குழுக்களில் உருவாகியுள்ளது.

பிரிவினைக்குப் பிறகு, இரு குழுக்களும் தாங்கள் வாழும் பகுதிகளில் ரோந்து செல்லத் தொடங்கின. உளவு அமைப்புகளையும் ஏற்படுத்தி உயர்ந்த மரங்களில் மற்றொரு குழுவைக் கண்காணிக்க தொடங்கியுள்ளன. பெரிய ஆண் சிம்பன்ஸிகள் இளம் சிம்பன்ஸிகளைக் குறிவைத்துக் கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளன. இது, இரு குழுக்களிடையே ஆக்ரோஷமான மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த மோதலின் போது, சிம்பன்ஸிகளின் நடத்தை மனிதர்களின் குணத்தை ஒத்தே இருந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்வது, கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது. முக்கியமாக, குட்டிகளைக் கடத்திக் கொல்வது என்று அனைத்தும் மனித மோதல்கள் போலவே இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்தில், கிபாலே தேசியப் பூங்காவில் சிம்பன்ஸிகளுக்கிடையே நடந்த கடைசி மோதலையும் ஆராய்ச்சியாளர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் காயம்பட்ட சிம்பன்ஸிகளின் காட்சிகளும் பிற குழுக்களை சிம்பன்ஸி வேவு பார்ப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

மறைந்த சிம்பன்ஸி ஆய்வாளர் ஜேன் குட் ஆல், தான்சானியாவின் கோம்பேவில் உள்ள கசெகேலா சிம்பன்ஸி சமூகத்தில் இதேபோன்ற போர் நடந்திருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே, பதிவு செய்திருந்தார். வயது வந்த ஆண் சிம்பன்ஸிகள், வயதுவந்த பெண் சிம்பன்ஸிகள் மற்றும் இளம் சிம்பன்ஸிகள் ஒரு புதிய குழுவாகப் பிரிந்தன. அவற்றில் பல, பழைய குழுவில் இருந்த சிம்பன்ஸிகளால் கொலை செய்யப்பட்டதாகவும் ஜேன் குட்ஆல் தெரிவித்துள்ளார்.

சிம்பன்ஸிகள் உணவுக்காக மட்டும் பிரிந்து சண்டையிட்டுக் கொள்வதில்லையாம். வளங்கள் கொழிக்கும் பகுதியில் உணவுப் பற்றாக்குறை இல்லாத வாழ்விடங்களில்தான் இத்தகைய மோதல்கள் தீவிரமாக நடந்துள்ளன. சிம்பன்ஸிகளுக்குள் சமூகப் பிணைப்பு குறைந்து போனதே மோதல் ஏற்பட முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதே வேளையில், சிம்பன்ஸிகளின் நெருங்கிய இனமான போனபோக்கள் தங்களுக்குள் அமைதியான உறவுகளைப் பேண முயல்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்காவில் ஆய்வு செய்யப்பட்ட போனபோ சமூகத்திலும் இது போன்று குழு மோதல் ஏறபடுவது உண்டாம். ஆனால், வன்முறையின்றி ஒரு குழு பிற குழுவுடன் ஒத்துழைத்து, ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன. இதனால், பிணக்குகள் குறைந்து விடுவதால், மோதல் ஏற்படுவதில்லையாம்.

Puthuyugam
www.puthuyugam.com