குழுப் போட்டிகள் நிறைவடைந்து விட்டன. முதல் இரண்டு புள்ளிகளைப் பெற்ற வல்லக் கால்கள் நாக் அவுட் மேடைக்கு நடைபோட்டு துல்லியத் தாக்குதல் நடத்தத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களோடு மூன்றாம் நிலையில் இருந்த நாடுகளும் 'ஒரு கால் பார்த்துவிடுவோம்' என்று முந்தி நிற்கின்றன. வலுவிழந்த அணிகள் வீட்டுக்கு போய்விட்டன.
உலகக் களத்தில் மோதுவதற்காக தேர்வு நிலையிலிருந்து அடுத்தடுத்தத் தளங்களுக்குச் செல்வது அந்தந்த நாடுகளுக்கான நான்காண்டு காலமாக பின்தொடரும் பெருங்கனவு ஆகும்.
ஆனால் எப்போதும் யாவர்க்கும் களம் கால் கூடுவதில்லை. இதில் தேர்வு பெறாமலேயே வீட்டுக்குப்போன நாடுகள் மனதளவில் புண்பட்டுக் கிடப்பதை யார் அறிவார்?
இத்தாலி, சீனா, சிலி, நைஜீரியா, கேமரூன், வெனிசூலா, மற்றும் கீரீஸ் போன்ற காலாலேயே கில்லி ஆடும் நாடுகள் கூட தேர்ச்சி கட்டத்திலேயே கால்சறுக்கிப்போய் தேங்கிவிட்டனர். இப்படியான விரக்தியான சூழலில் அந்நாட்டு கால்பந்து இரசிகர்களின் மனவலியை அளவிடவே இயலாது.
இது ஒரு புறம் என்றால் முதல் முறையாக தேர்வாகி அனைவரையும் கவர்ந்த கோபோ வெர்தெ , கியூரோ சாவ், ஆகிய கண்ணுக்குத் தெரியாத நாடுகளின் கால்கள் இந்த முறை கால்கோல் விழா நடத்தி இரசிகர்களின் கவனத்தையும் பெற்றதும் சிறப்பே .
இதில் கோபோ வெர்தே டி காங்கோ , கானா , ஈக்வடார் ஆகிய நாட்டணியினர் இந்த நாக் அவுட் தளத்திலும் எட்டடி பாய்வதை பார்த்து இரசிக்க இருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக விழும் கோல்கள் அனைத்துமே மலிவான வலியைத்தான் அவர்களுக்கும் ஏன் பார்வையாளர்களுக்கும் அளிக்கும்.
ஆனால் எதிரணியினரின் முற்றத்தைத் நோக்கி இவர்கள் ஊடறுத்து ஊடு கட்டும் ஒவ்வொரு முயற்சியையும் முதுகில் தட்டிக் கொடுக்கலாம். அதுவே கோலாக மாறினால் முத்தக்குறியும் வரையலாம்.
குழு ஆட்டத்தில் அதிகப் புள்ளிகளுடன் இரண்டாம் நிலை ஆட்டத்திற்குச் சென்றவர்கள் போக மூன்றாம் இடத்தில் அதிகப் புள்ளிகளுடன் இருந்த எட்டு அணிகளுக்கு நாக் அவுட் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
டி ஆர் காங்கோ, ஸ்வீடன், கானா,ஈக்வடார், போஸ்னிய ஹெர்சகோவினா, அல்ஜீரியா , பராகுவே மற்றும் செனகல் ஆகிய இரண்டாம் மேடையை எட்டிப்பிடித்திருக்கும் எட்டு நாடுகளுக்கும் வாழ்த்துகள்.
இந்த எட்டு நாடுகளின் பட்டியலில் எப்படியும் இடம் பிடித்துவிடவேண்டும் என்று முட்டி மோதி இறுதியாக ஆற்றுப்படுத்த முடியாத வலியை சந்தித்த நாடுகள் உருகுவேயும் ஈரானும்தான்.
உருகுவே வலைகாப்பாளனின் சிறிய கவனக்குறைவே உருகுவே அணியின் அடுத்த நகர்வுக்கு உலை வைத்துவிட்டது.
தலையை அழுத்தும் கொடிய போரின் வலியைத் தாங்கியவாறு கடும் பயிற்சிக்கிடையே தேர்ச்சிபெற்ற நாடு ஈரான். தேர்ச்சி பெற்றாலும் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களை இருப்பைக் காட்டும் வகையில் உயிரைக்கொடுத்து ஆடியது ஈரானின்.
குறிப்பாக ஈரான் அணியின் வலைஞன் அலிரேசா பெய்ரான்வன்ட். உண்மையான களநாயகனாக இருந்து எதிரணிகளின் கால்களிலிருந்து வந்தக் கணைகளைக் காத்தான். குறிப்பாக பெல்ஜியம் அணியினர் தொடுத்த தாக்குதல்கள் ஏழுமுறை பேரலையாய் எழுந்துவர அனைத்தையும் லாகவமாகக் காத்து நின்றான்.
இப்படியாக, கால்கள் நடத்திய இந்த கூட்டுப்போரில்... களம், வெற்றி மற்றும் கண்ணீர்கதைகள் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறது.
ஆனாலும் இது முதல் நிலைப்போர்தான். 32 அணிகள் நடத்தும் அடுத்தப்போருக்கான எக்காள ஒலி சற்று நேரத்தில் ஒலிக்க இருக்கிறது.
வெற்றிக்கால் வீரக்கால் என்ற முழக்கத்துடன் காலைத்தீட்டிக்கொண்டு ஆட பிரேசிலும் ஜப்பானும், ஜெர்மனியும் பராகுவேயும், நெதர்லாந்தும் மோரோக்கோவும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.
தீயாட்டத்தைப் பார்த்து இரசிக்கலாம்.