ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி! #Messi

''இனிமேல் எனது தந்தையை நான் பார்க்க மாட்டேன் என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் இல்லாமல் நான் உலகக் கோப்பைத் தொடரில் முதன்முறையாக விளையாடியுள்ளேன்'' என்று மெஸ்ஸி தெரிவித்திருந்தார்.
Messi got first red card
Messi got first red cardGoal.com
Published on

சர்வதேச கால்பந்தில் இருந்து அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்ஸி ஓய்வு அறிவித்துள்ளார். தற்போது மேஜர்லீக் சாக்கர் (Major league soccer) தொடரில் இன்டர்மியாமி (Inter miami) அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

39 வயதான மெஸ்ஸி ஓய்வு அறிவித்தது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். 2022ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பைத் தொடரில் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றார். கடந்த ஜூலை மாதத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயினிடத்தில் அர்ஜெண்டினா தோல்வி கண்டு கோப்பையை பறி கொடுத்தது.

உலகக் கோப்பைத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தார். உலகக் கோப்பை முடிந்த சில நாட்களில் ஜோர்ஜ் மெஸ்ஸி மரணமடைந்தார். அப்போது, மெஸ்ஸி மிக உருக்கமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ''இனிமேல் எனது தந்தையை நான் பார்க்க மாட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. முதன்முறையாக நீங்கள் இல்லாமல் நான் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ளேன்'' என்று தெரிவித்திருந்தார். மற்றொரு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவும் மெஸ்ஸிக்கு இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில்தான் மெஸ்ஸி சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்துள்ளார். தனது கால்பந்து வாழ்க்கையில் அவர் எட்டு முறை பல்லான் டி ஓர் (Ballon d'Or ) விருதைப் பெற்றிருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையையும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்றது. இதுதான், மெஸ்ஸி வென்ற முதல் சர்வதேச கோப்பை. இதற்காக, 16 ஆண்டுகள் காத்திருந்தார். அர்ஜெண்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக அதிக சர்வதேச கோல்களை அடித்தவரும் இவர்தான்.

messi
messi

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் மெஸ்ஸி கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி நட்பு முறையிலான ஆட்டத்தில் ஹங்கேரி அணிக்கு எதிராக முதல் சர்வதேச ஆட்டத்தில் களமிறங்கினார். ஆனால், முதல் ஆட்டத்தில் அவருக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. இந்த ஆட்டத்தில் முதல் பாதி முடிந்த பிறகு, மாற்று ஆட்டக்காரராக 63வது நிமிடத்தில் மெஸ்ஸி களமிறக்கப்பட்டார். ஆனால், களமிறங்கி ஒரு நிமிடம் கூட ஆகியிருக்கவிலல்லை... அதாவது, 47வது விநாடியிலேயே 'ரெட் கார்டு ' காட்டப்பட்டு களத்தை விட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.

களமிறங்கிய மெஸ்ஸியிடம் இருந்து பந்தைக் கைப்பற்ற ஹங்கேரி தடுப்பாட்ட வீரர் வான்க்சக் (Vanczak)முயன்றார். அப்போது, மெஸ்ஸியின் ஜெர்சியை பிடித்து வான்க்சக் இழுத்தார். இதனால், கோபமடைந்த மெஸ்ஸி முழங்கையை கொண்டு வான்க்சக் முகத்தில் இடித்து விட்டார்.

இதனால், நேரடி சிவப்பு அட்டை காட்டப்பட்டு களத்தை விட்டு மெஸ்ஸி வெளியேற்றப்பட்டார். முதல் ஆட்டத்திலேயே இப்படி நடந்தால், இளம் வயது மெஸ்ஸியின் மன நிலை எப்படி இருந்திருக்கும்?. எனினும், அடுத்தடுத்த ஆட்டங்களில் மெஸ்ஸி நிதானத்தைக் கற்றுக் கொண்டு அபாரமாக விளையாடத் தொடங்கினார். 2006ம் ஆண்டு தனது ஆறாவது சர்வதேச ஆட்டத்தில் குரோஷியாவுக்கு எதிராக முதல் சர்வதேச கோலை மெஸ்ஸி அடித்தார். தொடர்ந்து, அர்ஜெண்டினாவின் அசைக்க முடியாத நட்சத்திரமாக மாறியது வரலாறு.

கடந்த 2022ம் ஆண்டு வான்க்சக் மெஸ்ஸி பற்றி பேசியது என்ன தெரியுமா...''நான்தான் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையை தொடங்கி வைத்தேன். இப்போது, ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பேசுகின்றனரென்றால், அதற்கு காரணம் நான்தான்''என்று காமெடியாக சொன்னார்.

சர்வதேச கால்பந்தில் இருந்து மெஸ்ஸி விடை பெற்றாலும், தொடர்ந்து இன்டர்மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடுவார். இந்த அணியுடன் 2028ம் ஆண்டு வரை அவருக்கு ஒப்பந்தம் உள்ளது. அதற்குப்பிறகு, கிளப் கால்பந்தில் இருந்தும் அவர் விடை பெற வாய்ப்புள்ளது.

மெஸ்ஸி ஓய்வு; ரொனால்டோ கருத்து

கடந்த 2016 ம் ஆண்டு கோபாஅமெரிக்கா தொடர் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா சிலியிடம் தோல்வி கண்டது. அப்போது, 29 வயதான மெஸ்ஸி திடீரென்று ஓய்வு அறிவித்தார். இது, விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, "மெஸ்ஸி ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளார். மக்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெனால்டி வாய்ப்பைத் தவறவிடுவது ஒருவரை மோசமான வீரராக மாற்றிவிடாது. மெஸ்ஸி கண்ணீர் விடுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது. அவர் மீண்டும் தனது தாய் நாட்டு அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த முறை மெஸ்ஸி சரியான நேரத்தில் ஓய்வு முடிவை எடுத்துள்ளார் என்பதே பல கால்பந்து வீரர்களின் கருத்தாக உள்ளது. ஏனென்றால், உலகக் கோப்பை உள்பட அனைத்தையும் அவர் வென்றெடுத்து விட்டார்.

10 ஆயிரம் கோடி சொத்து

தனது கால்பந்து வாழ்க்கையில் மெஸ்ஸி 10 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார். ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினாவில் பிரமாண்ட வீடுகள் உள்ளன. அமெரிக்காவிலும் பங்களா உள்ளது. ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். சொந்த விமானமும் வைத்துள்ளார். மெஸ்ஸிக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com