2026ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது. உலகக்கோப்பையில் இந்த முறை 48 அணிகள் பங்கேற்கின்றன. பல குட்டி நாடுகளும் களம் காணத் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் போட்டிக்கு தயாராக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் `ஃபிஃபா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், உலகின் மக்கள் தொகை மிகுந்த இரு நாடுகளில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியா மற்றும் சீனாவில், அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நிறுவனத்துக்கும் டி.வி உரிமம் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து 2026 உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமத்தைப் பெற சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், 2026 மற்றும் 2030 உலகக் கோப்பைத் தொடர்களை ஒளிபரப்புவதற்கு ஃபிஃபா 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை கோரியிருந்தது. இதனால், ஃபிஃபா இந்த ஏலத்தொகையை ஏற்க மறுத்து விட்டது. கடந்த 2022ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை ஒளிபரப்ப ரிலையன்ஸ் நிறுவனம் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியிருந்தது. அதே அளவு தொகையை ஃபிஃபா எதிர்பார்ப்பதாக தெரிகிறது. சோனி கார்ப்பரேஷனும் ஃபிஃபாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், இதிலும் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கு, முக்கியக் காரணி போட்டி நடைபெறும் நேரம் ஆகும். இந்தப் போட்டித்தொடர் வட அமெரிக்காவில் நடத்தப்படுவதால், இந்தியாவில் பல போட்டிகள் நள்ளிரவில்தான் ஒளிபரப்பாகும். இந்தியாவில் மக்கள் உறங்கும் நேரம் இது. இதன் காரணமாக, பார்வையாளர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. ஒளிபரப்பு நிறுவனங்கள் விளம்பரங்களைப் பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன.
சீனாவுக்கும் டி.வி உரிமை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடந்த 2018 மற்றும் 2022-ம் ஆண்டு போட்டித் தொடர்களை சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சைனா சென்ட்ரல் டெலிவிஷன் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மட்டும் 20 கோடி தீவிர கால்பந்து ரசிகர்கள் உள்ளனர்.
ஒளிபரப்பு ஒப்பந்தங்கள் பொதுவாக, போட்டி தொடங்கும் காலத்துக்கு வெகு முன்னதாகவே உறுதி செய்யப்பட்டு விடும். ஏனென்றால், உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்தல், விளம்பரங்களைப் பெறுவதற்கு அதிக காலம் தேவை. ஆனால், போட்டி தொடங்க இன்னும் ஐந்து வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளில் போட்டி உரிமம் வழங்கப்படாததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற்றது. ஜியோ சினிமா ஆப் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனங்கள் போட்டிகளை ஒளிபரப்பின. டிஜிட்டல் தளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 பில்லியன் நிமிடங்கள் பார்வையிடப்பட்டது. மொத்தம் 11 கோடி பேர் டிஜிட்டல் தளத்தில் போட்டிகளைப் பார்த்தனர். அர்ஜெண்டினா - பிரான்ஸ் மோதிய இறுதி ஆட்டத்தை மட்டும் 3.2 கோடி பேர் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் இல்லையென்றாலும், உலகக் கோப்பை கால்பந்து தொடரை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பார்கள். தற்போது, இந்தியாவில் போட்டி ஒளிபரப்பாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால், கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.