சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்கிற பொறுப்புத்துறப்பு விளையாட்டுக்கும் பொருந்தும் .
பலமான அணி படுத்துக்கொள்வதும் பலவீனமான அணி வீறு கொள்வதும் இயல்புதான்.
E குழுவில் கியூரோ சாவ் அணிக்கெதிராக 7 கோல்களைப் போட்டு கோலோச்சிய ஜெர்மானிய அணி ஐவரி கோஸ்ட்டுக்கு எதிராக டொரோண்டாவில் டொர்னேடோவைக் கிளப்ப எண்ணியிருக்கக் கூடும்.
ஆனால் யானைபலம் காட்டிய ஐவரிகோஸ்ட், எதிரிகளின் முன்னத்திக் கால்களுக்கு முன்னால் கட்டையைப் போட்டது மட்டுமில்லாமல் முதல் கோலைப் போட்டு முந்தியது.
30 ஆம் நிமிடத்தில் அணித்தலைவன் ஃபிரேங் கெஸ்ஸி இறக்கிய இடியிலிருந்து மீள்வதற்கு 38 நிமிடங்கள் தேவைப்பட்டன. அதுவரைக்கும் ஜெர்மனிக்குத் தண்ணீர் காட்டியது ஐவரிகோஸ்ட்.
இடையில் ஜெர்மனிக்கு கிடைத்த கோல் செல்லாது என்று நடுவர் மறுக்க இறுதியாக தண்ணீர் இடைவேளையை நெருங்கும் நேரத்தில் ஜெர்மனியின் தாகம் தீர்க்கும் கோல் ஒன்று வாய்த்தது.
அணிக்கு ஒன்று என சமநிலைக்கு வந்த பின்னரும் சூடுகுறையாமல் காலழுத்த மண்டலமாக மாறியது களம்.
எப்போதுமே நெருக்கடிக்குள் நடக்கும் ஆட்டமே இருதரப்பிலும் நகக் கடிப்பை ஏற்படுத்தும் . ஆனால் மூன்று கோலுக்கு மேலே கோல் விழுந்தாலே களம் தொங்கிவிடுவது இயல்பு .
நள்ளிரவு நடைபெற்ற நெதர்லாந்து vs ஸ்விடன் (5 -1)
காலையில் நடைபெற்ற ஜப்பான் vs துனிசியா (4 -0)ஆகிய இரண்டு போட்டிகளிலும் நெதர்லாந்தும் ஜப்பானும் எதிராளிகள் மீது அடுத்தடுத்து தொடுத்த கோல்கள் போட்டியின் விறுவிறுப்பைத் தணித்துவிட்டன.
ஆனால் ஜெர்மினி ஐவரிகோஸ்ட் போர் கூடுதல் நேரம் வந்த பிறகும் சோர்வு தட்டவில்லை .
இறுதியாக யாருக்கும் வெற்றியில்லை என்ற நினைத்த பொழுதில் ஜெர்மனியின் பதிலி வீரன் போட்ட கோலால் மீண்டது ஜெர்மனி அணி.
முதல் கோலைப்போட்ட டெனிஸ் உன்டாவ் வுக்கே மறுகோல் வாய்ப்பும் கிடைக்க நாக் அவுட் போட்டிக் களத்துக்குள் எளிதாக நுழைந்துவிட்டது ஜெர்மனி.
நேற்றைய ஆட்டங்களில் நெதர்லாந்தின் பிராப்பே மற்றும் காக்போ ஆகிய இருவருக்கும் ஜெர்மனியின் டெனிஸ் உன்டாவ்க்கும் இரண்டு கோல்வாய்ப்புகள் கிடைத்தமைச் சிறப்பு. அதே சமயம் ஸ்வீடன் அணி இலாங்காவின் கோல் அழகு .