நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பேரிழப்புகளும் உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 4 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திபெத்- நேபாள எல்லைப் பகுதியிலுள்ள ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் பல பகுதிகள் உருகுலைந்து போயுள்ளன. திபெத்தில் உள்ள லெண்டே (Lhende) ஆற்றைப் பனிப்பாறை மறித்ததால் கோஷி (Kosi) ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோஷி ஆறு நமது பீகார் மாநிலத்திலும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் திடீர் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவது உண்டு. இந்த நதியை 'பீகாரின் துயரம்' என்றும் குறிப்பிடுவார்கள்.
நேபாளத்தில் ஏராளமான பனி ஆறுகள் இருப்பதால், அந்த நாடும் அவ்வப்போது வெள்ளப்பெருக்கை எதிர்கொள்கிறது. எனினும், ஆகஸ்ட் 26ம் தேதி கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் முன்பு எப்போதும் பார்த்திராதது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள 40 வயதுடைய ஹெலிகாப்டர் கேப்டன் பிரியா அதிகாரி (Priya Adhikari) என்பவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த 6 நாட்களில் இவர் மட்டும் 100 பேரை தனது ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளார். மோசமான வானிலையைத் தாண்டி, மீட்க முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் இவர் தன்னை அர்ப்பணித்துள்ளார்.
இந்த பிரியா அதிகாரி எடுத்தவுடனே ஹெலிகாப்டர் கேப்டன் ஆகி விடவில்லை. சுற்றுச்சூழல் அறிவியல் படித்து விட்டு, ஹெலிகாப்டர் ஒன்றில் பணிப் பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஹெலிகாப்டரில் பணியாற்றிதால், பைலட்டாக வேண்டுமென்ற ஆசை அவருக்குள் ஏற்பட்டது. தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்று ஹெலிகாப்டர் ஓட்ட பயிற்சி பெற்றார். 2017ம் ஆண்டு பைலட் லைசென்ஸ் பெற்றார். பிரியா அதிகாரிதான் நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் என்பதும் கூடுதல் தகவல்.
நேபாளத்தில் அடிக்கடி இயற்கைப் பேரிடர் ஏற்படுவதால், பிரியா அதிகாரி ஏற்கனவே பல முறை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவருக்கு மீட்புப்பணியில் மிகுந்த அனுபவம் உண்டு. எவரெஸ்ட் சிகரத்தில் 6,200 மீட்டர் உயரத்தில் சிக்கியவர்களைக் கூட தனது ஹெலிகாப்டரில் சென்று மீட்டு வந்துள்ளார்.
நேபாள வெள்ளம் குறித்து பிரியா அதிகாரி கூறுகையில்,'' ரசுவா மாவட்டத்தில் டைமுர் (Timour) என்ற கிராமமே முற்றிலும் அழிந்து போனது. ஆங்காங்கே சடலங்கள் மண்ணில் புதைந்து கிடந்தன. இந்த கிராமத்தில் மட்டும் 200 பேரை நாங்கள் மீட்டோம். சுமார் 20 ஹெலிகாப்டர்கள் ஒரே பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. இதனால், பைலட்டுகளுக்கிடையே ஒருங்கிணைப்பும் தொடர்ச்சியான ரேடியோ வழியான தொலைத் தொடர்பும் மிக முக்கியம். கொஞ்சம் கவனம் தப்பினாலும் விபத்து ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது.
இந்தப் பகுதியில் மட்டும் ஐந்து நீர் மின் திட்டங்கள் இருந்தன. அத்தனையும் அழிந்து போய் விட்டன. அங்கு பணியாற்றிய அனைவரும் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நான் வானத்தில் பறக்கும் போதும், கீழே இருந்து யாராவது துணியைக் காட்டி அசைத்து எனது கவனத்தை ஈர்க்கின்றனர். நானும் , எப்படியாவது அவர்களை மீட்டு விடுவேன் '' என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஹெலிகாப்டர் கேப்டனாக ஆண்கள்தான் அதிகம் பணியாற்றுவார்கள். பல தடைகளைத் தாண்டி பிரியா அதிகாரி ஹெலிகாப்டர் கேப்டனாகியுள்ளார். பெண்களாலும் கடினமான சூழலில் பணியாற்ற முடியுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்.