நான்கு முறை உலகச் சாம்பியனான இத்தாலி அணி 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. இதனால், அந்த நாட்டு ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
2026ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது. இதற்காக, கடைசிக்கட்ட தகுதிச் சுற்று ஆட்டங்கள் மார்ச் 31ம் தேதி உலகின் பல நகரங்களில் நடைபெற்றன. இத்தாலி அணி தனது கடைசி பிளே-ஆப் ஆடடத்தில் போஸ்னியாவிலுள்ள செனிகா நகரில் போஸ்னியா அணியுடன் மோதியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் மற்றும் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. தொடர்ந்து, பெனால்டி வாய்ப்பில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோல்வியைத் தழுவியது.
இதனால், நான்கு முறை உலகச் சாம்பியனான இத்தாலி அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை. முன்னதாக, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பைகளிலும் இத்தாலி பங்கேற்கவில்லை. 1934, 1938, 1982 மற்றும் 2006 என நான்கு முறை கோப்பையை வென்ற இத்தாலி, மிக மோசமான சாதனையாக இது பார்க்கப்படுகிறது. போஸ்னியா கடைசியாக 2014ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் நடைபெற்ற மற்றொரு தகுதி சுற்று ஆட்டத்தில் ஈராக் அணி, பொலிவியா அணியை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 48வது மற்றும் கடைசி அணியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இந்த அணி (1986) 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக் உலகக் கோப்பைக்கு முன்னேறியதையடுத்து, அந்த நாட்டில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. உலகக் கோப்பையில் பிரிவு ஐ- யில் ஈராக் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் வலிமையான பிரான்ஸ் , நார்வே, செனகல் அணிகள் உள்ளன.
மற்றொரு தகுதி சுற்று ஆட்டத்தில் காங்கோ அணி ஜமைக்காவை ஒரு கோல் அடித்து தோற்கடித்தது. இந்த அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. இதனால், காங்கோ விழாக் கோலம் பூண்டது. உடனடியாக, ஏப்ரல் 1ம் தேதி நாட்டில் பொது விடுமுறை விடப்பட்டது. மக்கள் காங்கோவின் வெற்றியை ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.
ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு முன்னேறியது. பிற ஆட்டங்களில் துருக்கி கொசோவா அணியையும் செக் குடியரசு டென்மார்க் அணியையும் வீழ்த்தி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிந்து விட்டது. இனி, உலகக் கோப்பைக்கு முன்னதாக, நட்பு மற்றும் பயிற்சி ஆட்டங்களில் அணிகள் விளையாடவுள்ளன.
'ஈரான் பங்கேற்பது உறுதி' - பிஃபா தலைவர்
உலகக்கோப்பையில் இந்த முறை 48 அணிகள் பங்கேற்கின்றன. உலக ரேங்கில் 20வது இடத்திலுள்ள ஈரான் அணி 'சி' பிரிவில் பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. லீக் சுற்றில், ஈரான் அணி ஆடும் மூன்று போட்டிகளுமே அமெரிக்க மண்ணில்தான் நடைபெறுகிறது. ''ஈரானுடன் அமெரிக்கா போரில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க மண்ணில் ஆடினால் , தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது, எனவே தங்கள் அணியின் ஆட்டங்களை மெக்சிகோ நாட்டுக்கு மாற்ற வேண்டும்'' என்று ஈரான் கால்பந்து சங்கம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்க ஃபிஃபா மறுத்தது. எனினும், ஈரான் அணியை உலகக் கோப்பையில் பங்கேற்க வைக்க பிஃபா முயன்று வந்தது. அதற்கு, வெற்றியும் கிடைத்துள்ளது.
இரு நாட்களுக்கு முன்பு, துருக்கியில் அன்ட்லியா நகரில் ஈரான் - கோஸ்டாரிகா அணிகள் நட்பு ஆட்டத்தில் விளையாடின. இந்த ஆட்டத்தைக் காண பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபேன்டினோ வந்திருந்தார். போட்டி முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' உலகக் கோப்பையில் ஈரான் நாடு பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வலுவான ஈரான்அணி பங்கேற்பது உலகக் கோப்பைக்கு நல்லது'' என்றார். அதே வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'ஈரான் அணி அமெரிக்காவுக்கு வர கூடாது. அதுதான், உங்கள் உயிருக்கும் வாழ்க்கைக்கும் நல்லது. எங்களால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது'' என்று கூறியிருந்தார்.
ஈரான் அணி ஜூன் 15ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.