14 மாதப் பேத்தியுடன், கமேனியின் இறுதிப்பயணம்! #Iran

ஈரான் நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் உச்சபட்சத் தலைவருக்கு மரியாதை செலுத்த சாரை சாரையாக குவிந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 மாதப் பேத்தியுடன், கமேனியின் இறுதிப்பயணம்! #Iran
Published on

அயேதுல்லா கமேனி... ஈரானின் உச்சபட்சத் தலைவர். அந்த நாட்டு மக்களின் உயிர்நாடி போன்றவர். ஈரான் நாட்டின் புரட்சிப் படை இவரது கையசைவில்தான் இயங்கியது. வல்லரசான அமெரிக்காவை, 'வந்து பார்...' என்றவர். அமெரிக்கா தன்னை எப்போது வேண்டுமானாலும் கொல்லக்கூடும் என்ற சூழலிலும், தனது அலுவலகத்தில் அமர்ந்து சாதாரணமாகப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர். தன் இறப்பை அறிந்தவர்கள் எதற்கும் கவலைப்பட மாட்டார்கள் என்பார்கள். இதுதான், அயேதுல்லா கமேனி விஷயத்திலும் நடந்தது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் அயேதுல்லா கமேனி கொல்லப்பட்டு விட்டார். அவரது, மகன் மோஜ்தபா உள்ளிட்ட உறவினர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை ஈரான் திருப்பித் தாக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட 4 மாதம் நடந்த போர் இப்போதுதான் ஓயத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து தாக்குதல் ஓய்ந்துள்ளது.

உலகின் பண்டைய நாடுகளில் ஒன்றான ஈரானில் கடந்த 1979ம் ஆண்டு வரை, மன்னர் முகமது ரிசா சா பஹலவியின் (Mohammad Reza Shah Pahlavi) ஆட்சிதான் நடைபெற்றது. இந்த சமயத்தில், ரூஃகூல்லா மூசவி கமேனி (Ruhollah Musavi Khomeini) தலைமையிலான ஈரான் புரட்சிப்படையினர் ஈரானில் ஆட்சியைக் கைப்பற்றினர். மன்னர் நாட்டை விட்டு, குடும்பத்துடன் தப்பினார். தொடர்ந்து, ரூஃகூல்லா மூசவி கமேனி ஈரான் நாட்டின் உச்சபட்சத் தலைவரானார். கடந்த 1989ம் ஆண்டு இவரது, மறைவுக்குப் பிறகு அயேதுல்லா கமேனி ஈரான் நாட்டுத் தலைவரானார். கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் அயேதுல்லா கமேனி ஈரான் நாட்டின் அசைக்க முடியாத தலைவராக இருந்தார். ஈரான் புரட்சிப்படையினர் அவரை கண்கொத்திப் பாம்பு போலப் பாதுகாத்து வந்தனர். எனினும், கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கமேனி உயிரிழந்தார். இந்த நிலையில், போர் ஓய்ந்த நிலையில், ஈரான் நாடு தங்களது உச்சபட்சத் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளது.

கடந்த 4 மாதங்களாக கமேனியின் உடலை ஈரான் அரசு பாதுகாத்து வைத்திருந்தது. உடலைப் பதப்படுத்த ரசாயனக் கலவைகளுடன் கூடிய எம்பாம்பிங் (Embalming) செய்யப்படுவது இஸ்லாமிய மத நடைமுறைகளுக்கு எதிரானது என்பதால், முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையிலேயே 125 நாட்களாக கமேனியின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டு, தற்போது இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

Ayatollah  Khamenei
Ayatollah Khamenei

தலைநகர் டெக்ரானிலுள்ள Grand Mosalla வளாகத்தில் இன்று (ஜூலை 4) முதல் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சவப்பெட்டியின் மீது இஸ்லாமியக் குடியரசின் கொடி போர்த்தப்பட்டு, கமேனி வழக்கமாக அணியும் கருப்பு நிறத் தலைப்பாகை வைக்கப்பட்டிருக்கிறது. கமேனியின் உடலுடன் அவருடன் சேர்ந்து மரித்த 14 மாத பேத்தி ஷாக்ரா முகமதியின் (Zahra Mohammadi) உடலும் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் திரண்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை வரை, டெக்கரானில் வைக்கப்பட்டிருக்கும் கமேனியின் உடல் பின்னர், ஊர்வலமாக குவாம் (Qom) நகருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

ஈரான் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் இந்த நகரில் வசிக்கிறார்கள். அயேதுல்லா கமேனியும் குவாம் நகரில்தான் வசித்தார். தொடர்ந்து, கமேனியின் உடல் வரும் வியாழக்கிழமை வடகிழக்கு ஈரானிலுள்ள அவரது சொந்த ஊரான மாஷாத்துக்குக் (Mashhad) கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

கிட்டத்தட்ட 6 நாட்கள் நடைபெறும் இந்த இறுதி ஊர்வலத்தில் 2 கோடி மக்கள் கலந்து கொண்டு, கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் தற்போதைய உச்சபட்சத் தலைவரான மோஜ்தபா (mojtaba) இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பங்கேற்க மாட்டார் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

இந்தியா சார்பில் இரு பிரதிநிதிகள் கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஹமாஸ், ஹெஸ்புல்லா பிரதிநிதிகளும் கமெனியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்கின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com