வல்லவனுக்கு வல்லவன்! உசைன் போல்ட்டை மிஞ்சுவாரா கௌட்? #GoutGout

18 வயதிலேயே உசைன் போல்ட்டை மிஞ்சும் வகையில், ஒரு தடகள வீரர் ஓடத் தொடங்கியுள்ளார். இவர், உசேன் போல்ட்டின் இமாலய சாதனைகளை முறியடிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
usain bolt and gout gout
usain bolt and gout gout
Published on

கடந்த 2009ம் ஆண்டு பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத இரு சாதனைகளைப் படைத்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தை 10 விநாடிகளுக்குள் நிறைவு செய்த ஒரு சில தடகள வீரர்களுள் உசேன் போல்ட்டும் ஒருவர். முன்னதாக, 1968ம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை அமெரிக்க வீரர் ஜிம் ஹைன்ஸ் 9.95 விநாடிகளில் கடந்திருந்தார். இவர், 100 மீட்டர் ஓட்டத்தை 10 விநாடிகளுக்குள் கடந்த முதல் தடகள வீரர் ஆவார்.

அடுத்து, 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 விநாடிகளில் உசேன் போல்ட் கடந்தார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது என்கிற எண்ணம்தான் பல தடகள வீரர்கள் மத்தியில் உள்ளது.

ஆனால், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதைப் போல உசேனின் சாதனையை முறியடிக்க ஒருவர் பிறந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. தற்போது, அவருக்கு 18 வயது மட்டுமே ஆகிறது. அந்த வீரரின் பெயர் கௌட் கௌட். (Gout Gout) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

சமீபத்தில் சிட்னியில் ஆஸ்திரேலிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 200 மீட்டர் ஓட்டத்தை கௌட் 19.67 விநாடிகளில் கடந்து பிரமிக்க வைத்தார். தற்போது, அவருக்கு 18 வயதேயாகும் நிலையில், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது 17 வயதில் கடந்த 2004ம் ஆண்டு உசேன்போல்ட் 200 மீட்டர் ஓட்டத்தை 19.93 விநாடிகளில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உசேன் போல்ட்டை, கௌட் மிஞ்சுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2024ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பள்ளி அளவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தை 20.04 விநாடிகளில் 16 வயது கௌட் ஓடியிருந்தார். கடந்த 2003-ம் ஆண்டு பார்படாஸில் 16 வயதில் போல்ட் 20.13 விநாடிகளில் 200 மீட்டர் ஓட்டத்தை கடந்தார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதனால், வருங்காலத்தில் உசேன் போல்ட்டின் சாதனைகளை இந்த இளம் வீரர் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

usain bolt
usain bolt

சூடானை பூர்வீகமாக கொண்ட Gout Gout ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் பெற்றோருடன் வசிக்கிறார். உசேன் போல்ட்டுடன் தன்னை ஒப்பிடுவது குறித்து அவர் கூறியதாவது, ''எனக்கு இப்போதுதான் 18 வயது ஆகியுள்ளது, அதனால் , என்னால் நிச்சயமாக இன்னும் வேகமாக ஓட முடியும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து 20 விநாடிகளுக்குள் இலக்கை எட்டுவதுதான் முக்கியம். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இதற்காகத்தான் நான் காத்திருந்தேன். ஆஸ்திரேலியாவில் நம்பமுடியாத அளவுக்கு அற்புதமான தடகள வீரர்கள் நிரம்ப உள்ளனர். என்னுடன் ஓடிய Aidan Murphy என்ற மற்றொரு வீரரும் 200 மீட்டர் ஓட்டத்தை 20 விநாடிகளுக்குள் ஓடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இரு ஆஸ்திரேலியர்கள் 20 விநாடிகளுக்குள் 200 மீட்டர் ஓட்டத்தை ஓடியுள்ளனர். இது உண்மையிலேயே எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. இன்னும் வேகமாக ஓடுவதற்குத் தேவையான வேகமும் உடல் திறனும் என்னிடம் இருக்கிறது. எனவே, இது நிச்சயமாக ஒரு சிறந்த உணர்வைத் தருகிறது, மேலும் பல சாதனைகள் செய்ய நான் தயாராகவே உள்ளேன்'' என்கிறார்.

உசேன் போல்ட்டின் சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா என்கிற கேள்வி எப்போதுமே தடகள உலகில் எழுவது உண்டு. அதற்கான, சாத்தியக்கூறுகள் இப்போது தென்படத் தொடங்கியுள்ளதாக தடகள நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது கௌட்டிற்கு 20 வயது ஆகியிருக்கும். உலகம் அவரிடம் இருந்து பெரியதாக எதிர்பார்க்கலாம். கௌட்டின் ஓட்டத்தைக் காண உலகமே காத்திருக்கும். உசேன் போல்ட்டும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்!

Puthuyugam
www.puthuyugam.com