'குடும்பமே அப்படித்தானோ!' அதிரடி காட்டிய சூர்யவன்ஷியின் தம்பி!

15 வயது சூரியவன்ஷிதான் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனம் என்றால், அவரது குட்டி சகோதரரும் பந்துவீச்சாளர்களை விட்டு வைப்பதில்லையாம்.
Vaibhav Sooryavanshi and Aashirwad
Vaibhav Sooryavanshi and Aashirwad
Published on

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் 15 வயதேயான வைபவ் சூரியவன்ஷி எதிரணி வீரர்களை கதி கலங்க வைத்தது அனைவருக்கும் தெரியும். இவர், பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டம் தாஜ்பூர் (Tajpur) என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்.

நான்கு வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர், படிப்படியாக உயர்ந்து 13 வயதில் ஐ.பி.எல் தொடருக்குள் நுழைந்து விட்டார். கடந்த 2025ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவை வாங்கியது. அப்போது ஐபிஎல் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் ஒப்பந்தமான வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2025ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் சதமடித்த போது, கிரிக்கெட் உலகமே இந்த பாலகனை வியந்து பார்த்தது. 2026 ஐ.பி.எல் தொடரில் 16 இன்னிங்ஸில் 776 ரன்களைக் குவித்து ஆரஞ்ச் கேப் பெற்று அசத்தி விட்டார். இந்தத் தொடரில், 72 சிக்ஸர்களை விளாசி ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த கிறிஸ் கெயிலின் சாதனையையும் காலி செய்தார்.

இப்படி பல சாதனைகளை 15 வயதில் புரிந்த சிறுவன் இந்திய டி- 20 அணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூன் மாத இறுதியில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் களம் இறங்கினால், 'இளம் வயதில் இந்திய அணிக்கு ஆடிய வீரர்' என்ற பெருமை வைபவுக்குக் கிடைக்கும். முன்னதாக, கடந்த 1989ம் ஆண்டு சச்சின் 16 வயதில் இந்திய அணிக்காக ஆடியிருந்தார். 37 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் இருக்கும் இந்தச் சாதனையை சூரியவன்ஷி முறியடிக்கப் போகிறார்.

இந்திய அணியில் சூரியவன்ஷிக்கு அழைப்பு வந்ததுமே, அவரது சொந்த ஊரில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வைபவ் வீட்டுக்கு வந்த உறவினர்களும் நண்பர்களுக்கும் ஜிலேபி, லட்டு போன்ற இனிப்புகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பரிமாறப்பட்டது. வைபவின் தந்தை சஞ்சீவ் சூரியவன்ஷி, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார். 'எனது கனவு நனவாகியுள்ளது' என்று கூறி, மனம் நெகிழ்நதார்.

இந்த சூரியவன்ஷிக்கு ஆசிர்வாத் (Ashirwad) என்ற குட்டித் தம்பி உள்ளான். அண்ணனைப் பின்பற்றி, அவனும் கிரிக்கெட் விளையாடி வருகிறான். தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணியில் ஆசிர்வாத் இடம் பெற்றுள்ளான். இந்த ஆசிர்வாத்தும் அதிரடி ஆட்டத்துக்குச் சொந்தக்காரன்தான்.

சமீபத்தில், சமாஸ்தீபூர் அணியுடன் தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணி மோதியது. இந்த ஆட்டத்தில்,ஆசிர்வாத் 87 பந்துகளில் 103 ரன்களை விளாசினான். இதில், 20 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம். ஸ்ட்ரைக் ரேட் 118.39 ஆகும். தனது சகோதரர் சமடித்ததும், அவரது புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வைபவ் சூரியவன்ஷி பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த பலரும்' குடும்பமே அப்படிதானோ...' என்று ஆச்சரியப்பட்டனர். சிலர், பந்துவீச்சாளர்களை மிரட்ட புதிய குட்டிச் சாத்தான் வந்துள்ளது என்றும் காமெடியாக கூறியுள்ளனர். ஆசிர்வாத்துக்கு 10 வயதுதான் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணன் போலவே தம்பியும் விரைவில் கிரிக்கெட் உலகில் அதிர்வலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com