ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் நடைபெற்ற கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிப்படுகையில் உள்ள ஆறு நதிகளின் நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி விட்டது. கடந்த 1960ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கிடையில் இரண்டு போர்கள் நடந்தநிலையிலும், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாமல் இருந்தது. நாடுகளின் எல்லை தாண்டிய நீர் மேலாண்மைக்கு சர்வதேச அளவில் ஓர் எடுத்துக்காட்டாகவும் இந்த ஒப்பந்தம் பார்க்கப்பட்டது.
சிந்துநதிப் படுகையின் கிழக்குப் பகுதியில் ஓடும் சட்லெஜ், ராவி, பியாஸ் ஆகிய நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகளின் தண்ணீர் பாகிஸ்தானுக்கும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் விவசாயம் சிந்து நதிபடுகை ஒப்பந்தத்தை நம்பியே உள்ளது. நீர் மின் நிலையத் திட்டங்களும் அப்படிதான்.
பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா ஒப்பந்தத்தை ரத்து செய்யவே பாகிஸ்தான் அதிர்ந்து போனது. பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் , "தண்ணீரும் நமது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதிதான். தண்ணீரை நிறுத்தினால், அடுத்த கணமே நாம் இந்தியாவுக்கு எதிராகப் போருக்குச் செல்வோம். இது உறுதி . இந்தியா நீரை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது" என்று பேசி வந்தார். எனினும், இந்தியா அலட்டிக் கொள்ளவில்லை.
சத்தமில்லாமல் சிந்து நதி தண்ணீரை முடிந்தளவு இந்திய விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டங்களை தீட்டியது. அந்த வகையில், லடாக் பகுதியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட செக் டேமை லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா (Vinai Kumar Saxena) திறந்து வைத்தார்.
லடாக்கின் விவசாயகளிடையே நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கவும் எல்லைப் பகுதிகளில் சிந்து நதி நீரின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாகவும் இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. லே (Leh) பகுதியிலுள்ள உப்சியில் (Upshi) இந்த பாறைத் தடுப்பணை (Rock Check dam) அமைந்துள்ளது. சுமார் 11,400 அடி உயரத்தில் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேங்குமளவுக்கு இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
200 அடி நீளத்துக்கு 30 அடி அகலத்துக்கு முற்றிலும் இயற்கையான பாறைக் கற்களைக் கொண்டு, சிமெண்ட் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட நமது கல்லணை போலவே இந்த அணையின் கட்டுமானமும் அமைந்துள்ளது. இதனால், நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது. அதிக நீர் அழுத்தத்தை எளிதாக தாங்கும் திறன் இந்த அணைக்கு உண்டு. நீரின் ஓட்டம் அதிகரித்தாலும், இந்த அணை எளிதாக தாங்கும். இதன் மூலம், லடாக் பகுதியில் வசந்த காலத்தில் நீர் பற்றாக்குறை இல்லாமல் விவசாயம் மேற்கொள்ளலாம்.
உள்ளூர் விவசாயத்துக்கு இந்த அணை உதவும் என்பதை தாண்டி, செக்டேம் கட்டும் திட்டம் பாகிஸ்தானுக்கு ஒரு மோசமான எச்சரிக்கையையும் விடுக்கிறது. சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்குச் செல்லும் முன்பாகவே, எல்லைப் பகுதிகளில் நீரைப் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கத் தொடங்கியுள்ளது என்பதுதான் அது. சிந்து நதியில் இது போன்ற மேலும் பல தடுப்பணைகளை அமைக்கும் பணிகளில் லடாக் அரசு ஈடுபட்டு வருகிறது; சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 36 தடுப்பணைத் திட்டங்களை அமைப்பதற்கான முன்மொழிவை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திடம் லடாக் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. இதற்காக, 56 கோடி செலவிடப்பட்டுள்ளது. லே (Leh) பகுதியில் ஏழு இமயமலைப் பாறைத் தடுப்பணைகளும் (Himalayan Rock Check Dams), கார்கில் பகுதியில் 29 தடுப்பணைகளும் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பகுதியில் செக் டேம் அமைக்கும் போதும், அரசு உள்ளூர் விவசாயிகளிடத்தில் கருத்து கேட்கிறது. விவசாயிகளின் கருத்து அறிந்து அதற்கேற்ற வகையில், செக் டேம் கட்டப்படுகிறது.