வாகனங்களே இல்லாத ஆசியாவின் ஒரே நகரம்! #Matheran

கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் மாதேரான் நகரம் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே , வேறு எந்த நகரத்திலும் இல்லாத ஒரு தடை இந்தச் சுற்றுலா நகரில் உள்ளது.
mathreran toy train
mathreran toy train
Published on

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரம்தான் மாதேரான். (Mathreran) இங்கு, மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதே இல்லை என்பதுதான் இந்த சுற்றுலா நகரத்தில் ஸ்பெஷல் ஆகும். உலகின் மிகவும் பரபரப்பான நகரத்தின் அருகிலேயே அமைந்திருப்பதும் இந்த நகரத்தின் மற்றொரு சிறப்பு.

மும்பையில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் ராய்காட் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் மாதேரான் அமைந்துள்ளது. கடந்த 1850ம் ஆண்டு மே மாதத்தில் மும்பையில் கோடை வெயில் கொளுத்தியது. இந்த சமயத்தில், தானே மாவட்ட ஆட்சியராக இருந்த ஹக் பாய்ன்ட்ஸ் மல்லட் என்பவர்தான் மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த அழகிய இடத்தைக் கண்டுபிடித்தார். பின்னர், அந்த இடத்துக்கு மாதேரான் என்று பெயரிடப்பட்டு மலைவாசஸ்தலமாக உருவாக்கப்பட்டது.

மாதேரானில் என்ன உள்ளது?

பிரிட்டிஷார் மும்பையின் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மாதேரானில் தங்கத் தொடங்கினர். தொடர்ந்து, மாதேரான் சுற்றுலா நகரமாக வளரத் தொடங்கியது. இந்த நகரத்தில் எந்த மோட்டார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இந்தத் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் குதிரைகள் , பேட்டரி வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும். ஆசியாவிலேயே இத்தகைய தடையுள்ள ஒரே சுற்றுலாநகரம் மாதேரான் என்பது குறிப்பிடத்தக்கது. மாதேரானில் 800 குதிரைகள் சுற்றுலாப்பயணிகளைச் சுமந்து செல்ல உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதேரானில் பனோரமா பாயிண்ட் பகுதியில் சூரிய அஸ்தமனம், சூரிய உதயத்தை காண்பது மனதுக்கு இதமாக இருக்கும். எக்கோ பாயிண்ட்டில் நமது பெயரை சொன்னால், பள்ளத்தாக்கில் இருந்து நமது பெயரும் எதிரொலிக்கும். அழகிய காடுகளுக்கு நடுவே சார்லட் ஏரி அமைந்துள்ளது. இது மாதேரான் நகரின் நீர் ஆதாரம். இங்கு, அரிய வகைப் பறவைகள் வசிக்கின்றன. லூயிசா பாயிண்ட்டில் இருந்து அழகிய பள்ளத்தாக்குகளை ரசிக்கலாம். ஒன் ட்ரீ ஹில் பாயிண்ட்டில் ஒற்றை மரம் மட்டுமே உள்ளது. இந்த பாயிண்டுக்கு நடந்து சென்றடைவதே நமக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். மங்கி பாயிண்ட்டில் குரங்குகளை கண்டு ரசிக்கலாம். அலெக்சாண்டர் பாயிண்ட் அமைதியான மற்றும் ரம்மியமான ஓய்விடத்தைத் தேடுபவர்களுக்கு வரப்பிரசாதம். இந்த இடங்கள் எல்லாம் அருகருகவே அமைந்துள்ளன.

one tree hill point
one tree hill point

எப்படிச் செல்லலாம்?

மாதேரனுக்கு மும்பை மற்றும் புனேயில் இருந்து பயணிக்கலாம். மும்பையில் இருந்து நெரல் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ரயிலில் பயணித்து மாதேரானை அடையலாம். மும்பை-புனே விரைவுச்சாலை வழியாகவும் மாதேரானை அடையலாம். சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை தஸ்தூரி நாக்கா என்ற இடத்தில் நிறுத்திவிட்டு, கால்நடையாகவோ அல்லது குதிரை மீதோ தங்கள் பயணத்தைத் தொடர வேண்டும். தஸ்தூரி நாக்காவில் இருந்து மாதேரான் 3 கி.மீ தொலைவில் உள்ளது.

நெரலில் இருந்து மாதேரான் வரை செல்லும் மலை ரயில், முற்றிலும் வேறுபட்ட பயண அனுபவத்தை வழங்குகிறது. மோட்டார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட மலை நகரத்தில் இந்த ரயிலுக்குதான் மவுசு அதிகம். அடர்ந்த காடுகள், ஆபாயகரமான வளைவுகள் வழியாக இந்த ரயில் மெதுவாகச் செல்கிறது. மழைக்காலத்தில் இந்த பாதையில் பயணித்தால் பச்சை பசேலான காட்சிகளை காண முடியும் .

மாதேரானுக்கு செல்ல உகந்த தருணம்

மாதேரனுக்குச் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரையில் செல்வது நல்லது. பருவமழைக் காலத்திலும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) பசுமையான இயற்கை அழகும், ரம்மியமான காட்சிகளும் காணப்படும், ஆனால் கனமழையும் பெய்து கொண்டே இருக்கும்.

அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்கவும், மாதேரானில் நிம்மதியாகத் தங்கி ஓய்வெடுக்கவும் 2 அல்லது 3 நாள் பயணத் திட்டம் உகந்தது. அப்போதுதான், மலையேற்றம், குதிரை சவாரி, இயற்கையான சூழலில் நடைப்பயணம் போன்ற அனுபவத்தை மேற்கொள்ள முடியும். உள்ளூர் மக்கள் நட்புடன் பழகுவார்கள், மேலும், வாகனங்கள் இல்லாததால் நகரமே ஒரு வித அமைதியுடன் காணப்படும். மகாராஷ்டிர, குஜராத்தி மற்றும் வட இந்திய உணவு வகைகள் கிடைக்கும். வடா பாவ் மற்றும் சிக்கி போன்ற உள்ளூர் சிறப்பு உணவுகளைக் கட்டாயம் சாப்பிட்டு பாருங்கள். மாதேரானில் இருந்து 55 கி.மீ தொலைவில் லோனாவாலா என்ற மற்றொரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலம் உள்ளது. அங்கும், சுற்றுலாப்பயணிகள் சென்று வரலாம்.

Puthuyugam
www.puthuyugam.com