பின்னெப்போதாவது மனிதர்களைப் போன்ற இன்னொரு உயிரினத்தை சந்திப்போம் எனும் நம்பிக்கையில், தனக்குள் ஒரு தகவல் களஞ்சியத்தையும் எடுத்துக்கொண்டு சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டி, பயணித்துக்கொண்டிருக்கும் வாயேஜர் 1 விண்கலம், தனது ஓர் ஒளிநாள் பயணதூரத்தை இப்போது கடந்திருக்கிறது. நாசாவின் இந்தச் செய்தியை அறிவுலகம் பெருமையோடு கவனித்துக் கொண்டிருக்கிறது.
1977-ஆம் ஆண்டு மனிதகுலம் இரண்டு முக்கியமான விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியது. அவை வாயேஜர் 1 (Voyager 1) மற்றும் வாயேஜர் 2 (Voyager 2). இவையிரண்டின் நோக்கமும் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறக் கிரகங்களான வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) ஆகியவற்றை ஆய்வு செய்வது. ஒரே நோக்கத்துக்காக, ஒரே நேரத்தில் ஏன் இரண்டு விண்கலங்கள் ஏவப்பட்டன?
மனிதன் அதுவரை அறிந்திராத தொலைதூர கிரகங்களை ஆராயும் வாய்ப்பு அது. 1960களில் விஞ்ஞானிகள் ஒரு வாய்ப்பை கண்டறிகிறார்கள். சுமார் 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பு அது. அதாவது 1977ல் ஒரு விண்கலம் அனுப்பப்பட்டால், வியாழனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி சனிக்கும், அதன் ஈர்ப்பைப் பயன்படுத்தி அங்கிருந்து யுரேனஸையும், பின்னர் நெப்டியூனையும் அடையக்கூடிய அரிய கோளமைப்பு உருவாகியிருந்தது என்பதுதான் அது. இங்கே தவறுகள் நடக்கக்கூடாது. தொழில்நுட்பக் கோளாறுகள் நடந்து விடக்கூடாது. அதைவிடவும் முக்கியமாக சனிக்கிரகத்தின் துணைக்கோளான டைட்டனை ஆராய்வதும் இந்தத் திட்டத்தில் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தது. அதற்காக விண்கலத்தை நாம் திசை மாற்றினால், யுரேனஸ், நெப்டியூனுக்குப் போகமுடியாது. இத்தனைக் காரணங்களால்தான் இரண்டு வாயேஜர்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டன.
இதில் வாயேஜர் -1 ஐ முந்திக்கொண்டு 15 நாட்கள் முன்னதாகவே ஏவப்பட்டது வாயேஜர் 2. காரணம் இரண்டும் பயணிக்கும் பாதைகள் வெவ்வேறானது. வேகமான பாதையில் பயணித்ததால், 1977ல் ஏவப்பட்ட வாயேஜர் 1, 1979ல், வாயேஜர் 2-ஐ முந்திக்கொண்டு வியாழனை நெருங்கி ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து 1980-ல் சனியை நெருங்கி ஆய்வை முடித்துவிட்டு அதே ஆண்டில் டைட்டனை நோக்கித் திருப்பப்பட்டது. அந்தப் பணியையும் வெற்றிகரமாக நிறைவேற்றியது வாயேஜர் 1. டைட்டனின் அடர்த்தியான வளிமண்டலம் பற்றிய பல புதிய தகவல்கள் அப்போது கிடைத்தன. ஆனால், டைட்டனை நெருக்கமாகக் கடப்பதற்காக அதன் பாதை மாற்றப்பட்டதால், எதிர்பார்த்ததைப் போலவே யுரேனஸ் மற்றும் நெப்டியூன் நோக்கிச் செல்லும் வாய்ப்பை அது இழந்தது. மாறாக சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
மறுபுறம், வாயேஜர் 2 டைட்டனை நெருக்கமாகக் கடக்கவில்லை. அதனால், அது தனது பயணத்தைத் தொடர்ந்து 1986-ல் யுரேனஸையும், 1989-ல் நெப்டியூனையும் ஆய்வு செய்தது. மனித வரலாற்றில் இன்றுவரை அந்த இரண்டு கிரகங்களையும் நேரடியாகப் பார்வையிட்ட ஒரே விண்கலம் வாயேஜர் 2 மட்டுமே.
