விரைவில் இந்திய அணியில் சூர்யவன்ஷி? #VaibhavSooryavanshi

சூர்யவன்ஷிக்கு 15 வயதாகி விட்டதால், விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது... எப்போது?
vaibhav suryavanshi
vaibhav suryavanshi
Published on

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. 15 வயது இளம்புயல். புயல் என்றால் வெறும் பேச்சுக்கு அல்ல. நிஜமாகவே புயல் ஆட்டம்தான்.

ராயல்ஸின் முதல் போட்டியின் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. வைபவ் சூர்யவன்ஷி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டார். இந்த ஆட்டத்தில் சூரியவன்ஷி வெறும் 15 பந்துகளில் அரை சதமடித்து மிரட்டினார். 26 பந்துகளில் 78 ரன்கள் (Strike Rate: 300) குவித்து அவுட் ஆனார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். அதற்கடுத்து மும்பையுடன் 14 பந்துகளி. 39 (Strike Rate: 278). குஜராத் டைட்டன்ஸுடன் 18 பந்துகளில் 31 (Strike Rate: 172) கடந்த மார்ச் 30ம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திலும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதடித்தார். இந்த ஆட்டத்தில், 17 பந்துகளில் 52 ரன்கள் (Strike Rate: 305) எடுத்து சூரியவன்ஷி ஆட்டமிழந்தார்.

புவனேஷ்குமார், ஜோஸ் ஹேஸ்லிவுட், க்ருனால் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தலை சிறந்த பந்துவீச்சாளர்களை மிக எளிதாக சூர்யவன்ஷி கையாள்கிறார். சூரியவன்ஷியின் ஆட்டத்தை பார்த்து வியந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், '' உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி விளையாடுகிறார். திறமையான பந்துவீச்சாளர்களை அவர் ஆதிக்கம் செய்கிறார் '' என்று வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஐ.பி.எல் தலைவர் அருண் துமால், ''இத்தகைய இளம் வயதில் இப்படியொரு திறமையை பார்ப்பது அரிதிலும் அரிது'' என்று சூர்யவன்ஷி குறித்து வியப்பு தெரிவித்துள்ளார்.

ரவிசாஸ்திரி, ஏபிடி வில்லியர்ஸ், மேத்யூ ஹேடன், சச்சின். விராட் கோலி போன்ற ஜாம்பவான்களும் சூர்யவன்ஷியின் திறமையை கண்டு வியந்து போயுள்ளனர்.

இதையடுத்து, சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய அணிக்கு களமிறக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சஞ்சய் குமார் ஜகா, ''வயதை கொண்டு ஒருவரின் திறமையை மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. உடனடியாக. இந்திய அணிக்கு சூர்யவன்ஷியை களமிறக்க வேண்டும். பீலே, போரிஸ் பெக்கர், மைக்கேல் பெல்ப்ஸ், மெஸ்ஸி போன்று ஒரு விளையாட்டு ஐகானாக சூர்யவன்ஷி உருவாக வாய்ப்புள்ளது . வயதைக் காரணம் காட்டி அவரை நிராகரிக்கக் கூடாது'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐசிசி விதிகளின்படி, 15 வயது ஆனவர்கள்தான் சர்வதேச போட்டியில் களம் இறக்கப்பட வேண்டும். கடந்த மார்ச் 27 ம் தேதி சூர்வன்ஷிக்கு 15 வயது பிறந்துவிட்டது. எனவே, இந்திய அணிக்காக சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டால், தேசிய அணிக்கு தேர்வான இளம் வீரர் என்ற புகழைப் பெறுவார். சச்சின் சர்வதேச ஆட்டத்தில் களமிறங்கும் போது, அவருக்கு வயது 16 ஆண்டுகள் 205 நாட்கள் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சச்சின் சாதனையை சூர்யவன்ஷி முறியடிக்க வாய்ப்புள்ளது.

vaibhav suryavanshi with virat
vaibhav suryavanshi with virat

அதேவேளையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ளே, ''இளம்வயதிலேயே இந்திய அணியில் சேர்த்து சூர்யவன்ஷிக்கு பாரத்தை கொடுக்க வேண்டாம். நாம் வைக்கும் அதீத எதிர்பார்ப்பு அவருக்கு ஸ்ட்ரெஸ்ஸை கொண்டு வரும்'' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய தேர்வு கமிட்டி தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரும் சூர்வன்ஷியின் ஆட்டத்தை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்தீபூரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை , 13 வயதில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது அணிக்கு தேர்வு செய்தார். 14 வயதான போது, ஐ.பி.எல். ஆட்டத்தில் களமிறக்கப்பட்டார். முதல் தொடரிலேயே, 35 பந்துகளில் சதமடித்து சூரியவன்ஷி கிரிக்கெட் உலகை அதிர வைத்தார். தற்போதைய ஐ.பி.எல் தொடரிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான வீரராக அவர் உள்ளார்.

Puthuyugam
www.puthuyugam.com