சமீபத்தில் சினிலக்ஸ் 16 (Cinelux Sixteen) எனும் புதிய, ஹைபிரிட் சினிமா கேமரா பற்றிய செய்திகள் இணையதளங்களில் அடிபடுகின்றன. இது 16 MM பிலிம் மற்றும் 3K டிஜிட்டல் சென்சார் என இரண்டு வெவ்வேறு ஊடகங்களிலும் ஒரே நேரத்தில் ஒரு காட்சியைப் பதிவு செய்யக்கூடிய கேமரா. அடுத்த ஆண்டு இந்தக் கேமரா சந்தைக்கு வரவிருக்கிறது.
முன்னதாக கிறிஸ்டோபர் நோலன், குவெண்டின் டாரண்டினோ போன்ற இயக்குநர்கள் இன்னும் ஃபிலிமில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது திரை ஆர்வலர்களுக்குத் தெரியும். அவர்களது நோக்கம்தான் என்ன? இன்னும் டிஜிட்டலால், ஃபிலிமின் தரத்தை ஈடுசெய்ய முடியாமலா இருக்கிறது? இல்லை! இன்றைய மேம்படுத்தப்பட்ட ஆரி அலெக்ஸா (ARRI Alexa), சோனி வெனிஸ் (Sony Venice), ரெட் (RED) போன்ற கேமராக்களால் ஃபிலிமை விட மேம்பட்ட தரத்தில் படம் பிடிக்க முடியும். அப்படியும் ஏன் இவர்களைப் போன்ற சிலர் ஃபிலிமில் படம் பிடிக்கிறார்கள்? கலை நுணுக்கங்கள்! ஃபிலிமும், டிஜிட்டல் சென்சாரும் அப்படி என்ன கலை நுணுக்கங்களில் வேறுபடுகின்றன?
முதலில், அதீத ஒளியைப் படம் பிடிக்கும் முயற்சிகளில், டிஜிட்டல் சென்சாரில் ஓர் எல்லைக்குப் பிறகு வேகமான ஏற்ற இறக்கம் நிகழ்வதாக அதாவது ஒளி மாற்றம் (Highlight Roll-off) சட்டென நிகழ்வதாக சில ஒளிப்பதிவாளர்கள் கருதுகிறார்கள். ஃபிலிமில் இந்த ஒளிமாற்றம் மிக மென்மையாக, இயற்கையாக நிகழ்கிறது. அடுத்தது, க்ரெய்ன் (Grain). அதாவது மென்புள்ளிகள் போன்ற ஒரு தோற்றம் ஃபிலிமில் கிடைக்கிறது. இதுவும் டிஜிட்டலில் ஏற்படும் நாய்ஸ் (Noise) எனப்படும் மென்புள்ளிகளும் ஒன்றல்ல. நாய்ஸ் என்பது பிழை. க்ரெய்ன் என்பது ஃபிலிம் எனும் ஊடகத்தின் இயல்பு. தேர்ந்த ஒளிப்பதிவாளர்கள், இந்த கிரெய்ன் காட்சிக்கு உயிர் தருவதாக நினைக்கிறார்கள். போலவே மில்லியன் கணக்கான நிறங்களை டிஜிட்டல் ஊடகம் அடையாளம் கண்டுகொண்டாலும், இயற்கையான நிறங்களைப் படம் பிடிப்பதில் ஃபிலிமுக்கு அது ஈடாகாது என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது. கலைஞர்கள் எப்போதுமே அப்படித்தான்!
ஆனால், பொருளாதாரம்? சினிமா என்பது தனிப்பட்ட பொழுதுபோக்கு அல்ல. அது மிக அதிக பணம் விளையாடும் ஒரு தொழில். மனம்போன போக்கில் பதிவு செய்வது, ரீடேக்ஸ் எடுப்பது போன்ற டிஜிட்டல் தரும் வசதியெல்லாம் ஃபிலிமில் கிடையாது. ஒவ்வொரு அடியும் பணம். போலவே அவற்றை ப்ராசஸ் செய்ய லேப் வசதிகள் வேண்டும். இப்போது ஆய்வு நோக்கத்துக்காக ஒன்றிரண்டு இருக்கலாமே தவிர, இந்தியாவில் கிட்டத்தட்ட எந்த லேப்களுமே செயல்பாட்டில் இல்லை. மேலும் எடிட்டிங், ஸ்கேனிங் போன்ற வேலைகளும் இருக்கின்றன. இவை எல்லாமே செலவு பிடிக்கும் வேலைகளாகும்.
