'எனது 'பைத்தியக்காரத்தனம்' 37 மடங்காக உயர்ந்துள்ளது!'- விஜய் மல்லையா #RCB

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 450 கோடி முதலீடு செய்த போது, பலரும் என்னை 'பைத்தியக்காரன்' என்று விமர்சித்தனர்.
vijay mallya
vijay mallya
Published on

ஐ.பி.எல் தொடரில் நடப்புச் சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.16,500 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது தனக்கு மன நிறைவு தருவதாகவும்,இந்த அணியில் நான் 450 கோடி முதலீடு செய்த போது, பலர் என்னை 'கிறுக்கன் ' என்று விமர்சித்ததாகவும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிரிட்டனைச் சேர்ந்த எமர்ஜிங் மீடியா நிறுவனத்தின் தலைவரான மனோஜ் படாலே என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. 2008ம் ஆண்டு முதல் நேற்று முன்தினம் வரை, மனோஜ் படாலேதான் அந்த அணிக்கு உரிமையாளராக இருந்தார். தற்போது, இந்த அணியை அமெரிக்காவைச் சேர்ந்த கல் சோமானி என்ற தொழிலதிபர் ரூ. 15,286 கோடிக்கு வாங்கியுள்ளார். இன்ட்ராஎட்ஜ், அகாடமியான் போன்ற நிறுவனங்கள் இவருக்குச் சொந்தமானது. வால்மார்ட் குழுமத்தைச் சேர்ந்த ராப் வால்ட்டன், ஃபோர்ட் குழுமத்தைச் சேர்ந்த ஷெய்லா ஃபோர்ட் ஹெம்ப் ஆகியோர் இவரது நிறுவனங்களில் ஏராளமாக நிதி முதலீடு செய்துள்ளனர். இதனால், மறைமுகமாக வால்மார்ட் மற்றும் ஃபோர்ட் குழுமங்கள் ஐ.பி.எல் தொடருக்குள் நுழைந்துள்ளன என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இது, வருங்காலத்தில் ஐ.பி.எல் தொடரின் மதிப்பு இன்னும் அதிகரிக்க உதவிக்கரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஐ.பி.எல் தொடரின் ஒட்டு மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் அணியை (ஆடவர் , மகளிர் உள்ளடக்கியது) Diageo- வின் துணை நிறுவனமான யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்திடம் இருந்து ஆதித்யா பிர்லா குழுமம் ரூ. 16,729 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த அணியை ஆதித்யா பிர்லா குரூப், டைம்ஸ் ஆப் இந்தியா, போல்ட் வென்ச்சர்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள், கூட்டாக வாங்கியுள்ளன.ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குநர் ஆர்யமான் விக்ரம் பிர்லா, ஆர்.சி.பி அணியின் தலைவராகவும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சத்யன் கஜ்வானி, துணை தலைவராகவும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சி.பி விற்பனை வழியாக பி.சி.சி.ஐ அமைப்புக்கு ரூ. 750 கோடியும் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை வழியாக ரூ.670 கோடியும் பி.சி.சி.ஐக்கு கமிஷனாக கிடைக்கும். (அணியின் மொத்த மதிப்பில் 5 சதவிகிதம் )

Vijay mallya post
Vijay mallya post Welco

இந்த நிலையில், ஆர்.சி.பி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

''கடந்த 2008ம் ஆண்டு நான் இந்த அணியை ரூ. 450 கோடிக்கு வாங்கினேன். அப்போது, ஒரு கிரிக்கெட் அணியில் கோடிகளை கொட்டி முதலீடு செய்யும் எனது முடிவை பலரும் விமர்சித்தனர். கேலி செய்தனர். இது ஒரு ஆடம்பரச் செலவு என்றும் கூறினர். என்னை 'பைத்தியக்காரன்' என்றும் விமர்சித்தனர். இப்போது, அந்த "பைத்தியக்காரத்தனம்" கிட்டத்தட்ட 37 மடங்கு வளர்ந்து ரூ.16,500 கோடியாக உயர்ந்திருப்பதைக் காண்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

ஆர்.சி.பி அணியின் புதிய உரிமையாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியாக அந்த அணியின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து நான் பார்க்க விரும்புகிறேன். எனது முயற்சி 'ராயல் சேலஞ்ச் ' என்ற பிராண்டை உருவாக்குவதில்தான் இருந்தது. இதனால்தான், 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 'என்று எனது அணிக்கு பெயர் வைத்தேன். தற்போது, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழும் இளம் விராட் கோலியைத் தேர்ந்தெடுத்தது உட்பட. மறையாத நினைவுகளுடன் ஆர்.சி. பி எப்போதும் என் ரத்தத்தில் கலந்திருக்கும். எனது தலைமையின் கீழும் அதற்குப் பின்னரும் ஆதரவளித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. பெங்களூருவின் சிங்கமான ஆர்சிபி-க்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Puthuyugam
www.puthuyugam.com