கடந்த 1980ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் இல்யூஷின் (Ilyushin) நிறுவனம் ரஷ்ய அதிபர்களுக்கு என பிரமாண்டமாக அதிநவீன பாதுகாப்பான விமானங்களை தயாரித்து வழங்குகிறது. நீண்ட தூரம் பறக்கக்கூடிய, நான்கு என்ஜின்கள் கொண்ட இந்த விமானம், மிக மோசமான சூழ்நிலையின் போது விபத்தில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவியாட்விகேட்டல் PS-90A டர்போஃபேன் என்ஜின்கள் (Aviadvigatel PS-90A turbofan engines) இதில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 11,000 கிலோமீட்டர் தூரம் பறக்கும் திறன் கொண்டது. இதனால், நீண்ட பயணங்களின் போது, மீண்டும் எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த விமானம் 55.35 மீட்டர் நீளமும், 60.12 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது. ரஷ்யாவின் சிறப்பு விமானப் படை வீரர்களால் இந்த விமானம் இயக்கப்படுகிறது.
IL-96-300PU விமானம், அவசர காலங்களில் கட்டளை மையமாகச் செயல்படக்கூடியது. உலகின் எந்த மூலையிலிருந்தும் ராணுவம், உளவுத்துறை மற்றும் அரசாங்க அமைப்புகளைப் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ளக்கூடிய தகவல் தொடர்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது.
இந்த விமானத்தில் ரேடார்-ஜாமிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம், அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கும் தொழில்நுட்பமும் இருக்கிறது. பாதுகாப்பான தகவல் தொடர்பைப் பராமரிக்கக்கூடிய செயற்கைக்கோள் இணைப்பும் உள்ளது. படுக்கையறைகள், ஆடம்பரமான குளியலறைகள், சமையலறை மற்றும் உணவருந்தும் பகுதி, பெரிய மாநாட்டு அறை உள்ளிட்ட தனிப்பட்ட அதிபர் அறை உள்ளது. தங்கம் மூலாம் பூசப்பட்ட கைப்பிடிகள், நேர்த்தியான மர வேலைப்பாடுகள், உயர்தர இருக்கைகளும் உள்ளன.
விமானம் மட்டுமல்ல புதினின் காரும் உலகிலேயே அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது. முற்றிலும் கவசமிடப்பட்ட 'Aurus Senat' என்ற காரில்தான் புதின் பயணிக்கிறார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி புதினுடன் இந்தக் காரில் பயணித்தார். புதினின் அணிவகுப்பில் பொதுவாக 24 கார்கள் கார்கள் இடம்பெற்றிருக்கும்.
வெளிநாட்டுப் பயணங்களின்போது, குண்டு துளைக்காத வெடிகுண்டுத் தாக்குதலைத் தாங்கும் திறன் கொண்ட 'Aurus Senat' என்ற காரில் மட்டுமே புதின் பயணம் மேற்கொள்வார். இந்தக் கார், ரஷ்யவின் 'Aurus Motors- ரால் உருவாக்கப்பட்டது. இதன் மதிப்பு 2.5 கோடியாகும். இந்த கார் 9 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் 160 கி.மீ மட்டுமே!