அந்த 50 ஆம் நிமிடம்! #FIFA

உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில், தென்கொரியாவுக்கும் மெக்ஸிகோவுக்கும் நடந்த மோதலின் முக்கிய கணம் குறித்த ஒரு உணர்வுபூர்வமான பதிவு.
FIFA South Korea VS Mexico
FIFA South Korea VS Mexico
Published on

தென் கொரிய மெக்சிகோ அணிகளுக்கிடையிலான காலாட்டத்தின் அந்த 50 வது நிமிடத்தில் முதல் கோல் விழுந்தது.

அதுவரைக்கும் எந்தப் பந்தும் பழமாகாமல் இரு அணிகளின் கால்களுமே கிளியந்தட்டு மறித்துக் கொண்டிருந்தன.

அ பிரிவின் முன்னணி அணிகளான தென் கொரியாவுக்கும் மெக்சிகோவுக்குமான முட்டல் இரு அணிகளுக்குமே சவாலானது. இரு அணிகளுமே தலா மூன்று புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் அடுத்து 32 அணி வட்டத்திற்கான போட்டிக்காக விசில் ஊதப்பட களத்தில் தீ பற்ற வைக்கப்பட்டது.

இரு அணிகளின் சிக்கி முக்கிக் கால்களுமே சாதாரணமானது அல்ல. தென் அமெரிக்காவுக்கே உரித்தான முத்திரை நகர்வுகளைக் கொண்டது மெக்சிகோ.

அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் அதிரடி ஆட்டத்திற்கும், நுட்பமான உத்திகளுக்கும் ஈடுகொடுக்கும் ஆசியாவின் முதன்மைக் கால்களில் வரிசையில் தென் கொரியா, ஜப்பானும் நிற்கின்றன.

இன்றைய ஆட்டத்தின் முன்பாதி இருவருக்கும் கால்வசமாகவில்லை.

பின்பாதியில் தென்கொரிய பின்களத்தை நெருங்கிய மெக்சிகோ பந்தை வலைக்குக் குறிவைக்க அதை தென்கொரிய வலையாளன் கிம் செயுங் கியூ கையால் தடுத்து, கையகப்படுத்த முயன்றார். ஆனால் பிடிமானத்திலிருந்து பந்து நழுவி எதரிணியின் காலடியில் விழ, பந்து பழமானது. பந்தை வலைவசப்படுத்திய மெக்சிகோ வீரன் லூயிஸ் ரோமா அந்த ஐம்பதாவது நிமிடத்தில் நட்சத்திரமானான்.

பந்து காப்பாளர்களுக்கு இப்படியான சோதனைகள் வருவதுண்டு. 2002 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான முதல் கோல் பிரேசிலுக்கு இப்படித்தான் வாய்த்தது. கம்பத்துக்கு நேராக ரிவால்டோ அடித்த பந்தை ஜெர்மனி வலையாளன் கான் தடுப்பார். ஆனாலும் பந்து எகிறி இலக்குக்கான இடைவெளியை திறக்க சடுதியாக பாய்ந்து 2002 கோப்பைக்கான முதல் கோலாக மாற்றினார் ரொனால்டோ.

தான் செய்ய தவறை எண்ணி தரையில் அடித்துக் கொள்வார் கான். அதே நிலைதான் இன்று தென் கொரிய வலையாளனுக்கும் ஏற்பட்டது.

அதற்குப்பிறகான நாற்பது நிமிடங்களும் கூட தொய்வு குறையாத தொடர் அதிர்வாகத்தான் களம் காட்சியளித்தது. பந்து தென்கொரியக் கால்களுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்தாலும் இலக்குக்கான சரியான கோணம் சிக்காமல் போராடினர். கடைசியாக கிடைத்த வாய்ப்பும் பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையில் மெக்சிகோ காப்பாளரால் தடுக்கப்பட தென்கொரிய முகம் தொங்கிவிட்டது.

இறுதியாக ஒன்றுக்குச் சுழியம் என்று கோல் கணக்கில் மெக்சிகோ இலகுவாக அடுத்த 32 அணிகளுக்கான சுற்றுக்குச் சென்றுவிட்டது. தென் கொரியாவும் அந்த தளத்திற்குச் சென்றுவிடும்.

தென்கொரியா 2002ல் அரையிறுதிவரை சென்று நான்காவது இடத்தில் உச்சம் பெற்ற கதையை உலகறியும். அந்த ஆண்டில் அமெரிக்கா, போலந்து மற்றும் போர்ச்சுகல், அணிகளைப் பொளந்து கட்டி நாக் அவுட் கட்டத்தில் இத்தாலிக்கு இனிமா கொடுத்தது வரலாறு. காலிறுதியில் ஸ்பெயின் அணியின் கால்களுக்கே கடிவாளம் போட்டு அரையிறுதியில் ஜெர்மனியிடம் களத்தை இழந்த கதையையும் அறிவோம்.

இதே பிரிவில் இரவு செக் குடியரசிற்கும் தென் ஆப்ரிக்காவுக்கும் நடந்த போட்டியில் செக் குடியரசு முதல் கோலைப் போட்டு தென் ஆப்ரிக்காவுக்கு செக் வைத்தது.

பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் செக் அணி வைத்திருந்தாலும் இறுதியாக தென் ஆப்ரிக்காவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் போட்டி சமனில் முடிந்தது.

இந்தப் போட்டியின் நடுவர் மூவருமே பெண்கள் என்பது சிறப்பம்சம். தென் அமெரிக்க வீரர் அடித்த பந்து செக் வீரர் கையில் பட்டதால் முதன்மை நடுவரான டோரி பென்சோ மறு நொடியில் தண்டத் தாக்குதலுக்கான சைகை காட்ட கோல் கணக்கு சமன் செய்யப்பட்டது

Puthuyugam
www.puthuyugam.com