இயற்கை கட்டிய நகரம்! #Cappadocia

இன்று கப்படோகியா உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. அதன் பாறை நகரங்களை மேலிருந்து பார்ப்பதற்காக அதிகாலையில் வானில் பறக்கும் ஹாட் ஏர் பலூன்கள் (Hot-air balloons) கூட அந்தப் பகுதியின் அடையாளமாகிவிட்டன.
Cappadocia
Cappadocia
Published on

துருக்கியின் மத்திய பகுதியில் இருக்கும் கப்படோகியா (Cappadocia) பகுதிக்குச் சென்றால், அங்கே உயர்ந்து நிற்கும் விசித்திரமான சிம்னி போன்ற அமைப்புகள், ஒன்றோடொன்று நெருக்கமாக அமைந்திருப்பதைக் காணலாம். அது ஒரு பழமையான நகரத்தைப் போன்றே காட்சியளிக்கிறது. ஆனால், அது நகரமும் அல்ல, அதைக் கட்டியது மனிதர்களும் அல்ல; இயற்கை!

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கப்படோகியா பகுதியில் இருந்த எரிமலைகள் மிகப்பெரிய அளவில் சாம்பலையும், எரிமலைக் குழம்புகளையும் வெளியேற்றின. அவை அந்தப் பகுதி முழுவதும் படிந்து, காலப்போக்கில் மென்மையான எரிமலைப் பாறைகளாக மாறின. பின்னர் மழை, காற்று, வெப்பநிலை மாற்றம் போன்ற இயற்கை அரிப்புகள் அந்தப் பாறைகளை மெல்ல மெல்லச் செதுக்கத் தொடங்கின. அதன் மென்மையான பகுதிகள் அரித்துச் செல்லப்பட்டு; கடினமான பகுதிகள் மட்டும் எஞ்சின. பல லட்சம் ஆண்டுகளாக நடைபெற்ற இந்த இயற்கைச் சிற்ப வேலையின் முடிவில், இன்று நாம் பார்க்கும் விசித்திரமான பாறைத் தூண்களும், கூம்பு வடிவங்களையும் கொண்ட நகரத்தைப் போன்ற தோற்றம் உருவானது. குறிப்பாக, புகைபோக்கிகள் (Fairy Chimneys) போல காட்சியளிக்கும் உயரமான கூம்பு வடிவப் பாறைகள், மேலே ஒரு கல் தொப்பி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கின்றன. இங்கேதான் மனிதர்களின் பங்கு தொடங்குகிறது.

இந்த மென்மையான பாறைகளை மனிதர்களால் எளிதாகக் குடைய முடிந்தது. அதனால் இவற்றைக் குடைந்து அறைகளையும், வீடுகளையும், தேவாலயங்களையும் உருவாக்கத் தொடங்கினர். பாறைகளின் வெளிப்புறத்தை மாற்றாமல், அதன் உட்புறத்தையே குடைந்து குடியிருப்புகளாக மாற்றிக்கொண்டார்கள். சில இடங்களில் ஒன்றோடொன்று இணைந்த குகைகள் உருவாகின. இதனால் இயற்கை உருவாக்கிய பாறை நகரத்துக்குள் மனிதர்கள் தங்களுக்கான இன்னொரு நகரத்தை உருவாக்கினார்கள்.

Cappadocia
Cappadocia

கப்படோகியாவின் குரெமே பகுதி இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அங்குள்ள பாறைகளுக்குள் குடியிருப்புகள் மட்டுமல்லாமல், குகை தேவாலயங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் சுவர்களில் வரையப்பட்ட பழைய ஓவியங்களும் இன்னும் காணப்படுகின்றன. அதாவது, வெளியில் பார்த்தால் இயற்கையின் சிற்பங்கள்; உள்ளே சென்றால் மனிதர்களின் வரலாறு. ஒரே பாறை இரண்டு வெவ்வேறு காலங்களின் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அத்துடன், கப்படோகியாவில் மனிதர்கள் பாறைகளுக்கு மேலேயும் உள்ளேயும் மட்டுமல்ல, தரைக்கடியிலும் நகரங்களை உருவாக்கினார்கள். டெரின்க்யு போன்ற நிலத்தடி நகரங்களில் பல அடுக்குகளாக அறைகள், உணவுக் கிடங்குகள், தொழுவங்கள், தேவாலயங்கள், காற்றோட்டப் பாதைகள் என ஒரு நகரத்துக்குத் தேவையான பல அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 85 மீட்டர் ஆழம் வரை குடைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இவை வெறும் வீடுகள் அல்ல; தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிக்க மக்கள் பயன்படுத்திய பாதுகாப்பான புகலிடங்களாகவும் இருந்திருக்கின்றன. இவை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த அமைப்புகள் என்று கருதப்படுகின்றன. மிகச்சில பொருத்தமான இடங்களில் இன்றும் மக்கள் வசிக்கிறார்கள். நிலத்தடி நகரம் மற்றும் பல பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றன. 

இன்று கப்படோகியா உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. அதன் பாறை நகரங்களை மேலிருந்து பார்ப்பதற்காக அதிகாலையில் வானில் பறக்கும் ஹாட் ஏர் பலூன்கள் (Hot-air balloons) கூட அந்தப் பகுதியின் அடையாளமாகிவிட்டன. கப்படோகியாவின் உண்மையான வியப்பு, இயற்கையாக உருவான பாறைகள் நகரங்களைப் போலத் தோன்றுகின்றன என்பது மட்டுமல்ல. முதலில் இயற்கை விசித்திரமான வடிவங்களில் பாறைகளை உருவாக்கியது. இயற்கை உருவாக்கியதை மனிதன் அழிக்காமல், அதற்குள் தன்னுடைய வாழ்க்கையைப் பொருத்திக்கொண்டான் என்பதும்தான். காற்றும் மழையும் செதுக்கிய பாறைகளுக்குள் மனிதர்கள் தங்கள் வீடுகளை அமைத்துக்கொண்டார்கள். இயற்கை வரைந்த ஓவியத்துக்குள் மனிதன் தனது வாழ்க்கையையும் எழுதிக் கொண்ட இடமாக விளங்குகிறது கப்படோகியா.

Puthuyugam
www.puthuyugam.com