பிரேசிலியப் புல்லரிப்பின் நிறம் மஞ்சள்! #FIFA

மொராக்கோவுக்கு எதிரான முதலாம் ஆட்டம் சமனில் முடிந்துவிட்டதால் நாக் அவுட் தளத்துக்குப் செல்வதற்கான வசதியான போட்டியாக இதை நோக்கியது பிரேசில்.
FIFA - Brazil Vs Haiti
FIFA - Brazil Vs HaitiChatGPT AI Image
Published on

C பிரிவில் பிரேசிலுக்கும் ஹைத்திக்கும் நடந்த போட்டியில் ஃபிலடெல்ஃபியா அரங்கமே மஞ்சள்சாயம் பூசிக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கையை விட வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் ஆடத் தொடங்கியது பிரேசில்.

மொராக்கோவுக்கு எதிரான முதலாம் ஆட்டம் சமனில் முடிந்துவிட்டதால் நாக் அவுட் தளத்துக்குப் செல்வதற்கான வசதியான போட்டியாக இதை நோக்கியது பிரேசில்.

அதற்காக சாம தான பேத தண்டம் அனைத்தையும் பயன்படுத்தும் நோக்குடன் சாம்பா அணி ஆடத்தொடங்கியது.

பார்வையாளர்கள் மாடத்தில் சாம்பா தேச மேனாள் ஜாம்பவன்களான ரொனால்டோ நசரியோ, ரொபர்ட்டோ கார்லூஸ், ரொனால்டினியோ உள்ளிட்ட தலைகள் தென்பட இரசிகர்களின் உற்சாகம் உச்சத்திற்குச் சென்றது.

ஆட்டத் தொடக்கம் முதலே பிரேசிலின் காலாதிக்கம்தான். சாம்பா பாணி ஆட்டத்துக்குத் தீனி போடும் வகையில் வேகமெடுத்த பிரேசில் வீரர்களின் முதல் பாதி மூன்று கோல்களுடன் முடிய பிரேசில் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டது.

முன்னத்தி வீரர்களான வினியும் மேத்யூஸ் குன்யாவும் நிகழ்த்திய வித்தையில் மூன்று முத்தான கோல்களுடன் முன்னிலை பெற்றது. முதல் இரண்டு கோல்களை வினியின் கால்களிடமிருந்து பெற்று வலைக்குள்ளாக்கினார் மேத்யூ குன்யா. மூன்றாம் கோலை பக்கெட்டா காலிலிருந்து பெற்று வலைக்குள் ஆக்கினார் வினிசியஸ்

கோல்கள் அனைத்துமே தென்அமெரிக்கசார் செவ்வியல் வகைதான்.

முதல் பாதியில் வேகமெடுத்த பிரேசிலின் அதிரடியாட்டம் பின்பாதியில் சற்று படுத்துக் கொண்டது. மார்ட்டிநெல்லியின் குறிவைப்பு பிசகி பந்து கம்பத்தில் பட்டுத் தெறித்தது. இறுதியில் களமிறக்கப்பட்ட என்டிரிக்கின் கோல் ஆஃப் சைட் என்று நடுவர் கொடிகாட்ட பின்பாதியில் சாம்பா அணி கோல்கள் எதையும் சம்பாதிக்கமுடியாமல் போயிற்று.

ஹைத்தி அவ்வப்போது அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க மறக்கவில்லை. ஹைத்தியின் ஆட்டம் எந்தவித தொய்வும் இல்லாமல் பிரேசிலுக்கு ஈடுகொடுக்கும் வகையிலேயே இருந்தது. ஹைத்தியின் பின்களவீரன் ரிக்கார்டோ அடே தலையிடி மூலம் கோலுக்கு குறிவைக்க மயிரிழையில் பந்து பிரேசில் வலையாளரால் தடுக்கப்பட்டது.

உலக கோப்பைக் கால்பந்து ஆட்டத்தைப் பொறுத்தவரையில் போட்டியில் பங்கு பெறத் தகுதிபெறுவதற்கான ஆட்டத்திலிருந்து பங்குபெறுவது வரையிலான நடைமுறைகளில் பல பிரச்சினைகள் இருப்பதை பார்வையாளர்கள் உணர்வதில்லை.

அந்தப் பிரச்சினை வளர்ந்த நாடுகளுக்கும் கூட இருக்கக்கூடும். ஆனால் இந்த ஆண்டு களத்தில் நிற்கும் ஹைத்தி , ஈரான், ஈராக், ஜோர்டான் போன்ற நாடுகளின் நிலை பரிதாபத்திற்குரியது.

அரசியல் நிலைத்தன்மையற்ற கரீபியின் நாடுகளில் ஒன்றான ஹைத்தி 1974 ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்த ஆண்டு தகுதி பெற்றிருக்கிறது.

உள்நாட்டுப்போர், ஆயுதக்குழுக்களின் தொடர் அச்சுறுத்தல் என்று அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளால் கிழிந்து தொங்கும் ஒரு தேசத்திலிருந்து ஆடவந்திருக்கிறார்கள். போதுமான பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத நிலையில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்துமே பிறநாடுகளில்தான் நடைபெற்றன. ஹைத்தி நாட்டவர்கள் பத்துபேர் மட்டுமே உள்ள நிலையில் பிறநாட்டவர்களின் உதவும் கால்களுடன் இந்த உலகக் களத்துக்கு வந்திருக்கின்றனர். அந்தப் பின்னணியுடன் இந்த ஆட்டத்தைப் பார்த்தால் ஹைத்தியின் ஆட்டத்தில் இருக்கும் வலியில் மிஞ்சி நிற்கும் திறமைகளை உணரமுடியும்.

ஆனாலும் பிரேசிலைப் பின்பாதியில் மட்டுப்படுத்தும் வகையில் சிறப்பாக ஆடி மூன்று கோலுக்குள் ஆட்டத்தை முடித்துவைத்த ஹைத்திக்கு வருங்காலம் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்பது உறுதி. நாக் அவுட்டுக்கு போகும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றாலும் அரங்கத்தில் குறைந்த அளவில் வருகை தந்திருந்த ஹைத்தி நாட்டவர் தங்கள் முகத்தில் பிரேசலின் புல்லரிப்புக்கு இணையான பூரிப்பைக் காட்டினார்கள்.

இதே பிரிவில் ஸ்காட்லாந்துக்கும் மொரோக்கோவுக்கும் நடந்த மற்றொரு போட்டியில் மொரோக்கோ ஒரு கோல் போட்டு பிரேசிலுக்கு இணையான நான்கு புள்ளிகளுடன் முன்னிலை பெற்றிருக்கிறது. பிரேசிலுக்கு எதிராக கோல் போட்ட சைபாரிதான் இந்த கோலுக்கும் சொந்தக்காலன்.

மொரோக்கோ இந்த உலக கோப்பைக் களத்தில் பேசப்படும் அணியாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Puthuyugam
www.puthuyugam.com