உலக அமைதியை வலியுறுத்தி, நியூயார்க் நகரிலுள்ள எம்பயர் ஸ்டேட் (Empire State) கட்டடத்தின் உச்சியிலுள்ள டிவி ஒளிபரப்பு கோபுரத்தின் உச்சியில் ஏறி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரஷ்ய ஜோடியை அமெரிக்கக் காவல்துறை கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏஞ்சலா நிகோலா (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகிய இருவரும் காதலர்கள். அமெரிக்காவில் வசித்தனர். இந்த ஜோடி நேற்று நியூயார்க் நகரிலுள்ள எம்பயர் எஸ்டேட் கட்டடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு, சாதாரணப் பார்வையாளர்கள் போலச் சுற்றித் திரிந்தவர்கள், யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று 1,454 அடி உயரமுள்ள கட்டடத்தில் உச்சியிலுள்ள டி.வி. ஆன்டெனாவை நோக்கி ஏறத் தொடங்கினர். இந்த ஜோடி உடலில் எந்த பாதுகாப்புக் கருவியும் இல்லை. கயிறு கூடக் கட்டியிருக்கவில்லை. வெறும் கையால் ஏறி விட்டனர். அந்த ஜோடி கருப்பு முகமூடியும், கருப்பு நிற ஆடைகளும் அணிந்திருந்தனர்.
ஆண்டெனாவின் உச்சியிலுள்ள இருந்த சிவப்பு விளக்கு அருகே இருவரும் அமர்ந்து கொண்டனர் . பின்னர், அவ்வளவு உயரத்தில் நின்று கொண்டு , "அதிகாரத்தை அன்பின் ஆற்றல் வெல்லும்போது உலகம் அமைதியைக் காணும்" என்று எழுதப்பட்டிருந்த கருப்பு நிறப் பதாகையை விரித்து காட்டினர். இதைப் பார்த்ததும், மக்கள் பயம் கொள்ளத் தொடங்கினர்.
உடனடியாக, போலீசுக்குத் தகவல் பறந்தது. காவல்துறையினர் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் இருந்த மக்களை வெளியேற்றினர். அருகிலுள்ள தெருக்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அதிகாரிகள் தரையிலிருந்து நிலைமையைக் கண்காணிக்கத் தொடங்கினர். நியூயார்க் காவல்துறையின் ஹெலிகாப்டர் ஒன்றும் கட்டடத்தைச் சுற்றி வட்டமிட்டது.
பின்னர் , இந்த இருவரும் உச்சியிலிருந்து இறங்கி , கீழே இருந்த மேடை போன்ற பகுதிக்கு வந்தடைந்தனர். அங்கு, இருவரும் 'லவ் புரபோஸ்' செய்து கொண்டதோடு, மோதிரமும் மாற்றிக் கொண்டனர். இருவரும் அணைத்துக் கொண்டனர். எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஏஞ்சலாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பகிரப்பட்டன. சுமார் 10 நிமிடம் கழித்து தரையிறங்கிய, இந்த ஜோடியை நியூயார்க் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். இந்த ஜோடி மீது கவனக்குறைவாகச் செயல்பட்டு ஆபத்தை விளைவித்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் ஒழுங்கற்ற நடத்தை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மாஸ்கோவைச் சேர்ந்த வான்யா மற்றும் ஏஞ்சலா ஆகியோர் தற்போது நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்ச் (East Orange) பகுதியில் வசித்து வருகின்றனர். சவாலான உயரமான இடங்களில் ஏறுவதை இவர்கள் பொழுதுபோக்காக வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த ஜோடியின் காதல் கதையையும் சவால் நிறைந்த கட்டடங்களில் ஏறும் பொழுதுபோக்கு குணத்தையும் மையமாகக் கொண்டு 'ஸ்கைவாக்கர்ஸ்: எ லவ் ஸ்டோரி' (Skywalkers: A Love Story) என்ற நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் இந்த ஜோடி எப்படி நுழைந்தது என்பது குறித்து எந்த விளக்கத்தையும் காவல்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் செய்தித் தொடர்பாளர் முன் அனுமதி பெறாமல் இந்த ஜோடி ஏறியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த 1994ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ஸ்பைடர்-மேன்" என்று அழைக்கப்படும் அலெய்ன் ராபர்ட் (Alain Robert) திடீரென எம்பயர் எஸ்டேட் கட்டடத்தின் மீது வெறும் கையால் ஏறி உச்சிக்குச் சென்று விட்டார். பின்னர், இந்த அத்துமீறல் செயலுக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.
2023-ம் ஆண்டு நடிகரும் இசைக்கலைஞருமான ஜாரெட் லெட்டோ (Jared Leto) 'தர்ட்டி செகண்ட்ஸ் டு மார்ஸ்' (Thirty Seconds to Mars) இசைக்குழுவின் உலகச் சுற்றுப்பயணத்தை விளம்பரப்படுத்த முறையான அனுமதி பெற்று எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது ஏறினார்.