மெஸ்ஸியுடன் நேருக்கு நேர் ரொனால்டோ?#FIFAWorldCup

வரலாற்றில் அதிக ரசிகர்கள் நேரில் போட்டியைப் பார்த்த உலகக் கோப்பை தொடராக 2026ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் மாறியுள்ளது.
மெஸ்ஸியுடன் நேருக்கு நேர் ரொனால்டோ?#FIFAWorldCup
Published on

உலகக் கோப்பை தொடரில் இன்னும் 44 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, 36 லட்சத்து 60 ஆயிரம்பேர் போட்டியை நேரில் கண்டு களித்துள்ளனர்.

கடந்த 1994ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் மட்டும் நடந்தது. மொத்தம் 52 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை மொத்தம் 3,587,538 ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரேசில் - இத்தாலி அணி மோதிய இறுதி ஆட்டத்தை மட்டும் ஒரு லட்சம் பேர் நேரில் பார்த்தனர். உலகக் கோப்பைத் தொடரில் இந்த சாதனை கடந்த 30 ஆண்டுகாலமாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. அதாவது, உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயிலேயே 3,605,357 ரசிகர்கள் போட்டியை நேரில் பார்த்துள்ளனர். இன்னும் நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி, மூன்றாம் இடம், இறுதி ஆட்டம் என 44 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. கால்பந்து வரலாற்றில் இந்த உலகக் கோப்பைத் தொடர், பெரும் வரலாற்றுச் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, கனடா,மெக்ஸிகோ நாடுகளின் பிரமாண்ட மைதானங்களில் போட்டிகள் நடப்பதும், வட அமெரிக்கக் கண்டத்தில் கால்பந்து விளையாட்டுக்குள்ள வரவேற்பும் ரசிகர்களின் பொருளாதார பலமும் மைதானத்தில் ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 99 சதவிகித இருக்கைகள் நிரம்பி விடுகின்றன. பெரிய அணிகள், சின்ன அணிகள் என்கிற எந்த பாகுபாடும் இல்லாமல் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரை வைத்து பிஃபா 1.25 லட்சம் கோடியை லாபம் ஈட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பான்ஸர், டிக்கெட் விற்பனை, டி.வி உரிமம் போன்றவற்றின் வழியாக பிஃபாவுக்கு இவ்வளவு பெரிய லாபம் கிடைக்கவுள்ளது.

அந்த வகையில், உலகிலேயே அதிக லாபம் ஈட்டிய விளையாட்டுத் தொடராக நடப்பு உலகக் கோப்பைத் தொடர் மாறியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் லாபம் கிட்டத்தட்ட 45 ஆயிரம் கோடிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸியுடன் ரொனால்டோ மோதுவது உறுதி?

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா - போர்ச்சுகல் அணிகள் நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாக் அவுட்டில் போர்ச்சுகல், அர்ஜெண்டினா அணிகள் வெற்றி பெற்றால், காலிறுதி ஆட்டத்தில் சந்திக்கக் கூடும். உலகக் கோப்பை தொடரின் 100வது ஆட்டமான இது, கன்ஸாஸ் சிட்டியில் (Kansas City ) நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடரில் இதுவரை, ரொனால்டோ இடம் பெற்ற போர்ச்சுகல் அணியுடன் அர்ஜெண்டினா மோதியதே இல்லை. ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில், அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதேவேளையில், கிளப் அணிகளுக்காக ஆடிய போது, மெஸ்ஸியும் (பார்சிலோனா) ரொனால்டோவும் (ரியல்மாட்ரிட்) 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இவற்றில், மெஸ்ஸி 16 ஆட்டங்களிலும் ரொனால்டோ 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 7 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.

ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இது கருதப்படுகிறது. எனவே, இரு ஜாம்பவான்களும் களத்தில் மோதும், கண்கொள்ளாக் காட்சியைக் காண கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com