பிரான்சுக்கும் நார்வேக்குமிடையிலான கால்கலப்பு இருதரப்பு பார்வையாளர்களின் நெஞ்சத்துடிப்பையும் நாற்காலி நுனிக்குக் கொண்டுவருமென்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரான்ஸ் எம்பாப்பேயின் ஆதிக்கக் கால்களுக்கெதிராக நார்வே ஹாலன்டின் கால்வீச்சு இருக்குமென்ற நினைப்புக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் நார்வேயின் முதல்நிலை ஆட்டக்காரர்கள் பத்துபேருக்கு ஒய்வு கொடுத்து உட்காரவைத்துவிட்டார் பயிற்சியாளர்.
ஹாலன்ட் இல்லாத களத்தைப்பார்த்து ஏமாந்த நார்வே இரசிகர்கள் பிரான்சிடம் சரியாக வாங்கிக் கட்டப் போகிறோம் என்று எண்ணித் துணிய அப்படியே களத் தராசும் பிரான்ஸ் பக்கமாகச் சாய்ந்தது.
இந்த முறை களத்தைக் காலில் எடுத்துக்கொண்டவர் பிரான்சின் முன்களவீரனான ஓஸ்மானே டெம்பல்லே.
முன்பாதியிலேயே மூன்று கோல்போட்டு நார்வே அணிக்கு நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்திவிட்டார். இதில் இரண்டு கோல்கள் எம்பாப்பேயின் காலுதவியுடன் கிட்டியது.
ஆனாலும் நார்வே பிரான்சுக்கெதிராக ஒரேயொரு கோலைப் பதிவுசெய்ய இறுதியாக பிரான்ஸ் நார்வே ஆட்டம் நான்குக்கு ஒன்று நிறைவு பெற்றது.
இந்த குழுவின் உச்ச அணியான பிரான்ஸ் 9 புள்ளிகளுடனும் நார்வே 6 புள்ளிகளுடனும்
செனகல் 3 புள்ளிகளுடனும் நாக் அவுட்டுக்கு முன்னேறிவிட்டது.
ஸ்பெயினுக்கும் உருகுவேயுக்கும் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் ஒற்றைக்கோலாடு முடிந்தப் போட்டி உருகுவேயை உலகக் களத்திலிருந்து வெளியேற்றிவிட்டது.
ஸ்பெயினைப் பொருத்தவரை முதன்மைப் புள்ளிகளுடன் நாக் அவுட் தளத்திற்குச் செல்லவேண்டும் என்ற வெறியுடன் ஆட்டத்தைத் தொடங்க இருமுறை உலகக் கோப்பையைப் பெற்ற உருகுவே உயிரைக் காலில் பிடித்துக் கொண்டு வாழ்வா சாவா என்று களமாட இறுதியாக உருகுவே வலைக்காப்பாளரின் கவனக்குறைவால் ஸ்பெயின் காலடியில் களம் சாய்ந்தது.
அணி மட்டுமல்ல; உருகுவே நாடே உடைந்துபோனது.
இந்தக்குழுவில் இடம் பெற்ற கேபோ வெர்தே அணி 32 அணிகள் கொண்ட அடுத்த மேடையை அலங்கரிக்க இருக்கிறது .
இந்த ஆண்டு வையக் கால்பந்துக் கோப்பை வரலாற்றில் கேபோ வெர்தே பதித்த பந்துத்தடம் பாராட்டத்தக்கது. வலையாளன் வோசினா அந்த வரலாற்றிற்கு உறையிட்ட கைகளால் முன்னுரை வரைந்திருக்கிறான் .