2000 ஆண்டு பழமை வாய்ந்த திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்!

இறைவன் கட்டளைப்படி இந்தக் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் என்ற தீர்த்த குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்கப் பெற்றார்.
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்
Published on

தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக காவிரிக் கரையோர பகுதிகளில் பல்வேறு சிவாலயங்கள் புராதான பெருமையோடு உள்ளன. சிறப்புமிக்க இந்த கோவில்களில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலும் ஒன்று.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களால் பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 9-வது தலமாக உள்ளது.

அக்னி பகவானுக்கு யாகங்களால் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க வேண்டி திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளி உள்ள இறைவனை வேண்டியுள்ளார்.

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்

இறைவன் கட்டளைப்படி இந்தக் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் என்ற தீர்த்த குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்கப் பெற்றார்.

மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்துக்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

இறைவனும் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார்.

அன்று முதல் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோவில் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோவில்

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்திரன், பெருமாள், சூரியன், பிரம்மன், அக்னி தேவன், பகிரதன், ரோமரிஷி சித்தர், ஆகியோர் எழுந்தருளி உள்ள‌னர். கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளது.

கோவில் தீர்த்தமாக அக்னி தீர்த்தம், காவிரி நதி தீர்த்தம் உள்ளது. அக்னி தீர்த்தம் இருந்த இடத்தில் தற்போது சிறிய கிணறு வடிவில் அக்னி தீர்த்த கிணறு உள்ளது. அக்னீஸ்வரர், அழலாடியப்பர், தீயாடியப்பர், வன்னிவனநாதர், திருக்காட்டுப்பள்ளி உடையார் என்றும் அழைக்கப்படுகிறாா்.

ரோமரிஷி சித்தர்

பண்டைய கால சித்தர்களில் ஒருவரான ரோமரிஷி என்பவர் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரரை வழிபட்டு சித்தி அடைந்துள்ளார். கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ரோமரிஷி சித்தர் இறைவனை மலர் கொண்டு பூஜை செய்வது போன்ற விக்ரகம் அமைந்துள்ளது.

இதைப்போல பிரம்மதேவன் மகா சிவராத்திரி தினத்தன்று மூன்றாம் காலத்தில் எழுந்தருளியுள்ள அக்னீஸ்வரரை வழிபட்டு இறையருள் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

ரோமரிஷி
ரோமரிஷி

ரோமரிஷி சித்தர் வழிபடுவது போல் சிவலிங்கம் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இங்குள்ள அக்னீஸ்வரர் ரோமரிஷி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கோவிலில் உள்ள அம்பாள் சவுந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறார். அம்பாளுக்கு தனியாக சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளான தட்சிணாமூர்த்தி, திருமால், லட்சுமி, வலம்புரி விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், ரோமரிஷி சித்தர் வழிபடும் சிவலிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, அகோர வீரபத்திரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் சரஸ்வதி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.

யோக தக்ஷிணாமூர்த்தி குரங்காசனத்தில்
யோக தக்ஷிணாமூர்த்தி குரங்காசனத்தில்

இதனால் இந்த யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு.

இவரை அப்பர் தன்னுடைய தேவாரத்தில், ஞான நாயகன் என்று போற்றுகின்றார். இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்..

இந்த கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இறைவன், இறைவியை திருமணம் செய்து கொண்ட நாள் பங்குனி உத்திர நாள் என்பதால் இங்கு பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த கோவில் தீர்த்தமாக தற்போது திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகில் மிகச் சிறிய அளவில் அக்னி தீர்த்தம் அமைந்துள்ளது. அக்னிதீர்த்தத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், மாசி மாத மக நட்சத்திரம், பங்குனி மாத உத்திராட நட்சத்திரம், வைகாசி மாத பவுர்ணமி திதி ஆகிய நாட்களில் நீராடி அகனீஸ்வரரை வழிபடுபவர்கள் இந்த பிறப்பில் எல்லா செல்வங்களும், மறு பிறப்பில் நற்பிறப்பும் பெற்று குற்றம் எல்லாம் தீர்ந்து பெருமையுடன் வாழ்வார்கள் என்பது அக்னி தீர்த்த சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

கோவிலில் நடைபெறும் விழாக்கள்

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் அனைத்து மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுவது சிறப்பாகும். சித்திரை மாதத்தில் முதல் நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு அக்னி தீர்த்தத்திலும், காவிரி ஆற்றிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது மிகவும் விசேஷம்.

மூலவர் தீயாடியப்பர் சன்னதி
மூலவர் தீயாடியப்பர் சன்னதி
அருள்தரும் அழகமர்மங்கை உடனுறை தீயாடியப்பர் திருக்கோயில் குறித்த சிறப்பு காணொளியை... கீழே காணலாம்.

மேலும் திருக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது பஞ்சமூர்த்திகள் அலங்காரம் செய்து திருவீதியில் அடியார் பெருமக்களோடு வீதி வலம் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து சூலபாணி என்று சொல்லப்படும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இறைவன் அக்னிஸ்வரராக இங்கு அருள் பாலிப்பதால், சிவன் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறியாக உதயமானவர் முருகப்பெருமான் என்பதால் அருகே உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலீில் அக்னி பொறி தரும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தீமிதி விழா முருகப்பெருமான் திருக்கோவிலின் முன்னே வெகு சிறப்பாக நடைபெறும் .

காவிரி ஆற்றங்கரையிலிருந்து அலகு குத்தி காவடி எடுத்து வரும் பக்தர்கள் இந்த தீமிதி விழாவில் பங்கேற்கின்றனர்

அதனை தொடர்ந்து காவிரி ஆற்றங்கரை அஸ்திர வரதரை எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

பஞ்ச மூர்த்திகளை காவிரி ஆற்றின்

நடுவில் குடில் அமைத்து சிறப்பான அபிஷேகம் நடைபெறும் .

இந்த விழாவை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஊர் திருவிழாவாக வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com