ஐ.பி.எல் 2026: யார் யார் விளையாடமாட்டார்கள்..? #IPL2026

இந்த சீசன் ஐபிஎல்-லில் நீண்டகாலக் காயம், தனிப்பட்ட காரணங்கள் காரணமாக பங்கேற்க முடியாத வீரர்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்.
ஐ.பி.எல் 2026: யார் யார் விளையாடமாட்டார்கள்..? #IPL2026
Josh Hazlewood and Pat Cummins
Published on

ஐ.பி.எல் தொடர் வரும் 28ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. ஆனால், இந்தத் தொடரில் பல அணிகளின் முன்னணி வீரர்கள் ஆரம்பக்கட்ட ஆட்டங்களிலோ அல்லது முழுத் தொடரிலோ பங்கேற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீண்டகாலக் காயம், தனிப்பட்ட காரணங்கள் காரணமாக பங்கேற்க முடியாத வீரர்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்- நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா):

தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்த சீசன் முழுவதும் நாதன் எல்லிஸ் விளையாட மாட்டார். சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் இவர். சென்னை அணிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவருக்குப் பதிலாக ஓட்னெய்ல் பார்ட்மேன் (தென்னாப்பிரிக்கா), ஷான் அபோட் (ஆஸ்திரேலியா) மற்றும் ஜெரால்ட் கோட்ஸி (தென்னாப்பிரிக்கா) ஆகியோரை சென்னை அணி களம் இறக்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா):

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அடி முதுகுப் பகுதி காயத்திலிருந்து இன்னும் குணமடையவில்லை. இதனால், தொடக்கப் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். கம்மின்ஸ் இல்லாத நிலையில், அந்த அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஜாக் எட்வர்ட்ஸ் (ஆஸ்திரேலியா):

ஜாக் எட்வர்ட்ஸ் சிறந்த வேகப்பந்து வீச்வாளர் மட்டுமல்லாமல் திறமையான பேட்ஸ்மேனும் ஆவார். ஆல்-ரவுண்டரான இவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக , இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இவருக்குப் பதிலாக மாற்று வீரரை சன்ரைசர்ஸ் அணி இன்னும் அறிவிக்கவில்லை.

Sam Curran
Sam Curranrajasthan royals

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹர்ஷித் ராணா (இந்தியா)

வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார். 2026 டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தின் போது , இவருக்கு காலில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவருக்கு பதிலாக சிமர்ஜீத் சிங், கே.எம். ஆசிஃப் மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கே.கே.ஆர் அணியில் சேர்க்கப்படலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - சாம் கரன் (இங்கிலாந்து)

இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்கரன் இந்த தொடர் முழுவதுமே ஆடமாட்டார். சென்னை அணியுடன் சஞ்சு சாம்சனுக்காக ராஜஸ்தான் அணி வர்த்தக ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, ரவீந்தர ஜடேஜா, சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டனர். சாம் கரனுக்கு பதிலாக பதிலாக தசுன் ஷனகா (இலங்கை) மற்றும் கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து) ஆகியோர் ராஜஸ்தான் அணியில் இடம் பெறலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் - ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் நடப்பு ஐ.பி.எல் தொடரில், ஆரம்பகட்ட ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. பல மாதங்களாக அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். காரணம்... தொடை மற்றும் கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம். அதோடு, தசைநார் பிரச்சனையாலும் அவதிப்பட்டு வருகிறார். ஏப்ரல் மாதம் முதல், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அவர் விளையாடலாம்.

Mitchell Starc
Mitchell Starc Photo: Sportzpics for IPL

டெல்லி கேப்பிட்டல்ஸ் - மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் தொடரின் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார். இவருக்குப் பதிலாக வேறு யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் லெவன் - லாக்கி பெர்குசன் (நியூசிலாந்து)

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் தொடரின் முதல் கட்ட ஆட்டங்களில் விளையாட மாட்டார். இவருக்கு மகன் பிறந்திருப்பதாவ், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்காக தாய்நாட்டிலேயே தங்கியுள்ளார்

மும்பை இந்தியன்ஸ் - அதர்வா அங்கோலேகர் (இந்தியா)

கடந்த ஜனவரியில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியின் போது , அதர்வா அங்கோலேகருக்கு மூட்டு பகுதியில் ஜவ்வு கிழிந்தது. இதனால், அதர்வா இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வனிந்து ஹசரங்கா (இலங்கை)

சமீபத்தில், நடந்த டி20 உலகக் கோப்பையின் போது, வனிந்து ஹசரங்காவுக்கு தொடை தசைநார் கிழிந்தது . இந்த காயத்திலிருந்து சுழற்பந்து வீச்சாளரான அவர், இன்னும் குணமடையவில்லை. இதனால், இந்த சீசனின் தொடக்க ஆட்டங்களை அவர் தவறவிட வாய்ப்புள்ளது. இவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி லக்னோ அணியில் இடம் பெறலாம்.

Puthuyugam
www.puthuyugam.com