FIFA உலகக் கோப்பையை, இம்முறையாவது தொடுவாரா ரொனால்டோ? #FIFA

FIFA உலகக் கோப்பையை, கையால் அனைவராலும் தொட்டுப் பார்த்து விட முடியாது. உலகக் கோப்பையை கையில் எடுக்கும் உரிமை ஒரு சிலருக்கே உண்டு.
FIFA world cup
FIFA world cup file
Published on

உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்கான போர்ச்சுகல் அணியில் 41 வயதான ரொனால்டோ இடம் பெற்றுள்ளார். அவரால் உலகக் கோப்பையைத் தொட்டு பார்க்க முடியுமா?

பீலே - மரடோனா, ரொனால்டோ- ஜினடேன் ஜிடேன், மெஸ்ஸி - கிறிஸ்டியானோ ரொனால்டோ... இவர்கள் நாம் அறிந்த காலக்கட்டத்து கால்பந்து ஜம்பவான்கள். இந்த 6 பேரில் ரொனால்டோவைத் தவிர அனைவருமே, உலகக் கோப்பையை கையில் வாங்கி அழகு பார்த்து விட்டனர். பல இறுதி ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்திருந்த அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி கூட, கத்தார் உலகக் கோப்பை தொடரில் வென்று FIFA கோப்பையை கையில் ஏந்தி, பெருமை கண்டு விட்டார். ஆனால், பல சாதனைகளைப் படைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவால் இன்று வரை, ஃபிபா உலகக் கோப்பையை, கையால்கூடத் தொட்டுப் பார்க்க முடியாத நிலை உள்ளது.

ஏனென்றால் 6 கிலோ எடை கொண்ட 18 கேரட் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஃபிபா உலகக் கோப்பையை எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாலும், கையால் தொட்டுப் பார்த்து விட முடியாது. உலகக் கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியன் அணியில் இடம் பிடித்த வீரர்கள், பயிற்சியாளர்கள், உலகக் கோப்பையை வென்ற அல்லது நடத்தும் நாட்டின் பிரதமர் அல்லது அதிபர், உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் வீரர்கள், ஃபிபா தலைவர் மற்றும் ஒருசில ஃபிபா அதிகாரிகள் மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையைக் கையால் தொட உரிமை கொண்டவர்கள்.

உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் தொடங்குவதற்கு முன்னர், பல நாடுகளுக்கும் கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அப்போது, உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த வீரர் ஒருவரும் கோப்பையுடன் பயணிப்பார். அந்த வீரர்தான் கோப்பையைக் கையில் எடுத்து மக்களிடத்தில் அறிமுகப்படுத்துவார்கள். இப்படி, உலகக் கோப்பையை கையால் தொட பல கட்டுப்பாடுகள் உள்ளன.

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, இதுவரை கோப்பையை வென்றதில்லை. கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இம்முறையாவது, வென்று உலகக் கோப்பையை கையால் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற அளவிடமுடியாத ஆவல் உள்ளது. தற்போது, உலகக் கோப்பையை வெல்ல 41 வயதான ரொனால்டோவுக்கு கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம்... வரும் ஜூன் 11ம் தேதி மெக்ஸிகோவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான போர்ச்சுகல் அணியில் அவருக்கு இடமும் கிடைத்துள்ளது. ரொனால்டோ விளையாடும் 6வது உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.

ronaldo
ronaldo instagram

வரும் உலகக் கோப்பை தொடரில் 'கே' பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி ஜூன் 17ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் காங்கோ 23ம் தேதி உஸ்பெஸ்கிஸ்தான், 27ம் தேதி கொலம்பியா அணிகளுடன் மோதுகிறது. ''சர்வதேச கால்பந்து ஆட்டங்களில் 143 கோல்களை அடித்துள்ள ரொனால்டோவுக்காக இந்த உலகக் கோப்பையை நாங்கள் வெல்லுவோம்'' என்று போர்ச்சுகல் அணியின் மிட்ஃபீல்டர் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் (Bruno Fernandes) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ''ரொனால்டோவுக்காக இந்த உலகக் கோப்பையை வெல்வது அற்புதமான விஷயமாகும். எங்களால் இதனைச் செய்ய முடியும். போர்ச்சுகல் நாட்டுக்காக மட்டுமல்ல, கால்பந்து உலகுக்கு ரொனால்டோ செய்த அளப்பரிய காரியங்களுக்காக நாங்கள் கண்டிப்பாக உலகக் கோப்பையை வென்று காட்டுவோம்'' என்கிறார்.

இந்தியாவில் உலகக் கோப்பை ஒளிபரப்பாகுமா?

2026 உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா, சீனா நாடுகளில் டி.வி.உரிமம் வழங்கப்படாமல் இருந்தது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு சென்ற சமயத்தில், ஃபிபா அமைப்புடன் சைனா மீடியா குரூப் போட்டியை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால், சீனாவில் போட்டியை ஒளிபரப்ப தடை நீங்கியது. கடந்த கத்தார் உலகக் கோப்பை தொடரை சீனாவில் 50 கோடி பேர் பார்த்தனர்.

அதேவேளையில், இந்தியாவில் உலகக் கோப்பை தொடரை ஒளிபரப்பும் உரிமத்தை இன்று வரை, எந்த டி.வி. நிறுவனமும் பெறவில்லை. இது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த ஃபிபா மீடியா குழு விரைவில் இந்தியா வரவுள்ளதாக தகவல் உள்ளது. கத்தார் உலகக் கோப்பை தொடரை, இந்தியாவில் 8 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Puthuyugam
www.puthuyugam.com