சீன விமானப்படையை முந்திய இந்திய விமானப்படை! #AirPower

உலகின் சிறந்த விமானப்படைகளின் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் சீனாவை அதிர வைத்துள்ளது. இந்திய விமானப்படையின் தரம் மிகச்சிறந்தது என்றும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீன விமானப்படையை முந்திய இந்திய விமானப்படை! #AirPower
Published on

சீன விமானப்படையை விட இந்திய விமானப்படைதான் வலிமையானது என 'World Directory of Modern Military Aircraft' (WDMMA) தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும் வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் விமானப் படைகளின் பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்து பட்டியலிடும் 'World Directory of Modern Military Aircraft' (WDMMA), 2026-ஆம் ஆண்டிற்கான 'சர்வதேச விமானப்படைத் திறன் மற்றும் தரவரிசைப் பட்டியலை' (Global Air Powers Rankings) வெளியிட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட விமானப்படைகளின் வலிமையைக் கண்காணிக்கும் WDMMA, இந்திய விமானப்படையை முதல் 10 இடங்களுக்குள் தரவரிசைப்படுத்தியுள்ளது.

சீனாவின் 'மக்கள் விடுதலை விமானப்படைக்கு' (PLAAF) ஓர் இடம் மேலே இந்திய விமானப்படை தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை 69.4 என்ற (TrueValueRating) மதிப்பெண்களுடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏழாவது இடத்திலுள்ள சீனா 63.8 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

இந்த ஆய்வில், இது ஒட்டுமொத்த பலம் மட்டுமல்லாமல், நவீனமயமாக்கல், தாக்குதல் மற்றும் தற்காப்புத் திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் விமானப்படையையும் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் விமானப்படை விமானங்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் மதிப்பிடப்படாமல், விமானங்களின் தரம், நிறுவனங்களின் வகைகளின் அடிப்படையிலும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவிடம் உள்நாட்டுத் தயாரிப்பு விமானங்கள், ரஷ்ய தயாரிப்பு, இஸ்ரேல் தயாரிப்பு, பிரான்ஸ் தயாரிப்பு எனப் பலதரப்பட்ட நிறுவனங்களின் போர் விமானங்கள் உள்ளன.

அதேவேளையில், சீனாவிடத்தில் சொந்தத் தயாரிப்பு விமானங்கள் மட்டுமே உள்ளன. சீன விமானப்படை 3,733 விமானங்களைக் கொண்டுள்ளது. இந்திய விமானப்படை 1,716 விமானங்களை மட்டுமே வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடுகளின் கடற்படையின் வான் பிரிவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியக் கடற்படையின் வான் பிரிவு 27-ஆவது இடத்தையும் (232 விமானங்கள், 41.2 TvR) இந்திய ராணுவம் 36-வது இடத்தையும் (540 விமானங்கள், 30.0 TvR) பிடித்தன.

சீனக் கடற்படையின் வான் பிரிவு 15-ஆவது இடத்தைப் பிடித்தது (436 விமானங்கள்; 49.3 TvR); தரைப்படையில் 35-ஆவது இடத்தைச் சீன மக்கள் விடுதலை ராணுவம் பெற்றது (1,188 விமானங்கள்; 31.3 TvR).

சீனாவின் நெருங்கிய கூட்டாளியும் இந்தியாவின் பங்காளியுமான பாகிஸ்தான் விமானப்படை, 46.3 மதிப்பெண்களுடன் 18-வது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் விமானப்படை 879 விமானங்களைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் கடற்படை மற்றும் ராணுவத்தின் விமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

இந்தப் பட்டியலில் அமெரிக்க விமானப்படை 242.9 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்க விமானப்படையிடம் 5004 விமானங்கள் உள்ளன. அமெரிக்கக் கடற்படை 142.4 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றது . அமெரிக்கக் கடற்படையிடம் 2,504 விமானங்கள் உள்ளன. ரஷ்ய விமானப்படை 114.2 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ரஷ்யாவிடம் 3,677 விமானங்கள் இருக்கிறது. அமெரிக்கத் தரைப்படை 112.6 மதிப்பெண்கள் மற்றும் 4,333 விமானங்களுடன் நான்காவது இடம் பெற்றது.

அமெரிக்க மரைன்ஸ் பிரிவு 85.3 மதிப்பெண்கள் மற்றும் 1,211 விமானங்களுடன் ஐந்தாவது இடத்தையும் இந்திய விமானப்படை 69.4 மதிப்பெண்களுடன் 1, 716 விமானங்களுடனும் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளன.

சீன விமானப்படை 63.8 மதிப்பெண்களுடன் 3,733 விமானங்களுடன் ஏழாவது இடத்தையும் ஜப்பானிய விமானப்படை 58.1 மதிப்பெண்கள் மற்றும் 756 விமானங்களுடன் எட்டாவது இடத்தையும் இஸ்ரேலிய விமானப்படை 56.3 மதிப்பெண்களுடன் 581 விமானங்களுடன் ஒன்பதாவது இடத்தையும் பிரெஞ்சு விமானப்படை 55.3 மதிப்பெண்கள் மற்றும் 511 விமானங்களுடன் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தற்போதைய WDMMA தரவுத்தொகுப்பில் கண்காணிக்கப்படும் 103 நாடுகளின் விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளிலுள்ள 48,082 விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com