இந்த நாய்த் தொந்தரவால், ஒரு சினிமா ஆர்வலரான என்னால் இரவுக் காட்சிக்கு மட்டுமல்ல, மாலைக்காட்சி (இது முடிந்து வீடு வருவதற்குத்தான் 10 மணி ஆகிவிடுகிறதே!) படம் பார்க்கக்கூட முடிவதில்லை. ஊருக்குள்ளே, அவனவன் கடி வாங்கிக்கொண்டு ஊசி போட்டுக் கொண்டிருக்கிறான், உமக்கு சினிமா பார்க்க முடியாததுதான் ஒரு பிரச்சினையாய்யா என்று என் மீது பாய்ந்துகொண்டு வராதீர்கள். நான் இப்படியான மாலை, இரவுக் காட்சிகளுக்குப் போய் பத்து ஆண்டுகளாகின்றன, சினிமாவில் இயங்குவதுதான் என் தொழில் (இல்லை, ஒருவேளை இருந்திருந்தால்?) என்றால் இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மனிதனுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில், நாய்களுக்குமாங்க பயந்துகொண்டு திரியமுடியும்? நமது விருப்பத்தை, வாழ்க்கையையே மாற்றியமைக்கிற அளவுக்கு இது போய் விட்டது என்பது எத்தனை பெரிய அநியாயம்?
1. கழிவு மேலாண்மை
நாம் தெருக்களில் கொட்டும் உணவுகளை நாய்கள் உண்கின்றன, அதோடு கழிவுகளை உண்ணும் எலி (மற்றும் அதன் தொடர்ச்சியான பாம்பு) போன்ற உயிரினங்களைக் கட்டுப் படுத்துகிறது.
2. பாதுகாப்பு
இரவு நேரங்களில் புதிய நபர்களின், திருடர்களின் வரவைத் தெரிவிக்கிறது. இது தெருவில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கான பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.
3. உறவு
நோய்மை, முதுமை, தனிமை, மனிதர்கள் மீதான நம்பிக்கையிழப்பு போன்ற விசயங்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு நாய்களைப் போன்ற உற்ற துணை யாருமிருக்கமுடியாது.
இதில் முதலாவது நம்மிடமிருக்கும், சமூகமாக நாம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய தவறுகள். நாங்கள் பொறுப்பில்லாமல் உணவுக்கழிவுகளைக் குப்பையில், தெருவில் கொட்டுவோம்… நாய்கள் வந்து அவற்றை உண்ண வேண்டும், கூடவே அவற்றால் எலிகள் வளராமலும் (அதனால் பாம்புகள் வளராமலும்) பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. உங்களைக் காப்பாற்றுவது நாய்களின் வேலை அல்ல, அதன் ஜெனிடிகல் தேவை, ஒரு உயிரினமாகப் பிழைத்திருப்பது, அவ்வளவுதான்!
இரண்டாவது, திருடர்களில்லாத மேம்பட்ட சமூகமாக நாம் உயர நமக்கு வக்கில்லாது போய்விட்டதா என்று அரசியல்வாதி போல நான் கேட்டால் நீங்கள் கடுப்பாகிவிடக்கூடும். ஆனாலும், திருடர்கள் பிரச்சினையை சமாளிக்க சிசிடிவி, காவல்துறை போன்றவற்றை நாடுவதா? அல்லது நாய்களை நாடுவதா என்று சிந்திக்கலாம். அதோடு நாய்களுக்கு பைக்கில் வருபவன் திருடன் என்று தெரியுமா? அல்லது சினிமா பார்த்துவிட்டு வருகிற அப்பாவி எழுத்தாளன் என்று தெரியுமா? சரி, வேண்டாம்! இரவு வேலைக்குப் போய்விட்டு வருகிற இளைஞன் என்று தெரியுமா?
தெரு நாய்களே இல்லாத நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் திருட்டுப் பிரச்சினைகளோ, சுத்தம், சுகாதாரம் பற்றிய பிரச்சினைகளோ ஏதுமில்லை. நமது கழிவு மேலாண்மையும், நமது பாதுகாப்பும் நம்முடைய பொறுப்பாகத்தான் இருக்க வேண்டும், இல்லையா!
மூன்றாவதை மட்டும்தான் நாம் ஏற்க முடியும். நிச்சயமாக வேறெந்த விலங்கும் தராத ஒரு நட்பை நாய்கள் தருகின்றனதான். இதிலும், அது தெருநாயாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையே! அப்படியான தேவையிருப்போர், அவர்களுக்கான நாய்களை அவர்கள் வீட்டோடு வைத்துக்கொள்ளப் போகிறார்கள். தெருநாய்களுக்கான தேவை எங்கிருந்து வருகிறது?
இனி, தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினையைப் பார்ப்போம். ஒரே பிரச்சினைதான். நாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபீஸ்!
ரேபீஸ் (Rabies) என்றால் என்ன?
ரேபீஸ் என்பது ஒரு மிலிட்டரி கிரனேடுக்கு ஒப்பான மிக ஆபத்தான நோய். இதற்கு இரண்டு வகையான தடுப்பூசிகள் உள்ளன. ஒன்று முன்னெச்சரிக்கைத் (Pre-exposure) தடுப்பு- மருத்துவ ஊழியர்கள் போட்டுக்கொள்வது. இன்னொன்று நாய்க்கடி பட்ட (Post- exposure) பின்பாக உடனடியாகப் போடவேண்டிய தடுப்பு- கடிவாங்கிய நாம் போட்டுக்கொள்வது. இவைதான் அந்தக் கிரனேடில் உள்ள காப்புக் கம்பிகள். சிறிய கடிதான், நகக்கீறல்தான் என்று கவனிக்காமலோ, வீட்டு நாய்தானே இதற்கு ரேபீஸ் தொற்று எப்படி இருக்கும் எனும் அறியாமையாலோ தடுப்பூசிகள் எடுக்காவிட்டால் அவ்வளவுதான், கிரனேடின் கம்பி உருவப்பட்டுவிட்டது, இனி அது வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ரேபீஸ் வந்த பின்பு காப்பாற்ற எந்த மருந்துகளும் இல்லை, மரணம்தான் முடிவு! விளைவுகள் இவ்வளவு மோசமாக இருப்பதால்தான் மிகக் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியதிருக்கிறது.
இந்தப் பிரச்சினை இப்போது பூதாகரமாகக் காரணம், தெரு நாய்களின் அச்சப்பட வேண்டிய அளவிலான பெருக்கம்தான்! இந்தியாவெங்கும் தெரு நாய்களைக் கணக்கெடுப்பது எளிதான விஷயமல்ல, 2019 வாக்கிலான அறிக்கை ஒன்றே 6 கோடி இருக்கலாம் என்கிறது. இப்போது இன்னும் பல மடங்கு இருக்கலாம். 2024ல் சுமார் இந்தியாவில் 40 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதெல்லாம் மிக மோசமான நிலைமை. மத்திய மாநில அரசுகள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இப்போது வந்து ஷெல்டர் அமைப்பது, இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்வது, ஜீவகாருண்யம் பேசுவது என நிதானமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தெருவில் இறங்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஆபத்தின் விளிம்பில் நிறுத்துகிறோம் என்பதே வலி தரக்கூடிய உண்மை!