ரூ. 500- க்கு விமானப்பயணம்... சாத்தியமா?

நியூயார்க் அருகே சிறிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை ஒரே ஒரு பைலட் மட்டுமே இயக்கினார். சுமார் 1,100 அடி உயரம் வரை இந்த விமானம் பறந்தது.
X1 aircraft
X1 aircraft Heart Aerospace
Published on

எதிர்காலத்தில் விமானங்களை இயக்குவதற்கான செலவு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்படும் ஒரு கோப்பை காபியின் விலையைவிடக் குறைவாக இருக்குமாம்.

இது நம்பமுடியாததாகத் தோன்றலாம். ஆனால், அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு விமான சோதனை ஒட்டம் இத்தகைய நம்ப முடியாத விலையில் விமானத்தில் மக்கள் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது!

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹார்ட் ஏரோஸ்பேஸ்' (Heart Aerospace) என்ற விமான நிறுவனம், தான் தயாரித்துள்ள மின்சாரத்தில் இயங்கும் விமானமான 'X1'-ஐ முதன்முறையாக பரிசோதித்து பார்த்துள்ளது. சுமார் 27 நிமிடங்கள் விமானம் வானில் பறக்க பேட்டரி ஆற்றல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதற்கான மின்சாரச் செலவு சுமார் 5 டாலர்கள் (சுமார் 500 ரூபாய்) மட்டுமே ஆகியுள்ளது.

நியூயார்க் அருகே சிறிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை ஒரே ஒரு பைலட் மட்டுமே இயக்கினார். சுமார் 1,100 அடி உயரம் வரை இந்த விமானம் பறந்தது.

X1 என்பது ஒரு சிறிய பரிசோதனை விமானம். இறக்கை 106 அடி நீளம் கொண்டது. விமானத்தின் மூக்குப் பகுதியிலிருந்து வால் பகுதி வரை, நீளம் 76 அடி இருக்கும். இதன் எடை 25,000 பவுண்டுகள். இது ஏறக்குறைய ஆட்கள் இல்லாத ஒரு பேருந்தின் எடைக்குச் சமம். இதில், 5 டாலர் செலவு என்பது, 27 நிமிடங்கள் நடைபெற்ற பரிசோதனை ஓட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான செலவை மட்டுமே குறிக்கிறது.

விமானத்தை இயக்குவதிலுள்ள இதரச் செலவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. உதாரணமாக, விமானியின் ஊதியம், பராமரிப்புச் செலவு, விமான நிலையக் கட்டணங்கள், காப்பீடு, மற்றும் பேட்டரியை மாற்றுதல் போன்ற செலவுகள் இந்தப் பயணத்தின்போது கணக்கில் கொள்ளப்படவில்லை.

எனவே, உடனே 500 ரூபாய்க்கு விமானத்தில் பறந்து விடலாம் என்று கருதக் கூடாது. எனினும், குறைந்த எரிசக்திச் செலவு, மின்சார விமானப் போக்குவரத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டர்ஸ் ஃபோர்ஸ்லண்ட், (Anders Forslund) ''மின்சார வர்த்தக விமானங்கள் விமானப் போக்குவரத்து செலவை அடியோடு மாற்றி விடும். விமானப் பயணச் செலவை வெகுவாக குறைக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X1 aircraft engineering team
X1 aircraft engineering team Heart Aerospace

X1விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதையடுத்து, Heart Aerospace நிறுவனம் 2031-ம் ஆண்டுக்குள் 30 இருக்கைகள் கொண்ட 'ES-30' எனும் hybrid-electric விமானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

வழக்கமான விமானங்களுடன் ஒப்பிடுகையில், ES-30 விமானத்தின் பராமரிப்புச் செலவுகளை 40 சதவிகிதம் குறைக்க முடியும் என்று Heart Aerospace நிறுவனம் கூறுகிறது. குறைந்த ஆற்றல் செலவு, குறைவான பராமரிப்பு செலவு,விமானத்தின் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்ற காரணிகளால் செலவு வெகுவாக குறையும் என்று தெரிவிக்கிறது. ஏற்கனவே, யுனைடெட் (United), ஏர் கனடா (Air Canada) மற்றும் ஜே.எஸ்.எக்ஸ்( JSX) உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் 'ES-30'ரக விமானத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.

மின்சார விமானங்களால் விமானக் கட்டணங்கள் ஒரே நாளில் பெருமளவு குறைந்துவிட வாய்ப்பில்லை. வரிகள், விமான நிலையக் கட்டணங்கள், பணியாளர் செலவுகள் போன்றவை தொடர்ந்து கட்டணத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும்.எனினும், மின்சாரத்தைப் பயன்படுத்துவது, குறைவான பராமரிப்புச் செலவு காரணமாக சிறிய ரக விமானங்கள் மற்றும் குறுகிய தூர விமானச் சேவைகளை மலிவானதாக மாற்றக்கூடும்.

Puthuyugam
www.puthuyugam.com