கோழிக்கோடு தீயணைப்புத்துறையில் பணியாற்றியவர் தர்மராஜன். கடந்த 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தர்மராஜனுக்கு சிறுவயது முதலே தற்காப்புக் கலைகளில் ஆர்வம் அதிகம். இதனால்,1974ம் ஆண்டு முதல், களரிப்பயட்டு, பாக்ஸிங், குங்ஃபூ போன்றவற்றை கற்கத் தொடங்கினார். வீட்டில் ஏழு சகோதர- சகோதரிகளுக்கு இவர்தான் மூத்தவர். இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் , வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். தொடர்ந்து, தீயணைப்புத்துறையில் பணிக்குச் சேர்ந்தார். ஆனாலும், ஏதாவது தற்காப்புக் கலையை கற்க வேண்டும் என்கிற தீராத தாகம் அவருக்கு இருந்தது. கடந்த 2020ம் ஆண்டு கராத்தே கற்க முடிவு செய்தார். அப்போதே, அவருக்கு வயது 66.
வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடம் தனது ஆசையை சொன்ன போது, 'இந்த வயதிலா... இதெல்லாம் தேவையா?' என்று கேள்வி எழுப்பினர். ஆனால், தர்மராஜனின் மகன் பிரவீன் மட்டும் தந்தைக்கு ஊக்கம் கொடுத்தார். இதையடுத்து, தர்மராஜன் கோழிக்கோட்டிலுள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Japan Karate Shotokan Academy- யில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த அகாடமியின் தலைமை ஷென்ஷாய் முதல் இளம் உறுப்பினர்கள் வரை, தர்மராஜனுக்கு ஊக்கமளிக்கவே, கடந்த 6 ஆண்டு காலம் கடுமையான பயிற்சிக்குப் பிறகு, தற்போது கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அதிக வயதில் கராத்தேவில் பிளாக்பெல்ட் வாங்கிய முதல் இந்தியர் இவர்தான்.
72 வயதில் பிளாக் பெல்ட் பெற்றது குறித்து தர்மராஜன் கூறியதாவது, ''இது எனது நீண்ட காலக் கனவு. ஓய்வுக்குப் பிறகு, தினமும் காலையில் வாக்கிங் செல்வேன். மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றேன். எனக்கு விதைப்பையில் பிரச்னை இருந்தது. இதனால் காரத்தே கற்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. 'இந்த வயதில் உனக்கு தேவையா?' என்று உள்மனமும் கேட்கத்தான் செய்தது. எனினும், 'முடியும்' என்கிற நம்பிக்கை இருந்தது. நான் கராத்தே கற்கத் தொடங்கிய போது, கொரோனா லாக்டவுன் வந்தது. அதற்கு பிறகு, எனக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி காயமும் ஏற்பட்டது. பிளாக்பெல்ட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது, எனது மனைவிக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு மாதம் பெட்ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மனைவியை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலிலும், நான் மனம் தளரவில்லை.
இறுதிக்கட்ட தேர்வின் போது, முதலில் 100 புஷ்அப்ஸ் எடுக்க வேண்டும். பின்னர், தொடர்ச்சியாக 6,7 வீரர்களுடன் மோத வேண்டும். 'என்னால் முடியுமா?' என்ற சந்தேகம் மீண்டும் எழுந்தது. அப்போது, எனது ஷென்ஷாய், 'சோர்ந்துவிடக் கூடாது... உங்களால் முடியும்' என்று கூறி மிகவும் ஆதரவாக இருந்தார். எனது வயதைக் காரணம் காட்டி எனக்கு அவர்கள் எந்தச் சலுகையும் வழங்கவில்லை. இறுதியாக, இன்று பிளாக்பெல்ட்டும் வாங்கி விட்டேன் '' என்கிறார்.
தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிடும் தர்மராஜன் 5 கி.மீ தொலைவு நடக்கிறார். சிறிது நேரம் உடற்பயிற்சிக்குக் பிறகு காலை உணவு சாப்பிடுகிறார். சாதாரண காலை உணவுதான். சுகர் இல்லாத டீ மட்டுமே எடுத்துக் கொள்கிறார். பெரித்த உணவு, இனிப்புகள் சாப்பிடுவதில்லை. வீட்டு வேலைகளுக்குப் பிறகு, பகவத் கீதை படிப்பது வாடிக்கையாக இருக்கிறது. மதிய உணவாக சாதம் அல்லது பலாப்பழம் சாப்பிடுகிறார். இரவு உணவு 8 மணிக்கு முன்னதாக, சிறிது சாதத்துடன் முடிந்துவிடுகிறது. தினமும் 7 மணி நேரம் நன்றாக உறங்குகிறார். அதோடு, தினமும் யோகா செய்வதும் உண்டு.
ஒழுக்கமான வாழ்க்கை முறைதான் தர்மராஜனை இந்த வயதிலும். கராத்தேவில் பிளாக்பெல்ட் வாங்க வைத்துள்ளது என்பதுதான் நிச்சயமான உண்மை!