'கிரிக்கெட் கடவுள்' சச்சினால் முடியாததை, செய்து காட்டிய யாஸ்தீகா!

'கிரிக்கெட் கடவுள்' என்று போற்றப்படும் சச்சினால் லார்ட்ஸ் மைதானத்தில் நிகழ்த்த முடியாத ஒரு சாதனையை இந்திய வீராங்கனை யாஷ்தீகா பாட்டியா படைத்துள்ளார்.
Yastika Bhatia
Yastika BhatiaYastika Bhatia X page
Published on

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை' கிரிக்கெட்டின் தாயகம்' என்று அழைப்பார்கள். உலகில் உருவாக்கப்பட்ட முதல் கிரிக்கெட் மைதானம் இதுதான். 1884ம் ஆண்டு ஜூலை 21 முதல் 23ம் தேதி வரை இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியது. கிரிக்கெட் ஆட்டத்துக்கான விதிகளை உருவாக்கிய Marylebone Cricket Club (MCC) இந்த மைதானத்தை நிர்வகிக்கிறது. என்னதான் இங்கிலாந்து முன்னேறிய நாடாக இருந்தாலும், மெர்ல்போன் கிரிக்கெட் கிளப்பில் 1999ம் ஆண்டு வரை பெண்கள் உறுப்பினராகத் தடை இருந்தது. 1976ம் ஆண்டு முதல்தான் இந்த மைதானத்தில் 50 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது.

லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவதும், இந்த மைதானத்தில் ஏதாவது ஒரு சாதனை படைப்பதும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவாகவே இருக்கும். இத்தகைய பெருமைமிகு மைதானத்தில்தான் இந்தியப் பெண்கள் அணியினர் நேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். அதுவும், ஆண்கள் டெஸ்ட் போட்டி முதலில் விளையாடி, 142 ஆண்டுகளுக்குப்பிறகுதான் லார்ட்ஸ் மைதானத்தில் பெண்கள் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அப்படி நடந்த முதல் பெண்கள் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 457 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி 186 ரன்களுக்கு சுருண்டதால், இந்தியா அபார வெற்றி பெற்றது.

Yastika  Bhatia with dhoni
Yastika Bhatia with dhoni Yastika x page

அதுமட்டுமல்ல, லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை யாஷ்தீகா பாட்டியா (Yastika Bhatia) பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீராங்கனை யாஷ்தீகா பாட்டியா 145 பந்துகளில் 113 ரன்களை எடுத்தார். இந்திய வீரர்கள் வினு மன்ஹட், அசாரூதின், வெங்சர்க்கார், கே.எல். ராகுல், ராகுல் டிராவிட் உள்ளிட்ட ஒரு சில வீரர்களே லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் யாஸ்தீகா அடித்த முதல் சதமும் இதுதான். இதையடுத்து, அவரது பெயர் லார்ட்ஸ் மைதானத்தின் ஹானர் போர்டிலும்  (Honours Board) பொறிக்கப்பட்டது. 'கிரிக்கெட் கடவுள்' என்று போற்றப்படும் சச்சின் கூட சர்வதேச ஆட்டத்தில் லார்ஸ்ட் மைதானத்தில் சதம் அடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி முடித்ததும் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் யாஸ்தீகா கூறியுள்ளதாவது , ''லார்ட்ஸ் மைதானத்தின் ஹானர்ஸ் போர்டில், உங்கள் பெயர் இடம்பெறுமா?' என்று ஆறு மாதங்களுக்கு முன்பு யாராவது என்னிடம் கேட்டிருந்தால், நானே ஆமென்று சொல்லியிருக்க மாட்டேன்! இது ஒரு கனவு போல இருக்கிறது. எனது முதல் டெஸ்ட் சதத்தை 'லார்ட்ஸ்' மைதானத்தில் அடித்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணமாக அமைந்தது. மொத்தத்தில், இது ஒரு மிகச் சிறந்த தருணம்'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல, இந்த ஆட்டத்தில் முதன் இன்னிங்சில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய இளம் வீராங்கனை கிராந்தி கௌட்டின் (Kranti Gaud ) பெயரும் லார்ட்ஸ் மைதானத்தின் ஹானர்ஸ் போர்டில் இடம் பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பவர்கள் மற்றும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வரை வீழ்த்துபவர்களுக்கு இந்த மைதானத்திலுள்ள ஹானர்ஸ் போர்டில் பெயர் இடம் பெறும்.

அடித்த ரன்கள் எவ்வளவு?

இந்தியா முதல் இன்னிங்ஸ் 285

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் -170

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்- 341

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்- 186

270 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

Puthuyugam
www.puthuyugam.com