'எனது உயிருக்கு ஏதாவது ஆனால்...!'- வினேஷ் போகத் அச்சம்

'இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களின் நானும் ஒருத்தி' என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
'எனது உயிருக்கு ஏதாவது ஆனால்...!'- வினேஷ் போகத் அச்சம்
vinesh Phogat
Published on

புகழ்பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான ஆறு பேரில் தானும் ஒருத்தி என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சங்கத் தலைவராக பிரிஜ் பூஷன் ஷரன் சிங் என்பவர் இருந்தார். இவர் ஆறு முறை பாஜக சார்பில் எம்.பியாக இருந்தவர். கடந்த 2024ம் ஆண்டு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2023ம் ஆண்டு சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, ​​சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் போன்ற முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் சிங்குக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், வினேஷ் போகத் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பிரிஜ் பூஷன் ஷரன் சிங் தன்னையும் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வினேஷ் போகத் அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, ''உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் நடைபெறும் தேசிய மல்யுத்த போட்டியின் மூலம் மீண்டும் நான் மல்யுத்தக் களத்திற்கு திரும்புகிறேன். இப்போது, நான் 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகிறேன். இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், சிங்குக்கு நெருக்கமான நண்பருக்குச் சொந்தமான ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்படுகிறது.

சிங் மீது புகார் அளித்த ஆறு மல்யுத்த வீராங்கனைகளில் நானும் ஒருத்தி. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சிங்குடன் தொடர்புடைய ஒரு இடத்தில் போட்டி நடைபெறுவது எனக்கு அழுத்தத்தைத் தருகிறது. இந்தப் போட்டி தொடர்பாக பணியாற்றும் பெரும்பாலானோர் சிங்குடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருக்கலாம் . அவர்களால், போட்டிகளின் முடிவுகள் மாறக் கூடும். பிரச்சனைகளைக்கூட ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறேன்.

vinesh and  Brij Bhushan Sharan Singh
vinesh and Brij Bhushan Sharan Singh

எனக்கு எந்த வித சலுகையோ அல்லது சிறப்பு கவனிப்போ வேண்டாம். விளையாட்டு வீரர்களின் கடின உழைப்புக்கான பலன் எங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மட்டுமே எனது விருப்பம். போட்டியின் போது எனக்கோ, எனது அணிக்கோ அல்லது ஆதரவாளர்களுக்கோ ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு இந்திய அரசே பொறுப்பாகும். ஊடகங்களும் விளையாட்டு ஆர்வலர்களும் போட்டி நடக்கும் இடத்துக்குத் திரளாக வந்து எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எங்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடந்த போது, மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த ஆணவத்தால், சிங் எங்களை அப்படி நடத்தினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுபவர்களின் அடையாளங்களை மறைக்கும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பற்ற இந்தச் சூழலில் நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறியிருந்தார். ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரையும் அவர் பெற்றிருந்தார்.ஆனால், இறுதி மோதலுக்கு முன்னதாக, உடல் எடை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால், இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மல்யுத்தத்தில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். அப்போது, 'நான் தோற்றுவிட்டேன்' என்று வினேஷ் போகத் உருக்கமாக கூறியிருந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஹரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். சில மாதங்களுக்கு முன், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகன் பிறந்த தருணத்தில், மல்யுத்தப் போட்டிக்கு மீண்டும் திரும்புவதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் போட்டியிட போவதாகவும் வினேஷ் போகத் தெரிவித்திருந்தார்.

Puthuyugam
www.puthuyugam.com