1980ல் டைட்டனைக் கடந்த வாயேஜர் 1, 2012ல் சூரியனின் தாக்க ஆதிக்கம் முடியும் ஹீலியோபாஸ் (Heliopause) எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கு இடையிலான வெளிக்குள் (Interstellar space) முதன்முறையாக நுழைந்தது. போலவே, வாயேஜர் 2, அதே நிலையை 2018ல் அடைந்தது. இரண்டின் திசைகளும் வெவ்வேறானதால், இந்த இடைவெளி! இரண்டுமே இப்போது சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டி விண்மீன்களுக்கு இடையேயான வெளியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் வாயேஜர் 1 மிக அதிக தொலைவை அதாவது ஓர் ஒளிநாளைக் கடந்திருக்கிறது. மனிதன் உருவாக்கிய ஒரு பொறி, முதன்முறையாக இத்தனைத் தொலைவைக் கடந்து பயணிக்கிறது என்பதே இதன் அளப்பறிய சாதனை. ஓர் ஒளிநாள் என்பது ஒளி, ஒரு நாளில் பயணிக்கும் தூரம். ஒளி ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிமீ பயணிக்கும். அந்த வகையில் ஒரு நாளில் சுமார் 25 பில்லியன் கிமீ பயணிக்கும். அந்தத் தொலைவைத்தான் வாயேஜர் 1 இப்போது கடந்திருக்கிறது. இதனால், இப்போது ஒரு செய்தியை வாயேஜருக்கு அனுப்பி, அது பெறப்பட்டது என்ற உறுதியைப் பெறவே 48 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.
இதன் இன்னொரு ஆச்சரியம், 1977-ல் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான். அப்போது பயன்படுத்தப்பட்ட கணினிகளின் திறன், இன்றைய ஒரு சாதாரண ஸ்மார்ட்போனை விட மிகவும் குறைவானது. அரை நூற்றாண்டைக் கடந்த பிறகும், அந்த விண்கலங்கள் பூமியுடன் தொடர்பில் இருக்கின்றன, தகவல்களை அனுப்புகின்றன. இது மனிதனின் திட்டமிடும் திறன், பொறியியல் அறிவு மற்றும் அறிவியல் ஆர்வத்தின் அபாரமான வெற்றியும் ஆகும்.
அதென்ன தொடக்கத்தில் சொல்லப்பட்ட தகவல் களஞ்சியம்? வாயேஜர் விண்கலங்களில் சில தகவல்கள் அடங்கிய போனோகிராப் தகடுகள் (Phonograph record) பொருத்தப்பட்டுள்ளன. தங்கமுலாம் பூசப்பட்ட இவைதான் தங்கத்தகடுகள் (Golden Record) எனப்படுகின்றன. இவை வேற்றுக்கிரகவாசிகளுக்காக அனுப்பப்பட்ட ’மனிதகுலத்தின் முதல் கடிதம்’ என வர்ணிக்கப்படுகின்றன. இவற்றில் 55 மொழிகளில் வாழ்த்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை அழும் சத்தம், மனிதர்களின் சிரிப்பு, இதயத் துடிப்பு, பறவைகளின் ஒலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கத்திய இசை, ஆப்பிரிக்க இசை, இந்திய இசை உள்ளிட்ட பல நாடுகளின் இசை வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மனித உடலமைப்புகள், ஆண், பெண் உருவங்கள், DNA அமைப்பு, விலங்குகள் உள்ளிட்ட சுமார் 115 படங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் அந்தத் தகட்டிலிருந்து எப்படிப் படித்தறிவது என்ற வழிமுறைகளோடு, ஒரு ஊசியும் (Stylus) வரைபட வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், யாராவது இதைக் கண்டுபிடிப்பார்கள் என்ற எந்த உறுதியும் இல்லை. உண்மையில், வாயேஜர் அடுத்த சில பத்தாயிரம் ஆண்டுகளில் கூட எந்த அறிவார்ந்த உயிரினத்தையும் சந்திக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே இந்தத் தங்கத்தகடுகளை ஓர் அறிவியல் திட்டம் என்பதைவிட ஒரு குறியீடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
"நாங்கள் இங்கே இருந்தோம். இதுதான் எங்கள் உலகம். இதுதான் எங்கள் இசை, இவைதான் எங்கள் மொழிகள்" என்ற மனிதகுலத்தின் தனிமையின் குரலை, இலக்கற்ற ஒரு காலப்பெட்டியில் வைத்து அனுப்பியிருக்கிறோம், அவ்வளவுதான்.