இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24ம் தேதி பாஸ்போர்ட் சேவை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரு அறிவிப்பு வெளியானது. ''இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. பாஸ்போர்ட் என்பது சர்வதேசப் பயணத்தை எளிதாக்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் பயண ஆவணம் மட்டும்தான்'' என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் அர்த்தம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் இந்தியர்கள் என்று கருதிக் கொள்ள வேண்டாம் என்பதுதான். இந்த அறிவிப்பால் இந்திய மக்களிடத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் , 'எந்த ஆவணத்தைக் காட்டினால்தான் நாங்கள் இந்தியர்கள் என்று ஏற்றுக் கொள்வீர்கள்..?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் அஷ்ரப் என்பவர் கூறுகையில்,'' முதலில் ஆதார் கார்டை எடுக்க சொன்னார்கள். குடியுரிமைக்கான ஆதாரம் என கருதி ஆதார் கார்டை எடுத்தோம். பின்னர், உச்சநீதிமன்றம் ஆதார் கார்டை குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என்றது. இதனால், பாஸ்போர்ட்டைதான் எங்கள் வாழ்நாள் முழுவதும் நம்பியிருந்தோம். வெளிநாட்டு வாழ்கைக்கும் அதுதான் உதவியாக இருந்தது. இப்போது, பாஸ்போர்ட்டையும் இந்தியக் குடியுரிமைக்கான அடையாளம் இல்லை என்று அறிவித்துள்ளனர். பல ஆண்டுக்காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் எங்களைப் போன்றவர்கள் தாய்நாட்டுக்கு வரும் போது, எந்த ஆவணத்தைதான் ஆதாரமாகக் காட்டுவது... எங்களுக்கான அடையாளம் என்ன? ''என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமீரகத்தில் வசிக்கும் பார்மசிஸ்ட் மோகன், ''கடந்த 20 வருடங்களாக இங்கு வசிக்கிறேன். பல ஆண்டு காலம் குடும்பத்தை பிரிந்து, இப்போதுதான், அவர்களை இங்கு அழைத்து வந்தேன். குழந்தைகள் இங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். பாஸ்போர்ட் ஒன்றைதான் எங்களது இந்திய குடியுரிமைக்கான அடையாளமாகக் கருதினோம். இப்போது, அதுவும் இல்லையென்றால் நாங்கள் என்னதான் செய்வது?'' என்று வேதனைப்படுகிறார்.
பிரிட்டனில் போர்ட்ஸ்மவுத் நகரில் (Portsmouth) வசிக்கும் டாக்டர் சுரேஷ் பாபு கூறுகையில், ''1999ம் ஆண்டு முதல் பிரிட்டனில் வசிக்கிறேன். பாஸ்போர்ட் என்பது டிராவல் ஆவணம் மட்டுமே. சப்போர்ட்டிங் ஆவணம்தான். ஒருவர் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் மட்டுமே, அந்த நாட்டின் குடியுரிமை பெற்றதாக ஆகி விட முடியாது. நிரந்தரக் குடியுரிமை பெற்ற மக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் நாடுகள் பல உள்ளன. இதற்காக, அவர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாகி விட முடியாது. பிரிட்டனைப் பொறுத்த வரை, பாஸ்போர்ட்டை புதுப்பித்தால், அதுவே குடியுரிமையைப் புதுப்பித்தல் ஆகி விடாது. பாஸ்போர்ட்டுக்கும் குடியுரிமைக்கும் சம்பந்தம் கிடையாது'' என்று விளக்கமளித்துள்ளார்.
உஸ்பெஸ்கிஸ்தானில் படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவர் சகாயம், ''பாஸ்போர்ட் ஒன்றுதான் இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணமாகக் கருதியிருந்தேன். இப்போது, எந்த ஆவணத்துக்கு அலைய வேண்டுமென்று தெரியவில்லை'' என்று குழப்பத்துடன் கூறுகிறார்.
இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி,1950ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி முதல் 1987ம் ஆண்டு ஜூலை 1ம் தேதிக்குள் இந்தியாவில் பிறந்திருந்தால், (பெற்றோர் யாராக இருந்தாலும்) அவர் பிறப்பால் இந்தியர் ஆகிறார். அவரது, பரம்பரையினரும் இந்தியராகவே கருதப்படுவார்கள். 1987ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களின் பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்தாலே , அவர்களால் இந்தியக் குடியுரிமை பெற முடியும். 2004ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதிக்கு பிறந்தவர்களின் பெற்றோர் இருவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை, யாராவது ஒருவர் வெளிநாட்டவராக இருந்தால், முறையான ஆவணங்களுடன் இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும். சட்டவிரோதமாக குடியேறியிருக்கக் கூடாது.
அதேவேளையில், இந்தியக் குடியுரிமை கொண்டவர்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதனால், பாஸ்போர்ட்டை குடியுரிமை ஆவணமாக இடம்பெற செய்திருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஸ்போர்ட் ஒன்றுதான் தங்களை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாக அவர்கள் பார்க்கின்றனர்.
உண்மையைச் சொல்லப் போனால், 140 கோடி மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில், இந்தியர்களின் குடியுரிமையை நிரூபிக்க உறுதியான சான்றிதழ் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதுதான் பெரும் குறையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.