இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் அவரின் மனைவியான பாடகி விக்டோரியா ஆகியோர் இந்த உலகத்தின் செலிபிரட்டி தம்பதிகளில் முக்கியமானவர்கள். இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்களும் கடைசி செல்லக்குட்டியாக Harper Seven என்ற மகளும் உண்டு. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நீண்ட காலம் விளையாடி வந்த, பெக்காம் ஒரு ப்ரீ கிக் ஸ்பெஷலிஸ்ட். உலகின் முன்னாணி கால்பந்து கிளப்புகளான ரியல் மாட்ரிட், ஏ.சி.மிலன் , பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்ஸி போன்ற அணிக்ளுக்காகவும் டேவிட் பெப்காம் விளையாடியுள்ளார். இங்கிலாந்து கால்பந்து அணிக்காகவும் 13 ஆண்டுகள் விளையாடினார். இவர் கேப்டனாக இருந்தபோது, இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்டது. ஆனாலும் அந்தக் கனவு நிறைவேறவில்லை.
2013ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து பெக்காம் முற்றிலும் ஓய்வுப் பெற்றார். இந்த நிலையில், Sunday Times வெளியிட்டுள்ள 2026ம் ஆண்டுக்கான பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் மன்னர் சார்லஸை பின்னுக்குத் தள்ளியுள்ளார் டேவிட் பெக்காம். கால்பந்து உலகில் கவர்ச்சிகரமான ஆட்டக்காரராக பெக்காம் கருதப்பட்டார். இதனால், அவருக்கு விளம்பர வாய்ப்புகள் விளையாடிய காலத்திலும் கொட்டியது. ஓய்வுக்கு பிறகும், தொடர்ச்சியாக விளம்பரங்களில் நடித்து வந்தார். இதனால் பணம் பல விதங்களில் அவரின் வங்கிக் கணக்கை நிரப்பியது.
பெக்காமின் மனைவி விக்டோரியா 'ஸ்பைஸ் கேர்ள்' குழுவில் இடம் பெற்ற 5 பாடகிகளில் ஒருவர். தற்போது,அதில் இருந்து விலகி விட்டாலும்,ஃபேஷன் துறையில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.விக்டோரியாவும் இன்னொரு பக்கம் வருவாய் ஈட்ட, பெக்காம் தம்பதியின் சொத்து மதிப்பு 15,155. கோடியாக உயர்ந்துள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்து மதிப்பே 8,696 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பிரிட்டனின் முதல்'பில்லியனர் ஸ்போர்ட்ஸ்மேன்' என்ற பெருமையும் பெக்காமுக்கு கிடைத்துள்ளது.
பிரிட்டன் மன்னரை விட இந்த செலிபிரட்டி தம்பதியை பணக்காரர்களாக மாறியதற்கு சரியான திட்டமிடலும் நிதித்துறை பற்றிய நல்ல அறிவும்தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். டேவிட் பெக்காம் ஓய்வுக்கு பிறகு, கால்பந்து விளையாட்டில் சம்பாதித்த பணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து அணியான,இன்டர் மியாமியில் முதலீடு செய்தார். அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி இந்த அணிக்குதான் விளையாடி வருகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு லயனல் மெஸ்ஸி இணைந்த பிறகு, இன்டர்மியாமியின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. உலகின் பாப்புலரான கால்பந்து அணிகளில் ஒன்றானது. இன்டர்மியாமியின் மதிப்பு மட்டும் தற்போது 12 ஆயிரம் கோடியாகும். அமெரிக்காவில் மேஜர்லீக் சாக்கர் தொடரில், இன்டர்மியாமி மிகவும் மதிப்புமிக்க அணியாக பார்க்கப்படுகிறது. விளம்பர வருமானம், டிக்கெட் விற்பனை, அணியின் ஜெர்சி போன்றவற்றின் விற்பனையும் பல மடங்கு உயர்ந்தது.
அதேவேளையில், விக்டோரியா பெக்காம் ஃபேஷன் மற்றும் அழகுசாதன வர்த்தகத்தில் ஈடுபட்டார். மேலும் பெக்காம் குடும்பத்துக்கு சர்வதேச பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் மூலமும் பணம் கொட்டத் தொடங்கியது. அதோடு, நெட்பிளிக்ஸ் நிறுவனம் டேவிட் பெக்காமின் கால்பந்து வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு ஆவணத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்தத் தொடர், சர்வதேச அளவில் இளம் தலைமுறையை பெரிதும் கவர்ந்தது. இதன் வழியாகவும் பெக்காமுக்கு பணம் கிடைக்கிறது.
கால்பந்தில் இருந்து விடை பெற்று விட்டாலும், இப்போதும் பெக்காம் உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் செலிபிரிட்டியாக பார்க்கப்படுகிறார். இதனால் இவரைப் பயன்படுத்திக் கொள்ள ஏராளமான நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அடிடாஸ், Hugo Boss போன்ற நிறுவனங்களுக்கு பெக்காம் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். ஃபேஸ்புக்கில் மட்டும் பெக்காமை 5.7 கோடி பேர் பின்தொடருகின்றனர்.