கடலுக்கு அடியிலும் ஆணினம் அப்படித்தானா?

பெண் அக்டோபஸ்கள் தங்களுக்கு தொல்லை தரும் ஆண் ஆக்டோபஸ்களை விரட்ட, முரட்டுத்தனமான ஒரு வித்தையை பின்பற்றுகின்றன. வாடா வா... என்கிற ரீதியில் கல்லை கையில் எடுக்கின்றன.
female Octopuses Throw stone at Male under sea
female Octopuses Throw stone at Male under sea
Published on

கடல் வாழ் உயிரினங்களே விசித்திரம்தான். அவற்றில், ஆக்டோபஸ் முற்றிலும் வித்தியாசமானது. ஏனென்றால், இதற்கு இரண்டு கால்களும் ஆறு கைகளும் உள்ளன. பெரும்பாலும் 15 அடி நீளம் வரை வளரும். 50 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கலாம். முதுகெலும்பு இல்லாத ஆக்டாபஸுக்கு 3 இதயங்கள் உள்ளன. ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். மனித ரத்தத்தில் ஹீமோகுளோபின் உள்ளது. ஆக்டோபஸ்களின் ரத்தத்தில் ஹீமோசயனின் எனப்படும் செம்பு அடங்கிய புரதம் உள்ளது. மனிதர்களின் ஹீமோகுளோபின் நிறைந்த ரத்தம் ஆக்ஸிஜனுடன் சேரும்போது சிவப்பு நிறமாக மாறும். ஆக்டோபஸ் ரத்தத்தில் உள்ள செம்பு அதை நீல நிறமாக மாற்றுகிறது.

ஆக்டோபஸின் வாழ்க்கை அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும்தான். அதற்குள் பிறப்பு, இனப்பெருக்கம், முட்டைகளை பொரித்தல், குழந்தைகளை வளர்த்தல் என வாழக்கையில் பல விஷயங்கள் கடக்க வேண்டும். மேலும் சுறா,டால்பின்கள் உள்ளிட்ட பெரிய மீன்களும் ஆக்டோபஸின் உயிரை எப்போது வேண்டுமானலும் பறிக்கலாம். இதனால் ஆழ்கடலில் அவற்றின் வாழ்க்கை நிச்சயமில்லாத ஒன்றுதான். ஆனால், இவை மிகுந்த புத்திசாலித்தனம் மிகுந்த உயிரினம் ஆகும். எதிரிகளிடம் இருந்து தப்பிக்க 'கறுப்பு மை' போன்ற ஒரு திரவத்தை கசிய விடும். இந்த மை எதிரிகளுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கிறது. இந்த மையிலுள்ள 'டைரோசினேஸ்' என்ற சேர்மம் வேட்டையாடிகளின் கண்களில் படும் போது, எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது, அவற்றின் நுகர்வு மற்றும் சுவை உணர்வுகளையும் பாதிக்கிறது. இந்த மைதிரவம் கடலுக்கடியில் ஆக்டோபசுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பையும் அளிக்கிறது.

இனப்பெருக்கம் எப்படி நடக்கிறது?

ஆண் மற்றும் பெண் ஆக்டோபஸ்கள் இணையும்போது, ஆண் தனது விந்தணுக்களை ஒரு சிறப்புக் கை மூலம் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்குள் செலுத்துகிறது. இந்த செயல்பாடு சில மணி நேரம் கூட நீடிக்கலாம். இனச்சேர்க்கைக்குப் பிறகு, பெண் ஆக்டோபஸ் பாறைகளின் இடுக்குகளில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடும். சுமார் 4 முதல் 8 வாரங்கள் வரை முட்டைகளை சுத்தப்படுத்தி பெண் ஆக்டோபஸ் பாதுகாக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பெண் ஆக்டோபஸ் உணவருந்துவதில்லை. இறுதியில் , குஞ்சுகள் பொரித்தவுடன், சோர்வு மற்றும் பட்டினி காரணமாக பெண் ஆக்டோபஸ் இறந்தும் போய் விடுகிறது. எனவே, பிறக்கும் போதே தாயில்லாத பிள்ளைகளாகதாக் ஆக்டோபஸ் குட்டிகள் கடலுக்குள் வாழத் தொடங்குகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் சிறிய ஆக்டோபஸ்கள் plankton போல கடலில் மிதந்து, பின்னர் கடலடிக்குச் சென்று தனித்து வாழத் தொடங்குகின்றன.

சரி... ஆக்டோபஸை பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன... என்கிற கேள்வி எழுகிறதா? விஷயம் இருக்கிறது. சமீபத்தில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், பெண் ஆக்டோபஸ் ஒன்று தன்னை நெருங்கி வரும் ஆண் ஆக்டோபஸைத் தண்ணீருக்கு அடியில் கிடக்கும் கல்லை கொண்டு அடிக்கிறது. ஒரு முறை, இரு முறை அல்ல. அந்த ஆண் ஆக்டோபஸ் அங்கிருந்து ஓடும் வரை தாக்குகிறது. இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, ''பொதுவாக ஆண் ஆக்டோபஸ்கள் பாலியல்ரீதியாக தொல்லை தருவதாக உணர்ந்தாலோ அல்லது பயம் காரணமாகவே பெண் ஆக்டோபஸ்கள் இப்படி, தாக்குதலில் ஈடுபடுகின்றன. ஆக்டோபஸ்கள் பிற ஆக்டோபஸ்களை கல் போன்ற பொருட்களை கொண்டு தாக்கும் போது, மிகுந்த வேகத்துடன் எறிகின்றன. 10 முறை கல் கொண்டு எறிந்தால், 5 முறை எதிரியின் மீது பட்டு விடும். கடந்த 2015ம் ஆண்டே பெண் ஆக்டோபஸ்கள் தவறான எண்ணத்துடன் தங்களை அணுகும் ஆண் ஆக்டோபஸ்களைக் கல்லால் அடித்து விரட்டுவது உறுதி செய்யப்பட்டு விட்டது'' என்கின்றனர்.

'மனிதர்களில் ஆண்பாலினம் தேவையற்ற சமயங்களில் பெண்களை அணுகி, வாங்கிக் கட்டிக் கொள்ளும். இப்போது, கடலுக்கடியிலும் ஆணினம் அப்படித்தானா?' என்று நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

Puthuyugam
www.puthuyugam.com