இந்திய குடியுரிமையை மறுத்த ரஷீத் கான்... காரணம் என்ன?

ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீத் கானுக்கு கிரிக்கெட் உலகின் இரு முன்னணி அணிகள் தங்கள் நாட்டுக்கு விளையாடும்படி அழைப்பு விடுத்தன. ஆனால், அவர் மறுத்துள்ளார். காரணம் என்ன?
Rashid Khan
Rashid Khan Rashid Khan Fans Page
Published on

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனும் சிறந்த சுழற்பந்துவீச்சாளருமான ரஷீத் கான், தனக்கு இந்திய அணிக்காக விளையாட அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான், ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர், Rashid Khan: From Streets to Stardom என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில், தனக்கு இந்தியக் குடியுரிமை அளித்து, இந்திய அணிக்கு விளையாட வைக்க முயற்சி நடந்தாகவும், ஆனால் தான் தனது சொந்த நாட்டுக்கு உண்மையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதே போல, ஆஸ்திரேலிய அணிக்கு தன்னை விளையாட வைக்க முயற்சி நடந்ததாகவும் அந்தப் புத்தகத்தில் ரஷீத்கான் தெரிவித்துள்ளார்.

அந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது, ''2023ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நான் விளையாடிக் கொண்டிருந்த போது என்னை பி.சி.சி.ஐ அமைப்பைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சந்திக்க விரும்பினார். நான் அவரைச் சந்தித்தேன். என்னிடத்தில் அவர், 'ஆப்கானிஸ்தானில் சூழ்நிலை சரியில்லை. இங்கே வந்துவிடுங்கள். இந்தியக் குடியுரிமை வாங்கி தருகிறோம். இந்திய அணிக்காக விளையாடுங்கள்' என்று நேரடியாக கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. பின்னர், சிரித்துக் கொண்டே, 'உங்கள் அழைப்புக்கும் அன்புக்கும் நன்றி. ஆனால், நான் ஆப்கானிஸ்தான் அணிக்காக மட்டுமே விளையாடுவேன். எனது தாய்நாட்டு அணிக்காக விளையாடவில்லையென்றால், வேறு எந்த அணிக்காகவும் நான் விளையாட விரும்பவில்லை என்று கூறி விட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தனது சுயசரிதை புத்தகத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அழைப்பு குறித்து விரிவாக எதையும் குறிப்பிடவில்லை.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹாரின் புழுதி படிந்த தெருக்களில் இருந்து உலகின் மிகவும் விரும்பப்படும் டி20 வீரர்களில் ஒருவராக உருவெடுத்தது வரை, ரஷீத்தின் கிரிக்கெட் பயணம் குறித்து அந்த புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

Rashid Khan
Rashid KhanRashid Khan facebook

ஆப்கானிஸ்தான் அணி மீது ரஷீத்கான் காட்டும் விசுவாசம் பற்றி இதற்கு முன்னரும் செய்திகளில் அடிபட்டது. கடந்த 2018ம் ஆண்டு ரஷீத்கான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் அவர் 10 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதோடு, பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார். தன்னை மிகச்சிறந்த அற்புதமான ஆல்ரவுண்டர் என்று அவர் நிரூபித்த தருணம் அது. இந்த சமயத்தில் ரஷீத் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டுமென்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். சிலர், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்திருந்தனர். இதற்கு, பதிலளித்த சுஷ்மா, 'உள்துறை அமைச்சகம்தான் குடியுரிமை வழங்கும் விவகாரத்தை பார்த்துக் கொள்கிறது' என்று தன்னை டேக் செய்தவர்களுக்கு பதிலளித்தார்.

இதைப் பற்றி கேள்விபட்ட அப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர், அஷ்ரஃப் கனி, 'ரஷீத் கான் ஆப்கானிஸ்தானின் பெருமைக்குரிய வீரர். அவரை, நாங்கள் எந்த நாட்டுக்கும் விட்டு கொடுக்க மாட்டோம். அவர் எங்களது சொத்து'' என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

Puthuyugam
www.puthuyugam.com