'மெஸ்ஸியை வைத்து ஊழலா?' - அதிர்ச்சியில் கேரள கால்பந்து ரசிகர்கள்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. மே மாதத்தில் வி.டி.சதீசன் அந்த மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.
'மெஸ்ஸியை வைத்து ஊழலா?' - அதிர்ச்சியில் கேரள கால்பந்து ரசிகர்கள்!
mathrubhumi
Published on

கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநிலத்துக்கு அர்ஜெண்டினா கால்பந்து அணியை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கேரள அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் கேரளாவுக்கு அர்ஜெண்டினா டீம் வர உள்ளதாகவும்... அப்போது நட்பு அடிப்படையிலான கால்பந்து விளையாடவுள்ளதாகவும் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் தெரிவித்திருந்தார். இதற்காக, கேரள அரசு அர்ஜெண்டினா அணிக்கு 126 கோடி செலுத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இது அத்தனையும் மக்களை ஏமாற்றிய செயல் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மே மாதத்தில் வி.டி.சதீசன் அந்த மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு மெஸ்ஸி மற்றும் அர்ஜெண்டினா அணியை வைத்து முற்றிலும் பூச்சாண்டி காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள விளையாட்டுத்துறை சிறப்பு செயலாளர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி (Reporter Broadcasting Company) என்ற தனியார் நிறுவனத்துக்குச் சாதகமாக பினராயி விஜயன் அரசு செயல்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரள விளையாட்டுத் துறை சிறப்புச் செயலாளர் என். பிரசாந்த் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின்படி, ''அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்திடம் (AFA) இருந்து எந்த ஒப்புதலும் பெறாமலேயே, அப்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன், விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் மற்றும் தலைமைச் செயலாளர் ஜெயதிலக் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். 

இவர்களே ஸ்பான்சரான 'ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி' என்ற நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளனர். இந்த நிறுவனம் வழியாக அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்திடம் ரூ.126 கோடியைச் செலுத்தியதாகக் கூறுகின்றனர். ஆனால் அந்தப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மானின் அலுவலகத்திலிருந்து அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துக்கு இ-மெயில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வரவில்லை. அர்ஜெண்டினாவும் மெஸ்ஸியும் கேரளா வருவது போன்ற ஒரு மாயை மட்டுமே உருவாக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி கேரள அரசிடம் இருந்து பெற்ற 126 கோடிக்கு சேவை வரி 22 கோடி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கேரள முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் கூறுகையில், ''மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னரே, அர்ஜெண்டினா அணியை கேரளாவுக்கு அழைக்க முயற்சித்தோம். தேசிய வங்கி வழியாக அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துக்குப் பணம் செலுத்தவும் ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டது. கேரள அரசு அர்ஜெண்டினா கால்பந்து அணியிடம் எந்த நேரடியான ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், தனியார் ஸ்பான்ஸர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொள்ளவே அர்ஜெண்டினா அணி விரும்பியது. அர்ஜெண்டினா அணி நிர்வாகமும் கேரளாவுக்குத் தங்கள் அணி வருவதை உறுதி செய்திருந்தது. இந்த விவகாரத்தில், எங்களால் கேரள அரசுக்கு எந்தவிதமான பண இழப்பும் ஏற்படவில்லை'' என்று குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

கால்பந்து ரசிகர்களான கேரள மக்கள், தாங்கள் விரும்பும் மெஸ்ஸியை வைத்தே, தங்களை பினராயி விஜயனின் அரசு ஏமாற்றி விட்டதாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com