ஒரு பக்கம் உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் டீப்மைண்ட் (Google DeepMind). இன்னொரு பக்கம், வித்தியாசமான ஹாலிவுட் திரைப்படங்களுக்காகப் பெயர் பெற்ற A24 நிறுவனம். இவை இரண்டும் இணைந்து சினிமாவில் ஏஐ பயன்பாடு குறித்து ஏதோ செய்யப்போகின்றன என்ற செய்தி சமீபத்தில் ஹாலிவுட்டில் கவனம் பெற்றிருக்கிறது. காரணம் கூகுள், சுமார் 75 மில்லியன் டாலர் (சுமார் 720 கோடி) பணத்தை A24-ல் முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்படங்களை உருவாக்கும் செயல்முறையில் AI நுட்பங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்காகவே A24-யும் டீப்மைண்ட்டும் இணைந்திருப்பதாகச் சொல்லப்படுகின்றன!
இதில் A24-ன் பங்கு முக்கியமானது. 2012-ல் தொடங்கப்பட்ட இந்த அமெரிக்க திரைப்பட நிறுவனம், வழக்கமான பெரிய ஸ்டுடியோக்களைப் போல வெகுஜன பார்வையாளர்களை மட்டுமே குறிவைக்காமல், தனித்துவமான கதைகள் மற்றும் புதிய இயக்குநர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறது. Moonlight, Everything Everywhere All at Once, The Whale, Past Lives போன்ற படங்கள் அதன் பெயரை உலகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கின்றன.
மறுபுறம் கூகுள் டீப்மைண்டுக்கு AI ஆராய்ச்சியின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பலமும், அனுபவமும் இருக்கிறது. இந்த இரண்டு வெவ்வேறு உலகங்களையும் இணைப்பதுதான் இந்தக் கூட்டணியின் நோக்கம். டீப்மைண்டுக்கு தொழில்நுட்பம் தெரியும்; A24-க்கு திரைப்படம் உருவாக்குவதைப் பற்றித் தெரியும். 2026 ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தக் கூட்டணியின் நோக்கம், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளுக்குப் பயன்படக்கூடிய புதிய AI கருவிகளையும், பணிச்சூழல்களையும் உருவாக்குவது என்கிறார்கள். அதாவது, ஏஐ கருவிகளை கணினி வல்லுநர்கள் மட்டுமே உருவாக்குவதை விட அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்களோடு இணைந்து உருவாக்குவதே சரியான பயனுள்ள கருவிகள் உருவாக வழிவகுக்கும் என்பது இதன் அடிப்படைக் கருத்து.
திரைப்படத்துறையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நிறைய Pre production பணிகள் என்று சொல்லப்படும் வேலைகள் நடக்கின்றன. கதாபாத்திரங்களின் தோற்றம், காட்சிகளின் வடிவமைப்பு, லொகேஷன் தேர்வு, ஸ்டோரிபோர்ட், ஷாட் திட்டமிடல், கலை இயக்கம் என்று ஓர் இயக்குநரின் கற்பனையை பல்வேறு துறைகள் சேர்ந்து வடிவமைக்கின்றன. எதிர்காலத்தில் இவற்றில் உதவக்கூடிய AI கருவிகளை இந்தக்கூட்டணி உருவாக்கப் போகிறது. இயக்குநர் தனது காட்சியை வார்த்தைகளில் விவரித்தால், அதன் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவது முதல், ஒரு ஷாட் எப்படி இருக்கலாம் என்பதை முன்கூட்டியே பரிசோதிப்பது வரை AI பயன்படலாம்.
ஆனால், இதுகுறித்து விமர்சகர்களின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்படும் கருவிகள், சினிமாவை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான ஸ்டோரிபோர்ட் ஓவியர்கள் போன்ற சிறு கலைஞர்களை அழித்துவிடும் என்பதுதான் அந்தக் கருத்து. அதோடு இந்த ஏஐ கருவிகள் பயிற்சி செய்ய A24-ன் முந்தைய திரைப்படங்களை கூகுள் எடுத்துக்கொள்ளக்கூடும். அதாவது எந்தக் கலைஞர்களின் படைப்புகள் மூலமாக ஏஐ பயிற்சி எடுத்துக்கொள்ளுகிறதோ, அவர்களையே இல்லாமல் செய்யப்போகிறது. கூர் தீட்டிய மரத்தையே பதம் பார்க்கும் கோடரியைப் போல!
அதே நேரம், இன்னொரு குழு இதற்கு ஆதரவாகவும் பேசிக்கொண்டிருக்கிறது. போட்டோஷாப் வந்தபோது ஓவியர்கள் இல்லாமல் போய்விடவில்லை. டிஜிட்டல் கேமரா வந்தபோது புகைப்படக் கலைஞர்கள் தேவையற்றவர்களாகிவிடவில்லை. அதுபோல AI-யும் திரைப்படக் கலைஞர்களின் பணியை முழுவதுமாக மாற்றாமல், அவர்களின் வேலை செய்யும் முறையை மாற்றக்கூடும் என்பது இவர்களின் கருத்து.
சினிமா ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தையும் முதலில் அச்சத்தோடு பார்த்திருக்கிறது. ஒலி வந்தபோது ஒரு வகையான பயம். நிறம் வந்தபோது இன்னொரு மாற்றம். டிஜிடல் வந்தபோது திரைப்படத் துறையே மாறியது. CGI வந்தபோது கற்பனையின் எல்லைகளே மாறின. இப்போது AI-யின் முறை. ஏஐ, சினிமாவின் வளர்ச்சிக்குப் பயன்படப்போகிறதா, இல்லையா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.