அடுத்த முக்கியமான விசயம் பார்வையாளர்களின் நிலை. மக்களுக்கான திரையரங்குகள் இனி ஃபிலிம் புரஜக்ஷனுக்கு ஒருபோதும் மாறப்போவதில்லை. அதனால், ஒரு சினிமா டிஜிட்டலில் எடுக்கப்பட்டாலும், நாம் அதை டிஜிட்டல் புரஜக்ஷனில்தான் பார்க்கப்போகிறோம். ஃபிலிமில் எடுக்கப்பட்டாலும், அது டிஜிட்டலாக மாற்றப்பட்டுதான் புரஜக்ட் செய்யப்படப் போகிறது. இந்த மாற்றத்தால் ஃபிலிமில் ஒரு சினிமா பதிவு செய்யப்பட்டதன் நோக்கம் அடிவாங்குகிறதா என்றால் இல்லை. அவையெல்லாம் பதிவு செய்யப்படும்போதான குறைகள். புரஜக்ஷனில் அவை பெரும்பாலும் தக்க வைக்கப்படுகின்றன என்பது தொழில்நுட்பக் கலைஞர்களின் கருத்து. அதனால்தான் கிறிஸ்டோபர் நோலன் போன்றோர் இன்னும் ஃபிலிமில் சினிமாவைப் பதிவு செய்கிறார்கள். அதனால் அதில் நியாயம் இல்லாமலில்லை. ஒளி மாற்றம், நிறம், க்ரெய்ன் போன்ற கலைஞர்களின் கருத்துகள், உணர்வுகள் உண்மையாக இருக்கலாம். ஆனால், அவை பார்வையாளர்களில் 99.9% பேரால் உணரமுடியாத அளவுக்கு மிக நுணுக்கமான விசயங்களாகத்தான் இருக்கின்றன.
இன்று - இந்த 2026ல் - கூட யாராவது எழுத்தாளர்கள், பேனாக்களைக் கொண்டு பேப்பரில் நாவலை எழுதிக்கொண்டிருக்கலாம். அந்த உணர்வு தரும் எழுச்சியினால் அவரது படைப்பும் கூட மேம்படலாம். ஆனால், அவர் கணினியில் எழுதினாலும், கையால் எழுதினாலும் நாம் அச்சிலோ, கணினியிலோதான் படிக்கப்போகிறோம். ஏறத்தாழ இந்த நிலையோடு நாம் ஃபிலிமை ஒப்பிடலாம்.
அதனால், உண்மையில், இந்த முயற்சிகள் எல்லாம் பார்வையாளர்களுக்கானதல்ல, கலைஞர்களுக்கானது என்று தோன்றுகிறது. ஓர் இயக்குநருக்கோ, ஒளிப்பதிவாளருக்கோ, ஃபிலிமில் வேலை செய்வது ஒரு குறிப்பிட்ட மனநிலையை உருவாக்கலாம். ஒவ்வொரு ஷாட்டையும் கவனமாகத் திட்டமிட வைக்கலாம். ஒரு கலை ஒழுக்கத்தை உருவாக்கலாம். ஆக்கத்திலும் உணர்வு ரீதியான நுணுக்கமான திருப்தி இருக்கலாம். ஆனால், இதனால் எல்லாம் ஃபிலிம் மீண்டும் பிரதான சினிமாவுக்கு வரும் என்று எண்ண வழியில்லை. வாய்ப்பும், வசதியும் இருக்கக்கூடிய சில கலைஞர்கள் பயன்படுத்துவார்கள். அவர்களுக்காக சில நிறுவனங்கள் அதற்கான கருவிகளையும், வசதிகளையும், சேவைகளையும் செய்து தரும். அவ்வளவுதான்.
டிஜிட்டலுடனான போரை இப்போது ஃபிலிம் நடத்தவில்லை. மாறாக நடப்பது, தனக்கென்று ஒரு லெகசி இருக்கிறது, தனித்துவம் இருக்கிறது என்ற ஃபிலிமின் கம்பீரமான ஓர் அறிவிப்பு!